டொயோட்டா ஃபார்ச்சூனரை டார்க்கெட் செய்து களமிறக்கப்பட்டுள்ள புதிய எம்ஜி கார்! ஓட்டிப் பார்க்க எப்படி இருக்கு?
எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம், பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo) கண்காட்சியில் இந்திய சந்தைக்கான பல்வேறு புதிய கார்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. அவற்றுள், எம்ஜி சைபர்ஸ்டர் (Cyberster) என்கிற எலெக்ட்ரிக் கன்வெர்டிபிள் ஸ்போர்ட்ஸ் கார் மற்றும் எம்ஜி எம்9 (M9) என்கிற எலெக்ட்ரிக் எம்பிவி கார்கள் ஏற்கனவே சந்தைக்கு வந்துவிட்டன. ஆனால், ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்பார்க்கப்படும் எம்ஜி மெஜஸ்டர் (MG Majestor) எஸ்யூவி, தற்போது இறுதியாக களமிறங்க தயாராக உள்ளது.
முழு அளவிலான, பாடி-ஆன்-ஃப்ரேம் (body-on-frame) கட்டமைப்பு கொண்ட இந்த எஸ்யூவி, டி-பிரிவில் நீண்டகாலம் ஆதிக்கம் செலுத்தி வரும் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) காருக்கு போட்டியாக வருகிற ஏப்ரல் 27ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கிடையில், டெல்லி என்சிஆர் பகுதியில் நாங்கள் புதிய எம்ஜி மெஜஸ்டர் காரை ஓட்டிப் பார்த்தோம். அதன் மூலம் எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை இங்கே விரிவான ரிவியூ (Review) ஆக வழங்கியுள்ளோம்.

எம்ஜி மெஜஸ்டர் விமர்சனம் - வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் நடைமுறைத்தன்மை
எம்ஜி மெஜஸ்டரின் வடிவமைப்பு, சீனாவின் SAIC மோட்டாரின் மேக்ஸஸ் டி90 (Maxus D90) காரைப் போலவே நிமிர்ந்த நிலையில் பெரிய சக்கரங்கள் மற்றும் அகலமான பாடி கிளாடிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இருப்பினும், மெஜஸ்டருக்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்க எம்ஜி நிறுவனம் வடிவமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.
முன்பக்கத்தில் கிடைமட்ட மற்றும் செங்குத்தான எல்இடி டிஆர்எல்கள் (DRLs) 'மொசைக் மேட்ரிக்ஸ்' கிரில்லைச் சூழ்ந்துள்ளன. முகப்பு விளக்குகள் பம்பரில் உள்ள காற்றுத்துளை பகுதிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த காரின் டாப் வேரியண்ட்கள், அகலமான ஃபெண்டர்களுக்குள் 19 இன்ச் டூயல்-டோன் அலாய் சக்கரங்களுடன் கிடைக்கவுள்ளன. காரின் பின்பக்கத்தில், முழு அகல எல்இடி டெயில் லைட்டுகளில் பல எல்இடி பல்ப்கள் உள்ளன.

டெயில்கேட்டில் 'மோரிஸ் கேரேஜஸ்' மற்றும் 'மெஜஸ்டர்' பேட்ஜிங் இடம்பெற்றுள்ளது. பின்பக்க பம்பரின் கீழ்ப்பகுதியில் போலியான எக்ஸாஸ்ட் குழாய் முனைகள் மற்றும் ஸ்கிட் பிளேட் கொடுக்கப்பட்டுள்ளன. காரின் பக்கவாட்டில் படிக்கட்டுகள் ஸ்டாண்டர்டு அம்சமாக உள்ளன. மெட்டல் பிளாக், பர்ல் ஒயிட், கான்கிரீட் கிரே மற்றும் மெட்டல் ஆஷ் ஆகிய வண்ணங்களில் புதிய மெஜஸ்டர் கிடைக்கவுள்ளது.
மெஜஸ்டர் 2,950 மிமீ-இல் வீல்பேஸை (முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம்) கொண்டுள்ளது, இது எம்ஜி க்ளோஸ்டர் (Gloster) காருக்கு இணையானது. இதன் மூலம், காருக்குள் மூன்றாவது வரிசையில் விசாலமான இடவசதி கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் ஆறு இருக்கைகள் அல்லது 7 இருக்கைகள் உடன் இந்த காரை ஏப்ரல் 27 முதல் வாங்கலாம்.

ஆறு இருக்கைகள் லேஅவுட்டில் மத்திய வரிசையில் கேப்டன் இருக்கைகள் கிடைக்கும். அதுவே, ஏழு இருக்கைகள் லேஅவுட்டில் பெஞ்ச் இருக்கைகள் கிடைக்கும். டாஷ்போர்டில் 12.3-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது; இது எம்ஜி நிறுவனத்தின் ஐ-ஸ்மார்ட் 2.0 கனெக்டட் கார் மென்பொருளில் செயல்படுகிறது. இதனுடன், டிரைவருக்கான விபரங்களை வழங்க 12.3-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளேவும் இணைக்கப்பட்டுள்ளது.
12-ஸ்பீக்கர் ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம், 64-வண்ண கேபின் விளக்குகள், இரட்டை-பேன் கொண்ட பனோரமிக் சன்ரூஃப், இரட்டை வயர்லெஸ் சார்ஜிங் பேட்கள் மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவை இந்த காரின் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளன. எலெக்ட்ரிக் மூலம் கண்ட்ரோல் செய்யக்கூடிய முன் இருக்கைகளில் கூலிங் (குளிரூட்டும்) மற்றும் பல மசாஜ் மோட்கள் உள்ளன.

இந்த இருக்கைகள் பெரியதாகவும், நல்ல குஷின் வசதியுடனும் உள்ளன. இரண்டாவது வரிசையில் உள்ள கேப்டன் இருக்கைகள் மிகவும் வசதியானவை ஆக உள்ளன. உயரமானவர்களுக்கும் கூட போதுமான இடவசதி கிடைக்கிறது. இந்த அளவுள்ள பெரும்பாலான எஸ்யூவி கார்களை விட அதிக இடவசதியை இந்த காரில் மூன்றாவது வரிசையிலுள்ள இருக்கைகள் வழங்குகின்றன.
இருப்பினும், இந்தியர்களின் சராசரி உயரத்தை விட (6 அடி மற்றும் அதற்கு மேல்) உயரமானவர்கள் முதல் இரு இருக்கை வரிசைகளில் அமருவதையே விரும்புவார்கள். மூன்றாவது வரிசை இருக்கைகள் பயன்பாட்டில் இருக்கும்போது, பொருட்களை வைப்பதற்கான பின்பக்க பூட் ஸ்பேஸ் (Bootspace) ஆனது 343 லிட்டர் கொள்ளளவில் உள்ளது. அதுவே, மூன்றாவது வரிசை இருக்கைகளை மடக்கினால், இது சுமார் 1,350 லிட்டராக அதிகரிக்கும்.

மூன்று வரிசைகளிலும் கப் ஹோல்டர்கள், பாட்டில் ஹோல்டர்கள், பிரத்யேக பாக்கெட்டுகள் மற்றும் சார்ஜிங் அவுட்லெட்டுகள் போன்ற ஸ்டோரேஜ் & சார்ஜிங் வசதிகள் உள்ளன. 3-ஜோன் ஆட்டோமேட்டிக் ஏசி அமைப்பு ஆனது மூன்றாவது இருக்கை வரிசை பயணிகளுக்கான பிரத்யேக காற்று துளைகளுடன் க்ளைமேட் கண்ட்ரோலை நிர்வகிக்கிறது. தானாக மடங்கிக் கொள்ளும் பின்புறத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள் (ORVM) மற்றும் சைகை மூலம் திறக்கும் டெயில்கேட் வசதியும் மெஜஸ்டரின் உபகரண பட்டியலில் அடங்குகின்றன.
மெஜஸ்டரின் லெவல்-2 அடாஸ் (ADAS) தொகுப்பில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங், மோதலை முன்கூட்டியே கண்டறியும் வசதி, பயணத்தை துவங்குவதற்கு முன்பே காரில் இருக்கும் பழுதுகள் குறித்த எச்சரிக்கை, சாலையில் பாதையில் இருந்து கார் விலகுவதை தடுக்கும் வசதி மற்றும் பிளைண்ட்-ஸ்பாட் மானிடரிங் ஆகியவை அடங்கும்.

எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஏறுமுகமான இடத்தில் காரை நிறுத்துவதற்கான உதவி மற்றும் அத்தகைய இடத்தில் இருந்து காரை கீழே கொண்டுவருவதற்கான கண்ட்ரோல் ஆகியவை ஸ்டாண்டர்டு அம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன. மெஜஸ்டரில் உள்ள மற்ற பாதுகாப்பு அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள், குழந்தைகளுக்கான இருக்கையை பொருத்துவதற்கான ISOFIX ஆங்கர்கள் மற்றும் 360-டிகிரி கவரேஜ் உடன் கூடிய சரவுண்ட்-வியூ கேமரா சிஸ்டம் ஆகியவை அடங்குகின்றன. கூடுதலாக, மெஜஸ்டரில் பேடில் ஷிஃப்டர்களும் வழங்கப்பட்டுள்ளன.
எம்ஜி மெஜஸ்டர் விமர்சனம் - ஸ்பெக்ஸ் மற்றும் பரிமாணங்கள்
மெஜஸ்டரை 2 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு நான்கு சிலிண்டர் டீசல் என்ஜின் உடன் மட்டுமே இந்தியாவில் எம்ஜி நிறுவனம் விற்பனை செய்ய உள்ளது. இது அதிகப்பட்சமாக 215 எச்பி ஆற்றலையும், 478 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் எம்ஜி க்ளோஸ்டர் காரின் டாப் வேரியண்ட்களில் உள்ள அதே டீசல் என்ஜின் ஆகும்.

8-ஸ்பீடு டார்க்-கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இந்த காரின் அனைத்து டிரான்ஸ்மிஷன் பணிகளையும் கையாளுகிறது. மேலும், கியரை தாங்களாகவே மாற்ற விரும்பும் ஓட்டுநர்களுக்காக பேடில் ஷிஃப்டர்கள் உள்ளன. புதிய மெஜஸ்டரில் தேர்வு செய்யும் வேரியண்ட்டைப் பொறுத்து, பவர் பின்பக்க சக்கரங்களுக்கோ அல்லது நான்கு சக்கரங்களுக்கோ அனுப்பப்படுகிறது.
இந்த காரில் 4-வீல்-டிரைவ் (4WD) அமைப்பானது, எம்ஜியின் 'எம்-ஹப்' (M-Hub) டெரெய்ன் மேனேஜ்மென்ட் சாஃப்ட்வேர் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது, தேர்ந்தெடுக்கக்கூடிய 10 டெரெய்ன் மற்றும் டிரைவ் மோட்களை வழங்குகிறது. பிரத்யேக லோ-ஸ்பீடு டிரான்ஸ்ஃபர் கேஸ் மற்றும் மூன்று டிஃபரென்ஷியல் லாக்குகள் 'எம்-க்ரால்' செயல்பாட்டிற்கு உதவுகின்றன.

மெஜஸ்டர் 5,046 மிமீ நீளமும், 2,016 மிமீ அகலமும், 1,876 மிமீ உயரமும் கொண்டது. இதன் வீல்பேஸ் 2,950 மிமீ ஆகும். இது 19-இன்ச் அலாய் சக்கரங்களில் இயங்குகிறது, 219 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் (தரையில் இருந்து காரின் அடிப்பகுதி அமைந்துள்ள உயரம்)-ஐ கொண்டுள்ளது. மேலும் 810 மிமீ வரை ஆழம் கொண்ட நீரில் செல்லும் திறன் கொண்டது.
எம்ஜி மெஜஸ்டர் விமர்சனம் - ஓட்டும் அனுபவம்
இயக்கத்தின் போது, எம்ஜி மெஜஸ்டர் மிகவும் சீராக ஆற்றலை வழங்கியது. என்ஜின் சக்திவாய்ந்ததாக இருந்தாலும், சில விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. 2,000 ஆர்பிஎம்-க்கு குறைவான என்ஜின் வேகத்தில், த்ரோட்டில் ரெஸ்பான்ஸ் (Throttle Responce) மந்தமாக இருப்பதோடு, கியர்பாக்ஸ் சரியான கியர் விகிதத்தைத் தேர்ந்தெடுப்பதில் மெதுவாக செயல்படுகிறது.

அந்த வரம்பைத் தாண்டிய பிறகு, பூஸ்ட் விரைவாகக் கிடைத்து, எஸ்யூவி வேகமெடுக்கிறது. பேடில் ஷிஃப்டர்கள் கியர்களை மேனுவலாக மாற்ற அனுமதிக்கின்றன. இருப்பினும், என்ஜின் வேகமாக செயல்படும்போது, இந்த அமைப்பு ஆக்ரோஷமான கியர் குறைப்புகளை மறுக்கிறது. என்ஜின் 3,900 ஆர்பிஎம்-இல் ரெட்லைனை அடைந்து, அதன் தன்மையை நீண்ட தூர நெடுஞ்சாலைப் பயணங்களுக்கு ஏற்றதாக உறுதிப்படுத்துகிறது.
நெடுஞ்சாலைப் பயணம் தான் மெஜஸ்டருக்கு மிகவும் சௌகரியமானது. ஏழாவது மற்றும் எட்டாவது கியர்கள் மெதுவான வேகத்திலும் கிடைக்கும், மேலும் கியர் விகிதத்தை கணிசமாக குறைக்காமல், முந்திச் செல்ல போதுமான டார்க் திறன் கிடைக்கிறது. நிலையான நெடுஞ்சாலை வேகத்தில் கியர் மாற்றங்கள் சீராகவும், தடங்கல் இல்லாமலும் உள்ளன. மெஜஸ்டரில் நகரத்திலும், நெடுஞ்சாலை பயணங்களுன்போதும் என்ஜின், காற்று மற்றும் சாலையின் இரைச்சல்கள் நன்றாக கட்டுப்படுத்தப்படுகின்றன.

இந்த பாடி-ஆன்-ஃப்ரேம் எஸ்யூவி காருக்கு அதன் லேடர்-ஃப்ரேம் சேசிஸ் (ladder-frame chassis) ஒரு சீரான மற்றும் நிலையான இயக்கத்தை வழங்குகிறது. இருப்பினும், குறைவான வேகத்தில் இயங்கும்போது சில பெரிய அதிர்வுகளை உணர முடிந்தது. லேடர்-ஃப்ரேம் எஸ்யூவி கார்களில் இவ்வாறான அதிர்வுகள் ஏற்படுவது வழக்கமானதே. காரின் வேகம் அதிகரிக்கும் போது பயணம் கணிசமாக நிலைபெறுகிறது.
சஸ்பென்ஷன் சேதமடைந்த சாலைகளை கடுமையான அதிர்வுகளின்றி கையாள்கிறது. இது, நெடுஞ்சாலை பயணங்களிலும் தொடர்கிறது. ஒரு பெரிய, உயரமான எஸ்யூவி காரில் எதிர்பார்ப்பது போலவே வளைவுகளில் பாடி ரோல் (body roll) இந்த காரில் கவனிக்கத்தக்கக் கூடியதாக உள்ளது. ஆதலால், சாலையில் அதிக வேகத்தில் பாதையை மாற்றும்போது பின் இருக்கை பயணிகளின் வசதிக்காக டிரைவிங்கில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.

ஸ்டீயரிங் சக்கரம் இலகுவானதாகவும், நேரடியாக காரை கண்ட்ரோல் செய்யக்கூடியதாகவும் இருப்பதால், மெஜஸ்டரின் 5,046 மிமீ நீளத்தை எளிதாக கையாள முடிகிறது. குறிப்பாக, இது அதிக வேகத்தில் செல்லும்போது மிகவும் வசதியாக உள்ளது; அதாவது அந்த சமயத்தில் பதட்டமாகவோ அல்லது அதன் ரெஸ்பான்ஸில் தாமதங்களோ இல்லை. சாலைகளிலிருந்து விலகி, கரடுமுரடான பகுதிகளில் செல்லும் போதும் எம்ஜி மெஜஸ்டர் நன்றாக செயல்படுகிறது.
மெஜஸ்டரின் 4-சக்கர-டிரைவ் அமைப்பு, தளர்வான மற்றும் சமமற்ற நிலப்பரப்புகளை சிரமமின்றி கையாள்கிறது. 10-மோட்களில் எம்-ஹப் டெரெய்ன் மேனேஜ்மென்ட் சிஸ்டம் ஆனது பல்வேறு நிலப்பரப்புகளுக்கான மோட்களை வழங்குகிறது. பெரிய இறக்கங்கள், பள்ளங்கள் மற்றும் சமமற்ற தடைகள் இந்த காரில் திறம்பட நிர்வகிக்கப்படுகின்றன. எம்-க்ரால் செயல்பாட்டின் லோ-ஸ்பீடு டிரான்ஸ்ஃபர் கேஸ் மற்றும் மூன்று டிஃபரென்ஷியல் லாக்குகள் இதற்கு உதவுகின்றன.

எம்ஜி மெஜஸ்டர் விமர்சனம் - முடிவுரை
எம்ஜி மெஜஸ்டர் ஒரு பிரத்யேக தேவைக்காக தயாரிக்கப்பட்ட எஸ்யூவி கார் என்பதை நிரூபிக்கிறது. இது விசாலமான மூன்று-வரிசைகளில் இருக்கைகளை கொண்ட கேபினுடன் ஒரு திறமையான நெடுஞ்சாலை மற்றும் ஆஃப்-ரோடு எஸ்யூவி ஆகும். இந்த காரின் 2.0 லிட்டர் ட்வின்-டர்போ டீசல் என்ஜின் வலுவான மிட்-ரேஞ்ச் செயல்திறனை வழங்குகிறது.
அதே நேரத்தில் எம்-ஹப் டெரெய்ன் சிஸ்டம் மற்றும் எம்-க்ரால் செயல்பாடு உண்மையான ஆஃப்-ரோடு பயன்பாட்டை சேர்க்கின்றன. இருப்பினும், என்ஜினின் செயல்பாடு ஆரம்பத்தில் சற்று மந்தமாக உள்ளது. அதேபோல், குறைவான வேகத்தில் த்ரோட்டில் ரெஸ்பான்ஸ் மற்றும் கியர்பாக்ஸின் மந்தநிலை ஆகியவை குறிப்பிடத்தக்க குறைபாடுகளாகும், குறிப்பாக நகர பயன்பாட்டிற்கு. எஸ்யூவியின் 5,046 மிமீ நீளம் நகரத்தில் ஓட்டுவதற்கு பெரிய சவாலாகும்.
டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக வந்துள்ள இந்த பிரம்மாண்டமான எம்ஜி போட்டியாளருக்கு மக்கள் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்பதை காலம் தான் சொல்லும். குடும்பத்திற்காக ஒரு பெரிய 7-சீட்டர் எஸ்யூவி காரை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், எம்ஜி மெஜஸ்டரை உங்கள் விருப்பப் பட்டியலில் சேர்க்க நாங்கள் பரிந்துரைக்கிறோம்.


Click it and Unblock the Notifications
