வெறும் 10 இலட்ச ரூபாயில் எலக்ட்ரிக் காரா... ஓட்டி பார்த்த நாங்க மொத்தமா மயங்கிவிட்டோம்!!
எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் விண்ட்சர் இவி (Windsor EV) எலக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு சமீபத்தில் அறிமுகம் செய்தது. சமீப காலமாக எலக்ட்ரிக் கார்களில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் எம்ஜி நிறுவனம் இந்தியாவில் தனது 3வது எலக்ட்ரிக் காராக விண்ட்சர் இவி-ஐ அறிமுகம் செய்துள்ளது. பிரிட்டிஷ் கார் நிறுவனமான எம்ஜி மோட்டார் சீனாவை சேர்ந்த குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சமீபத்தில்தான் இந்தியாவின் பிரபலமான ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்தது. இந்த கூட்டணிக்கு பிறகு வெளிவந்துள்ள முதல் எம்ஜி கார் விண்ட்சர் இவி ஆகும்.
இந்த கூட்டணியின் வெளிப்பாடாக விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரில் பல்வேறு புதிய அம்சங்களை எம்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அவற்றுள் முக்கியமானது, இந்த எலக்ட்ரிக் காருக்கான பேட்டரியை வாடகை முறையில் (BaaS) பெறலாம் என்பதாகும். அதாவது, சார்ஜ் காலியாகினால் சுழற்சி முறையில் கட்டணத்துடன் பேட்டரியை மாற்றிக் கொள்ளலாம்.

இவ்வாறு BaaS முறையில் கிடைக்கும் எம்ஜி விண்ட்சர் இவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.99 லட்சமாகவும், பேட்டரி உடன் ரூ.13.50 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தம் புதிய எம்ஜி எலக்ட்ரிக் காரை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் எங்களுக்கு கிடைத்தது. அதன் மூலம் நாங்கள் பெற்ற அனுபவங்களை ரிவியூவாக இந்த தொகுப்பில் விரிவாக வழங்கியுள்ளோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
வெளிப்புற தோற்றம்: முதல் பார்வையில், புதிய விண்ட்சர் இவி ஆனது பார்ப்பதற்கு ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எம்ஜி கோமெட் இவி எலக்ட்ரிக் காரின் நீளமான வெர்சன் போன்று உள்ளது. கோமெட் இவி, பாக்ஸ் போன்று இருக்கும். விண்ட்சர் இவி, எம்பிவி கார் போன்று சற்று பெரிய தோற்றத்தை கொண்டுள்ளது அவ்வளவுதான். எம்பிவி கார் போன்று இருந்தாலும், விண்ட்சர் இவி காரினுள் 5 இருக்கைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

கோமெட் இவி எலக்ட்ரிக் காரில் வழங்கப்படுவதை போன்று இந்த காரின் முன்பக்கத்தில் லைட் பார் ஸ்டைலில் முழு அகலத்திற்கு எல்இடி டி.ஆர்.எல்-கள் வழங்கப்பட்டுள்ளன. எல்இடி ஹெட்லைட்கள் முன்பக்க பம்பரில் பொருத்தப்பட்டுள்ளன. ஹெட்லைட்கள் கருப்பு நிற பிளாஸ்டிக்கால் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. இந்த கருப்பு நிற பிளாஸ்ட்டிக்கின் மத்தியில் ஒளிரக்கூடிய எம்ஜி லோகோ வழங்கப்பட்டுள்ளது.
காரை சைடில் இருந்து பார்க்கும்போது தான் விண்ட்சர் இவி எந்த அளவிற்கு பெரிய எம்பிவி கார் என்பதை காண முடிகிறது. காரின் கண்ணாடி மேற்கூரை உடன் விண்ட் ஸ்க்ரீன் மிகவும் அருமையாக இணைக்கப்பட்டுள்ளது. காரின் சைடில் பில்லர்கள் மற்றும் டோர் ஹேண்டில்கள் கருப்பு நிறத்தில் உள்ளன. கார் இயக்கத்தில் இருக்கும்போது வெளிப்பக்க டோர் ஹேண்டில்கள் தானாக உள்நோக்கி இழுத்துக் கொள்கிறது. இது காரின் அதிக ரேஞ்சுக்கு வழிவகுக்கக்கூடியது ஆகும்.

18-இன்ச் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்களை கொண்ட இந்த எலக்ட்ரிக் காரின் சைடில் க்ரோம் ட்ரிம் காரின் பின்பக்கம் வரையில் செல்கிறது. உண்மையில், இந்த க்ரோம் ட்ரிம் தான் காருக்கு பளபளப்பான தோற்றத்தை வழங்குகிறது. காரை சார்ஜ் செய்வதற்கான பகுதியை காரின் இடதுபக்க வீல் ஆர்ச்சில் காண முடிகிறது. காரின் பின்பக்கத்திற்கு சென்றால், மேற்கூரையில் ஸ்பாய்லருடன், ரேடியோவிற்காக கண்ணாடி ஆண்டென்னா வழங்கப்பட்டுள்ளது.
காரின் சைடில் இருந்து செல்லும் க்ரோம் லைன் காரின் பின்பக்க விண்ட்ஸ்க்ரீன் உடன் நேர்த்தியாக இணைகிறது. எல்இடி டெயில்லைட்களுக்கு அருகே எம்ஜி பேட்ஜ் மற்றும் விண்ட்சர் இவி பேட்ஜ்களை பார்க்க முடிகிறது. பூட் கதவை திறந்தால், உள்ளே பொருட்களை வைப்பதற்கு 604 லிட்டர்கள் கொள்ளளவில் இடவசதி வழங்கப்பட்டுள்ளது.

உட்புற தோற்றம் & வசதிகள்: காருக்கு உள்ளே ஏறி அமர்ந்ததும் எங்களுக்கு லக்சரியான உணர்வு கிடைத்தது. காருக்கு உள்ளே நிறைய இடங்களில் மென்மையான-டச் பிளாஸ்டிக்ஸ் வழங்கப்பட்டுள்ளன. டேஸ்போர்டு, ஸ்டேரிங் சக்கரம், ஏசி வெண்ட்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் தங்க நிறத்தில் ஹைலைட்களை பார்க்க முடிகிறது. மேலும், டேஸ்போர்டு மற்றும் முன்பக்க ஆர்ம்ரெஸ்ட் பகுதிகளில் வுட் ஃபினிஷிங் கொடுக்கப்பட்டுள்ளது.
ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்க, டேஸ்போர்டில் 8.8-இன்ச்சில் செவ்வக வடிவில் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இதற்கு இடதுபக்கத்தில் பொழுதுப்போக்கிற்காக 15.6 இன்ச்சில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை ஏற்கக்கூடிய இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆனது இன்ஃபினிட்டி நிறுவனத்தின் 9-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஃபோடெயின்மெண்ட் திரையை நமது விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ள நிறைய தீம்கள் வழங்கப்பட்டுள்ளன. எம்ஜியின் ஐ-ஸ்மார்ட் சூட் மூலமாக 80க்கும் அதிகமான கனெக்ட்டட் கார் வசதிகளை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தில் பெறலாம். மேலும், ஜியோ நிறுவனத்தால் இயங்கும் எம்ஜி ஆப் ஸ்டோர் மூலமாக கேம்கள், மியுசிக் ஸ்ட்ரீமிங் மற்றும் ஒடிடி திரைப்படங்களை இன்ஃபோடெயின்மெண்ட் திரையில் கண்டுகளிக்க முடியும்.
மேலும், தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வாய்ஸ் கண்ட்ரோலை ஏற்கக்கூடியதாக இன்ஃபோடெயின்மெண்ட் திரை உள்ளது. காரின் முன் இருக்கைகள் வெண்டிலேட்டட் வசதியை கொண்டுள்ளன. அதேநேரம், டிரைவர் இருக்கை ஆனது 6 விதமாக பவர் அட்ஜெஸ் செய்யக்கூடியதாக உள்ளது. அதேபோல், பின் இருக்கைகள் அதிகப்பட்சமாக 135 டிகிரி வரையில் மடக்கக்கூடியவைகளாக உள்ளன.

டிரைவருக்கான ஆர்ம்ரெஸ்ட், டேஸ்போர்டின் கீழ்பகுதி மற்றும் டோர் கார்ட்களில் சிறு, சிறு பொருட்களை வைத்துக் கொள்வதற்கான ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், முன் மற்றும் பின் இருக்கைகளுக்கு மத்தியில் கப்களை வைத்துக் கொள்வதற்கான ஹோல்டர் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இவை எல்லாவற்றையும் விட விண்ட்சர் இவி காரின் கேபினுக்குள் நம்மை வசீகரிப்பது என்னவென்றால், அதன் பெரிய அளவிலான கண்ணாடி ரூஃப் ஆகும்.
ஏனெனில், இவ்வளவு பெரிய கண்ணாடி ரூஃப் ஆனது இந்தியாவில் வேறெந்த காரிலும் வழங்கப்படுவது இல்லை. விண்ட்சர் இவி காரினுள் மற்ற முக்கியமான வசதிகள் என்று பார்த்தால், லெதரேட் அப்ஹோல்ஸ்ட்ரி, வயர்லெஸ் போன் சார்ஜர், மல்டிபிள் சார்ஜிங் போர்ட்ஸ், எல்இடி ரீடிங் & லக்கேஜ் விளக்குகள், ரியர் ஏசி வெண்ட்ஸ், காற்று சுத்திகரிப்பு சிஸ்டம் மற்றும் 256 வெவ்வேறு விதமான கலர் ஆப்ஷன்களில் கேபினுக்குள் லைட்டிங் செட்-அப் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

பயணிகளின் பாதுகாப்புக்கு எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டெசண்ட் கண்ட்ரோல், எல்இடி கார்னரிங் மற்றும் ரியர் ஃபாக் விளக்குகள், டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
பரிமாண அளவுகள் & பவர்டிரெயின்: புதிய எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரின் நீளம் 4,295மிமீ, அகலம் 1,850மிமீ, உயரம் 1,677மிமீ மற்றும் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 2,700மிமீ ஆகும். தரையில் இருந்து இந்த எலக்ட்ரிக் காரின் அடிப்பகுதி ஆனது 186மிமீ உயரத்தில் உள்ளது. விண்ட்சர் இவி காரில் ஒரேயொரு PMSM மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.

அதிகப்பட்சமாக 134 பிஎச்பி மற்றும் 200 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த எலக்ட்ரிக் மோட்டார் ஆற்றலை காரின் முன் சக்கரங்களுக்கு வழங்குகிறது. இந்த எலக்ட்ரிக் மோட்டாரை இயங்க வைப்பதற்கு 38kWh லித்தியம்-இரும்பு பேட்டரி பேக் உள்ளது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 331கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என எம்ஜி தெரிவிக்கிறது.
இந்த அளவிற்கு இல்லையென்றாலும், நிஜ உலகில் 250கிமீ தொலைவிற்காவது பயணிக்க முடியும். விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார் 45 கிலோவாட்ஸ் ஃபாஸ்ட் டிசி சார்ஜிங்கை ஏற்கக்கூடியது. இதன் மூலமாக 0-இல் இருந்து 80% சார்ஜை வெறும் 55 நிமிடங்களில் நிரப்பிவிட முடியும். இவை இல்லாமல், 3.3 கிலோவாட்ஸ் மற்றும் 7.4 கிலோவாட்ஸ் சார்ஜர்களையும் இந்த எலக்ட்ரிக் கார் ஏற்கக்கூடியது.

இதில், 3.3 கிலோவாட்ஸ் சார்ஜரின் மூலமாக பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்ப 13.8 மணிநேரமும், 7.4 கிலோவாட்ஸ் சார்ஜரில் 6.5 மணிநேரமும் தேவைப்படும். விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரில் வழங்கப்படும் பேட்டரிக்கு முழு ஆயுட்கால உத்தரவாதம் வழங்கப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே கூறியதுபோல், இந்த காருக்கான பேட்டரி ஆனது வாடகை முறையில் வழங்கப்பட உள்ளது. பேட்டரியில் ஒவ்வொரு கிமீ பயணத்திற்கும் ரூ.3.5 கட்டணமாக வசூலிக்கப்படும் என எம்ஜி தெரிவித்துள்ளது.
டிரைவிங் இம்பிரஷன்ஸ்: நீண்ட தொலைவு பயணங்களுக்கும் எம்ஜி விண்ட்சர் இவி மிகவும் ஏற்ற கார் என்பதை உறுதியாக சொல்கிறோம். ஏனெனில், முன் இருக்கை பயணிகளுக்கு மட்டுமின்றி, பின் இருக்கை பயணிகளுக்கும் நன்கு விசாலமான இடவசதியை இந்த எலக்ட்ரிக் கார் வழங்குகிறது. ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் என மொத்தம் 3 விதமான டிரைவிங் மோட்கள் இந்த காரில் கிடைக்கின்றன.

இருப்பினும், ஈக்கோ மோடில் இருந்து ஸ்போர்ட் மோடுக்கு சென்றாலும் காரின் பெர்ஃபார்மன்ஸ் லெவல் சற்றே அதிகரிக்கிறது. ஆனால், ஒவ்வொரு டிரைவிங் மோடிற்கும் மாற, மாற ஸ்டேரிங் சக்கரம் அதற்கேற்ப வலுவானதாக மாறுவதை உணர முடிகிறது. ஒரேயொரு எலக்ட்ரிக் மோட்டார், அதுவும் காரின் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்புறத்திலும் பிரச்சனை இல்லா பயணத்தை எங்களால் மேற்கொள்ள முடிந்தது.
நகர்புறங்களில் ஓட்டுவதற்கு ஈக்கோ டிரைவிங் மோட் சிறந்ததாக இருக்கும். ஏனெனில், இந்த மோடில் ஸ்டேரிங் சக்கரம் குறைந்த எடை உடன் விரைவாக ரெஸ்பான்ஸை வழங்குகிறது. சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் மெக்பெர்சன் ஸ்ட்ரட்டும், பின்பக்கத்தில் டோர்சன் பீமும் உள்ளன. இந்த சஸ்பென்ஷன் செட்-அப்கள் மற்றும் காரின் அதிகமான எடை உள்ளிட்டவை டிரைவிங் கண்ட்ரோலை எளிதாக்குகின்றன.

மேலும், பள்ளம், மேடுகளில் ஆக்ரோஷமாக செயல்படாமல், கார் மென்மையாக சறுக்கியப்படி செல்கிறது. ஆனால், வளைவுகளில் வேகமாக திருப்பும்போது, காருக்குள் குலுக்கப்படுவதை தவிர்க்க முடியவில்லை. சக்கரங்களில் உள்ள டிஸ்க் பிரேக்குகள் போதுமான ஸ்டாப்பிங் பவரை தருகின்றன. ஸ்டாக் டயர்களுக்கு பதிலாக டாப்-லெவல் டயர்களை காரில் பொருத்தினால் பிரேக் சிஸ்டம்ஸ் இன்னும் சிறப்பாக செயல்படும் என்பது எங்களது கருத்து.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பிரபலமான ஜே.எஸ்.டபிள்யூ உடன் கூட்டணி சேர்ந்த பிறகு எம்ஜி அறிமுகம் செய்துள்ள விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார் நிறைய விஷயங்களில் எங்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக, பின் இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்யும்போது மிகவும் சவுகரியமான பயணம் கிடைத்தது. இதனால், குடும்பமாக 5- 6 நபர்கள் அமர்ந்து பயணம் செய்வதற்கு ஏற்ற காராக விண்ட்சர் இவி-ஐ சொல்லலாம்.

அதேபோல், இந்த எலக்ட்ரிக் காரின் ரேஞ்சும் எங்களை ஆச்சிரியத்திற்கு உள்ளாக்கியது. ரூ.9.99 லட்சம் என்பது மிகவும் கவர்ச்சிக்கரமான விலையாகும். இருப்பினும், பேட்டரியை வாடகைக்கு பெற்று இந்த காரை பயன்படுத்துவதற்கு எத்தனை பேர் தயாராக உள்ளனர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 3 வருடங்களில் சுமார் 60% எரிபொருள் செலவை இந்த காரில் மிச்சப்படுத்தலாம் என எம்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளதை மறந்துவிட வேண்டாம்.
அதேநேரம், மற்ற எலக்ட்ரிக் கார்களை போன்று எம்ஜி விண்ட்சர் இவி-ஐ பேட்டரி உடன் வாங்கி பயன்படுத்துவதற்கும் நாங்கள் தாராளமாக பரிந்துரைக்கிறோம். ஏனெனில், ரூ.13.49 லட்சம் என்பதும் மற்ற எலக்ட்ரிக் கார்களுடன் ஒப்பிடுகையில் ஏற்கக்கூடிய விலையே ஆகும். ரூ.15.50 லட்சம் வரையில் எக்ஸ்-ஷோரூம் விலைகளை கொண்டுள்ள விண்ட்சர் இவி ஆனது முதல்முறையாக எலக்ட்ரிக் காரை வாங்குபவர்களுக்கும் ஏற்ற கார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


Click it and Unblock the Notifications









