33 கிமீ மைலேஜ் தரும் இந்த மாருதி காருக்குள்ள நுழைஞ்சீங்க திரும்பி இறங்க மனசே வராது.. ரைடு ரிவியூ விபரம்!
இந்தியர்களின் எதிர்பார்ப்பில் மிகப் பெரிய இடத்தைப் பிடித்திருந்த கார் மாடல்களில் புதிய தலைமுறை டிசையர் (New Gen Dzire)-ம் ஒன்றாகும். இந்த காரையே மாருதி சுஸுகி (Maruti Suzuki) அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்தியாவில் நிலவி வந்த செடான் கார் தாகத்தை தீர்க்கும் பொருட்டு 2008 ஆம் ஆண்டில் மாருதி சுஸுகியால் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட ஓர் சப்-4 மீட்டர் செடான் (Sub-4 metre sedan) கார் மாடலே டிசையர் ஆகும். ஸ்விஃப்ட் (Swift) கார் மாடலை தழுவி உருவாக்கப்பட்ட கார் மாடல் இது என்பது கவனிக்கத்தகுந்தது.
இது விற்பனைக்கு வந்து 16 ஆண்டுகளுக்கும் அதிகமாக ஆகிவிட்டன. அத்துடன், நாட்டின் பெஸ்ட் செல்லிங் செடான் ரக காராகவும் அது காட்சியளிக்கின்றது. இந்த நிலையிலேயே நான்காவது தலைமுறை டிசையர் கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது மாருதி சுஸுகி டிசையர். ரூ. 6.79 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கும்.

இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த காரையே சமீபத்தில் ஓட்டி பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அப்போது புதிய தலைமுறை டிசையர் குறித்து நாங்கள் அறிந்துக் கொண்ட சில முக்கிய விபரங்களையே இந்த காரில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
புதிய மாருதி சுஸுகி டிசையர் கார் மாடலின் வெளிப்புற லுக் எப்படி இருக்கு? மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய விபரத்தையும் பார்க்கலாம்: டிசையர் என்றாலே அது ஸ்விஃப்ட் காரை பிரதிபலிக்க தவறாது. இவர்கள் சகோதரர்கள் என்பதாலேயே மாருதி சுஸுகி-யும் இதன் ரகத்தை மாற்றினாலும், லுக்கை மாற்றவில்லை.

ஆனால், புதிய 2024 டிசையர் அப்படி இருக்காது. ஸ்விஃப்ட் கார் மாடலுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாததைப் போல உள்ளது. ஆகையால், ஸ்விஃப்ட் கார் மாடலின் சகோதர கார் மாடல் என்கிற பெயரை டிசையர் தற்போது இழந்திருக்கின்றது. சதுரமான லுக் இந்த காருக்கு தற்போது வழங்கப்பட்டு இருக்கின்றது.
எனவே ஹோண்டா அமேஸ் கார் மாடலை போல அது காட்சியளிக்கின்றது. கட்டுமஸ்தான பாக்ஸி தோற்றம் இதற்கு வலு சேர்க்கும் விதமாக உள்ளது. அதேவேளையில், சில தனித்துவமான மற்றும் அட்டகாசமான அம்சங்களையும் இந்த கார் மாடலில் தற்போது புதிதாக மாருதி சுஸுகி சேர்த்திருக்கின்றது.

அந்தவகையில், இதன் முன் பக்கத்திற்கு லேசாக ஆடி காரை பிரதிபலிக்கும் தோற்றம் வழங்கப்பட்டு இருக்கின்றது. 2010இல் விற்பனையில் இருந்த ஆடி காரை பிரதிபலிக்கும் லுக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் ஹெட்லைட் செட்-அப்பே இந்த லுக்கை புதிய டிசையர்-க்கு வழங்குகின்றது. இது ஓர் எல்இடி ரக ஹெட்லைட் ஆகும்.
இரண்டு ஹெட்லைட்டிற்கும் இடையில் ஹெக்ஸோகனல் கிரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த கிரில்-லும், ஹெட்லைட்டும்தான் புதிய டிசையருக்கு அழகிய தோற்றத்தை வழங்கக் கூடியதாக உள்ளது. குறிப்பாக, இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் கிரில்-இன் மேல் பகுதிக்கு பியானோ பிளாக் நிறம் வழங்கப்பட்டு இருப்பது அசத்தலான வேலைப்பாடு ஆகும்.

இதுதவிர, இடையில் குரோம் ஸ்ட்ரிப் ஒன்றும் இந்த காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இந்த துண்டின் மையப்பகுதியிலேயே 'எஸ்' எனும் மாருதி சுஸுகியின் பேட்ஜ் இடம் பெற்றிருக்கின்றது. இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் ஹெட்லைட் மட்டுமே எல்இடி ரகம் அல்ல. டிஆர்எல் லைட்டும் எல்இடி வகையே ஆகும்.
அதேவேளையில், இன்டிகேட்டர்களுக்காக ஹாலோஜன் பல்ப்புகளே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த லைட் செட்-அப்பே டிசையர் காரின் வெளிப்பக்கத்திற்கு பிரீமியம் லுக்கை வழங்க போதுமானதாக உள்ளது. ஆனால், அதோடு மாருதி சுஸுகி நிறுத்திக் கொள்ளவில்லை. இந்த காரின் பக்கவாட்டு மற்றும் பின்பக்கங்களையும் மிகுந்த அழகானதாக மாற்றி இருக்கின்றது.
அந்தவகையில், இதன் பக்கவாட்டு பகுதியை அழகுப்படுத்தும் விதமாக 15 அங்குல அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதேபோல், பின் பக்கத்தை அழகுப்படுத்தும் விதமாக 'ஒய்' வடிவ ஸ்டாப், குரோம் பட்டை, எஸ் எனும் பேட்ஜ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த லைட்டுகள் எல்இடி வகை ஆகும்.
தொடர்ந்து காரின் பின் பக்க மேற்கூரையில் சுறாவின் துடுப்பு போன்ற அமைப்புடைய ஆன்டென்னா போன்ற அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த காரின் வெளிப்பக்கத்தை மட்டுமல்ல, அதன் உள்பக்கத்தையும் மிகவும் அழகானதாகவும், அதிகம் பிரீமியம் அம்சங்கள் நிறைந்ததாகவும் மாருதி சுஸுகி தயார் செய்திருக்கின்றது.
அந்தவகையில், பயணிகளின் மனதைக் கவர்வதற்காக இரட்டை நிறங்களால் இதன் உள்பக்கத்தை மாருதி சுஸுகி அலங்கரித்திருக்கின்றது. காரின் மேல்பக்கம், டேஷ்போர்டு மற்றும் இருக்கைகள் ஆகியவற்றிற்கு பீஜ் நிறமும், கதவு மற்றும் அடிப்பக்கம் உள்ளிட்டவற்றிற்கு கருப்பு நிறமுமே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஸ்விஃப்ட் காரில் இந்த வசதியை பார்க்க முடியாது.
மேலும், இதன் டேஷ்போர்டிலிலும் பல்வேறு சிறப்பம்சங்களைக் காண முடிகின்றது. அந்தவகையில், ஃபாக்ஸ் மர பேனல், அலுமினிய அணிகலன்கள் உள்ளிட்டவற்றையே பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க இன்னும் மிக முக்கியமான அட்வான்ஸ்டு கருவிகள் சிலவற்றையும் புதிய தலைமுறை டிசையர் தாங்கி இருக்கின்றது.
அந்தவகையில், வயர் இணைப்பு தேவைப்படாத ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதிக் கொண்ட 9 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், ஆர்கேமிஸ் சவுண்டு சிஸ்டமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
மேலும், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, சுஸுகி கார் இணைப்பு அம்சம் போன்ற வசதிகளையும் இந்த காரில் பார்க்க முடிகின்றது. இத்துடன், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், பின் பக்கத்திற்கான பிரத்யேக ஏசி துவாரங்கள், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்டுகள், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதில், எலெக்ட்ரிக் சன்ரூஃப் அம்சத்தை வேறு எந்த சப்-4 மீட்டர் செடான் காரில் பார்க்க முடியாது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த காரில் மொத்தமாக டிரைவருடன் சேர்த்து ஐந்து பேர் அமர்ந்து பயணிக்க முடியும். பின்னால் மூன்று பேரும், முன்னாள் இருவரும் என்றே அமர்ந்து பயணிக்க முடியும்.
அதேவேளையில், மிக மிக பருமானான உருவம் கொண்டவராக இருந்தால் பின்னால் இருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்க முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. தொடர்ந்து, அதிக வயதுக் கொண்ட பயணிகளின் சௌகரியமாக அமர்ந்து பயணிப்பதற்கு ஏதுவாக போதுமான லெக்ரூம், ஹெட்ரூம் உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதேபோல், மிகவும் உயரமான நபர்கள் கொஞ்சம் சிரமம் சந்திக்க நேரிடலாம். 382 லிட்டர் பூட் ஸ்பேஸ்ஸே இந்த காரின் பின் பக்கத்தில் வழங்கி இருக்கின்றனர். ஆகையால், ஒரு வார டிராவலுக்கான தேவையான லக்கேஜை மிக தாராளமாக இந்த காரில் எடுத்துச் செல்ல முடியும். தொடர்ந்து, பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் விதமாக மாருதி சுஸுகி பாதுகாப்பு கருவிகளையும் இந்த காரில் வாரி வழங்கி இருக்கின்றது.
அந்தவகையில், ஆறு ஏர் பேக்குகள், இஎஸ்பி, ஹில் ஹோர்டு அசிஸ்ட், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், பிரேக் அசிஸ்ட், மும்முனை சீட் பெல்ட் மற்றும் சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை நங்கூரம் உள்ளிட்டவையே வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுமாதரியான அம்சங்களை தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே இந்த கார் தற்போது பாதுகாப்பு விஷயத்தில் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்களைப் பெற்று குவித்திருக்கின்றது.
புதிய மாருதி சுஸுகி டிசையர் கார் மாடலின் அளவு மற்றும் எஞ்சின் பற்றிய விபரங்கள்: பயணிகளுக்கு போதுமான இட வசதியை வழங்கும் பொருட்டு டிசையரை 3,995 மிமீ நீளம் கொண்டதாகவும், 1,735 மிமீ அகலம் கொண்டதாகவும், 1,525 மிமீ உயரம் கொண்டதாகவும் மாருதி சுஸுகி தயார் செய்திருக்கின்றது.
இது பழைய தலைமுறை டிசையரைக் காட்டிலும் 10 மிமீ அதிகம் உயரம் ஆகும். இதேபோல், இந்த காரை 2,450 மிமீ நீளம் லாங்கான வீல் பேஸ்ஸைக் கொண்டதாகவும் மாருதி சுஸுகி தயார் செய்திருக்கின்றது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 163 மிமீ ஆகும்.
15 அங்குல வீல்களுடன் 185 செக்சன் டயர்களே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. புதிய மாருதி சுஸுகி டிசையர் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரண்டிலும் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த இரண்டு வெர்ஷனிலும் புதிய இசட்12இ வகை மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
எஞ்சின் ஒன்றாக இருந்தாலும் பெட்ரோலில் இயங்கும் வேறு மாதிரியான திறன் வெளிப்பாட்டையும், சிஎன்ஜியில் இயங்கும்போது வேறுமாதிரியான திறன் வெளிப்பாட்டையும் அது வெளிப்படுத்தும். அந்தவகையில், பெட்ரோலில் இயங்கும் பொழுது 80.46 பிஎச்பி மற்றும் 111.7 என்எம் டார்க் ஆற்றலையே புதிய டிசையர் வெளிப்படுத்தும்.
அதேவேளையில், சிஎன்ஜியில் இயங்கும்போது சற்றே குறைவாக 68.8 பிஎச்பி மற்றும் 101.8 என்எம் டார்க் ஆற்றலை மட்டுமே அது வெளியேற்றும். அதேநேரத்தில், சிஎன்ஜியில் இயங்கும்போது ஒரு கிலோவிற்கே 33.73 கிமீட்டருக்கும் அதிகமான மைலேஜை வழங்கும் என அராய் சான்றளித்திருக்கின்றது. ஆனால், பெட்ரோலில் இயங்கும்போது 24.79 கிமீ முதல் 25.71 கிமீ வரையில் மட்டுமே மைலேஜை வழங்குமாம். கியர்பாக்ஸை பொருத்து இதன் மைலேஜ் திறன் மாறுபடும்.
புதிய டிசையர் ஓட்டி பார்க்க எப்படி இருந்தது? புதிய ஸ்விஃப்ட் காரை போலவே புதிய டிசையர் கார் மாடலும் லேசாக திறன் வெளிப்பாட்டை இழந்திருக்கின்றது. இதற்கு புதிய இசட்12இ மோட்டாரே காரணம் ஆகும். ஒரு சிலிண்டரை இந்த எஞ்சின் இழந்திருப்பதனால் அதன் திறன் வெளிப்பாடும் குறைந்திருக்கின்றது.
8 பிஎச்பி மற்றும் 1.5 என்எம் டார்க் குறைந்திருக்கின்றது. அதிகம் மைலேஜ் மற்றும் குறைவான மாசை வெளிப்படுத்தும் நோக்கிலேயே இந்த மாற்றத்தை மாருதி சுஸுகி செய்திருக்கின்றது. அதேநேரத்தில் எஞ்சின் செயல்திறன் மற்றும் பதிலளிக்கும் தன்மை சிறப்பாக உள்ளது. ஆகையால், பழைய வெர்ஷன்களில் கிடைத்த சுவாரஷ்யமான ரைடு அனுபவம் இதிலும் கிடைக்கும் என தெரிகின்றது.
அதேநேரத்தில் ஏஎம்டி கியர்பாக்ஸின் செயல்திறன் சற்றே பின் தங்கியதாக உள்ளது. கியரை மாற்றும்போது இது இன்னும் சிறப்பானதாக இருந்திருக்கலாம் என்கிற சிந்தனையையே எங்களுக்கு தோன்ற செய்தது. பேடில் ஷிஃப்டர் (Paddle Shifters) அல்லது மேனுவல் வேரியண்ட் கன்ட்ரோல் இரண்டில் ஏதாவது ஒன்று இன்னும் கொஞ்சம் மெருகேற்றப்பட்டு இருக்கலாம்.
இதன் ஸ்டியரிங் வீல் லேசானதாக உள்ளது. ஆகையால், திசையை மாற்றுவது சுலபமாக உள்ளது. இதேபோல், இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் சஸ்பென்ஷன் செட்-அப்பும் சிறப்பானதாக உள்ளது. ஆகையால், ரைடு சுவராஷ்யமானதாக மட்டுமல்ல சௌகரியமானதாகவும் இருக்கும். மேலும், உடல் ரோலாகுவதும் இந்த காரில் சற்று குறைவாகவே ஏற்பட்டது. எனவே, சிறந்த கார் மாடலாகவே புதிய டிசையர் இந்தியாவில் வந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய மாருதி சுஸுகி டிசையர் பெரும்பாலான விஷயத்தில் மிக சிறந்த கார் மாடலாக உருவாகி இருக்கின்றது. உதாரணமாக வெளிப்புறம் மற்றும் உட்புற தோற்றம் மிகவும் அழகானதாகக் காட்சியளிக்கின்றது. அத்துடன், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா மற்றும் சன்ரூஃப் போன்ற அம்சங்களைப் பெற்றிருப்பது.
மிக முக்கியமாக பாதுகாப்பு விஷயத்தில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றிருப்பது என அனைத்திலும் ஆக சிறந்த வாகனமாகவே 2024 டிசையர் தயாராகி இருக்கின்றது. அத்துடன் அதிக மைலேஜையும் வழங்கக் கூடியதாகவும் இந்த கார் மாடல் காட்சியளிக்கின்றது. எனவே விற்பனையில் மாபெரும் சாதனையை இந்த கார் மாடல் படைக்கும் என்கிற எதிர்பார்ப்பை இந்த கார் அனைவரின் மனதினிலும் விதைக்கச் செய்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









