புதிய ஹோண்டா சிட்டி குறித்த சிறப்பு தகவல்கள்
இந்திய மார்க்கெட்டில் ஹோண்டாவிற்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்ததில் சிட்டி காருக்கு பெரும் பங்கு உண்டு. இந்நிலையில், போட்டியாளர்களால் ஒடுக்கப்பட்ட சிட்டி காரின் மார்க்கெட்டுக்கு புத்துயிர் கொடுக்கும் விதத்தில் பல்வேறு கூடுதல் அம்சங்களுடன் கூடிய புத்தம் புதிய சிட்டி கார் மாடலை வரும் 7ந் தேதி விற்பனைக்கு கொண்டு வருகிறது ஹோண்டா.
இரு மாதங்களுக்கு முன் பழைய சிட்டி காரின் விற்பனை நிறுத்திவிட்ட நிலையில், புதிய மாடலுக்காக வாடிக்கையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். முதல்முறையாக டீசல் எஞ்சின், லிட்டருக்கு 26 கிமீ மைலேஜ் போன்றவை வாடிக்கையாளர்களின் பல்சை எகிற வைத்துள்ளது. இந்த நிலையில், புதிய சிட்டி காரை வாங்குவதற்கு ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்காக புதிய ஹோண்டா சிட்டி கார் குறித்த சில கூடுதல் சிறப்புத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

புதிய தலைமுறை
கடந்த 1996ம் ஆண்டில் புதிய ஹோண்டா சிட்டி அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2002ல் இரண்டாம் தலைமுறை மாடலும், 2008ல் மூன்றாம் தலைமுறை மாடலும் வந்தன. தற்போது 2014ம் ஆண்டு மாடலாக விற்பனைக்கு வரும் புதிய சிட்டி கார் நான்காம் தலைமுறை மாடல். இது புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது.

டிசைன்
ஒட்டுமொத்த வடிவமைப்பில் 2ம் மற்றும் 3ம் தலைமுறை மாடல்களின் டிசைனை பல இடங்களில் தக்க வைத்துள்ளது. முகப்பு கிரில், பின்புறம் போன்றவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முந்தைய மாடலில் இருக்கும் அதே அளவு கொண்ட வீல்கள் மற்றும் டயர்கள்தான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இன்டிரியர்
வெளிப்புறத்தில் பழைய சிட்டி கார்களை ஆங்காங்கே நினைவூட்டினாலும், உட்புறத்தில் முற்றிலும் புதுமைகளை சுமந்து வருகிறது. டேஷ்போர்டு, டச்ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், உட்புறத்தில் கூடுதல் தரம் போன்றவை புதிய சிட்டி காருக்கு வலு சேர்க்கும் அம்சங்கள்.

வசதிகள்
புதிய சிட்டி காருக்கு நேர் எதிரியான ஹூண்டாய் வெர்னாவில் இருக்கும் வசதிகளை மனதில் கொண்டு புதிய சிட்டி காரில் சில கூடுதல் வசதிகளை ஹோண்டா சேர்த்துள்ளது. ஆர்ம் ரெஸ்ட், ரியர் ஏசி வென்ட்டுகள், கதவுகளில் பாட்டில் ஹோல்டர்கள் போன்ற பயணிகளுக்கு கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. புளுடூத் வசதி கொண்ட டச் ஸ்கிரீன் ஆடியோ சிஸ்டம், அதிக தகவல்களை தரும் புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், புஷ் பட்டன் ஸ்டார்ட் ஆகிய வசதிகள் உள்ளன. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிரைவர் மற்றும் முன்புற பயணிக்கான ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளது.

இடவசதி
இதுவரை விற்பனையில் இருந்த மூன்றாம் தலைமுறை சிட்டி கார் அதன் ரகத்திலேயே அதிக இடவசதி கொண்டது. புதிய சிட்டி காரின் வீல் பேஸ் 50 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், புதிய சிட்டி காரின் இடவசதி இன்னமும் மேம்பட்டுள்ளது. கால் வைப்பதற்கான லெக்ரூம் இடவசதி, ஹெட்ரூம் என அனைத்திலும் மிகச் சிறப்பானதாகவே வருகிறது புதிய சிட்டி.

எஞ்சின்
புதிய சிட்டி காரில் 100 பிஎஸ் பவரை அளிக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில், டீசல் கார் லிட்டருக்கு 26 கிமீ மைலேஜ் தரும் என அராய் அமைப்பு சான்றளித்துள்ளது.

கியர் பாக்ஸ்
புதிய சிட்டி கார் இரண்டு விதமான கியர் பாக்ஸ் கொண்ட மாடல்களில் விற்பனைக்கு வருகிறது. டீசல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும். அதேநேரத்தில் பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட இரு மாடல்களில் கிடைக்கும். புதிய சிட்டி காரின் கிளட்சும் நகர்ப்புறத்தில் எளிதாக ஓட்டுவதற்கு துணைபுரியும் வகையில் இருக்கிறது.

வேரியண்ட்டுகள்
வசதிகளை பொறுத்து பெட்ரோல் மற்றும் டீசலில் E, S, மற்றும் V என தலா 3 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வருகிறது. பேஸ் வேரியண்ட்டில் சன் ரூஃப் இருக்காது. டாப் வேரியண்ட்டில் மட்டுமே ஆட்டோமேட்டிக் மாடல் கிடைக்கும்.

விலை
சிறந்த இடவசதி, நிறைவான வசதிகள், தரமான பாகங்கள் என அனைத்திலும் நவீனத்துவம் பெற்றிருக்கும் புதிய சிட்டி கார் சரிந்த தனது மார்க்கெட்டை நிச்சயம் மீட்டெடுக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. முந்தைய மாடலைவிட ரூ.50,000 கூடுதலான விலையில் புதிய சிட்டி கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் மாடலைவிட டீசல் மாடல் ஒரு லட்ச ரூபாய் கூடுதலான விலை கொண்டதாக இருக்கும்.

டெலிவிரி
புதிய சிட்டி காருக்கு ரூ.50,000 வரை முன்பணம் பெற்றுக் கொண்டு முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த மாத இறுதியிலிருந்தோ அல்லது அடுத்த மாத துவக்கத்திலிருந்து டெலிவிரி கொடுக்கப்படும் என டீலர்கள் தெரிவிக்கின்றன. புதிய சிட்டி கார் மீது அதிக எதிர்பார்ப்பு இருப்பதால், முன்பதிவும், காத்திருப்பு காலமும் வெகுவாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே, சிட்டி காரை வாங்க விரும்புவர்கள் உடனடியாக முன்பதிவு செய்து கொண்டால் நல்லது.


Click it and Unblock the Notifications








