சைஸில் 4 மீட்டர் கூட இல்ல... ஓட்டுவதற்கு அவ்வளவு ஜாலியா இருக்கு! காரை விட்டு கீழே இறங்க மனசே வரல!
2025ஆம் ஆண்டிற்கான 'மினி கூப்பர் கன்வெர்டபிள்' (Mini Cooper Convertible) கார் இந்தியாவில் மிக விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கவர்ச்சிகரமான தோற்றம், அதிநவீன தொழில்நுட்பம் ஆகியவற்றுடன், திறந்த மேற்கூரையுடன் கூடிய தோற்றத்தில் ஒரு அற்புதமான டிரைவிங் அனுபவத்தை இந்த கார் வழங்குகிறது. இந்த புதிய மாடல், பாரம்பரிய வடிவமைப்பை அப்படியே வைத்துக்கொண்டு, நவீன வசதிகளை உள்ளடக்கியுள்ளது.
குறிப்பாக, வேடிக்கையான மற்றும் சுறுசுறுப்பான வாகனத்தை விரும்பும் வாடிக்கையாளர்களை இது குறி வைக்கிறது. 2025 மினி கூப்பர் கன்வெர்டபிள் காரை நாங்கள் ஓட்டிப் பார்த்ததில், சாலையில் இதன் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை தான் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்க போகிறோம்.

2025 மினி கூப்பர் கன்வெர்டபிள் விமர்சனம் – வெளிப்புறம்
இந்த புதிய மினி காரின் வெளிப்புறத் தோற்றம், அதன் ஹார்ட் டாப் மாடலை ஒத்திருக்கிறது. இதில் மினியின் சிறப்பான வடிவமைப்பு அம்சங்கள் காணப்படுகின்றன. தனித்துவமான முகப்பு விளக்குகள், பகலில் எரியும் விளக்குகள் (DRL) மற்றும் உயர் மற்றும் லோ பீம்களுக்கான ஒற்றை புரோஜெக்டரைப் பெற்றுள்ளன. 'கூப்பர் எஸ்' என்ற பேட்ஜிங் சிவப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
பியானோ கருப்பு மற்றும் செம்பு நிற அலங்கரிப்புகள் இதன் தோற்றத்தை மேம்படுத்துகின்றன. கடல் அலையின் பச்சை (Ocean Wave Green), மிளகாயின் சிவப்பு (Chilli Red), கோடைக்கால மஞ்சள் (Sunny Side Yellow) மற்றும் பிரிட்டிஷ் ரேசிங் பச்சை (British Racing Green) போன்ற கலர் ஆப்ஷன்களில் இந்த கார் கிடைக்கிறது. மேம்பட்ட டிரைவிங் உதவி அமைப்புகளுக்கான (ADAS) ரேடார் சென்சார் ஆனது முன்பக்க கேமரா உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

காரின் முன்பக்கத்தில் கீழ் கிரில் பகுதி பியானோ கருப்பு நிறத்தில் உள்ளது மற்றும் மேட் கருப்பு நிற ஸ்கிட் பிளேட்கள் சொரசொரப்பான ஃபினிஷிங்கில் உள்ளன. காரின் பக்கவாட்டு வடிவமைப்பு ஹார்ட் டாப் மாடலை ஒத்திருக்கிறது. காரின் 18-இன்ச் அலாய் சக்கரங்கள் பல்வேறு ஸ்டைல்களில் கிடைக்கின்றன. பியானோ கருப்பு நிற ஹைலைட்கள் கதவுகளிலும், வெள்ளை நிற வெளிப்புற மிரர்களிலும் காணப்படுகின்றன.
2025 மினி கூப்பர் கன்வெர்டபிள் விமர்சனம் – உட்புறம்
புதிய மினி கூப்பர் கன்வெர்டபிள் காரில், உயர்தர கேபின் உள்ளது. பழுப்பு மற்றும் அடர் நீல நிற தீம்கள், இரண்டுமே பளிச்சிடும் தையல்கள் மற்றும் மினி லோகோக்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இருக்கைகள் சவுகரியமான பயணத்திற்காக துளையிடப்பட்டுள்ளன. பின்புற இருக்கைகள் சிறியதாக உள்ளன; குழந்தைகள் அல்லது லக்கேஜ்களுக்கு ஏற்றது.

மேலும் பின் இருக்கை வரிசையில் பயணிகள் கால் வைப்பதற்கான இடம் குறைவாக உள்ளது. பின் இருக்கை பயணிகளுக்கு கப் ஹோல்டர் மற்றும் அட்ஜஸ் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்டீயரிங் சக்கரம் அதன் தனித்துவமான 2-ஸ்போக் வடிவமைப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. டாஷ்போர்டின் மையத்தில் உள்ள வட்ட வடிவ OLED திரை ஆனது இன்போடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டராக செயல்படுகிறது.
திரையைச் சுற்றி உள்ள விளக்குகள், இரவில் பல்வேறு வண்ணங்களில் ஒளிர்ந்து வெவ்வேறான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன. ஓட்டுநர்கள் 'கோ-கார்ட்' (Go-Kart), 'கோர்' (Core) மற்றும் 'க்ரீன்' (Green) போன்ற டிரைவிங் மோட்களுள் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். இதன் மூலம் காரின் த்ரோட்டில் ரெஸ்பான்ஸ் மற்றும் ஸ்டீயரிங் சக்கர உணர்வை மாற்றியமைக்கலாம்.

ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, சிறிய ஸ்டோரேஜ் பெட்டகம் மற்றும் ஆர்ம்ரெஸ்டில் விண்டோ கண்ட்ரோல்ஸ் ஆகியவை இதர அம்சங்களாகும். கியர் செலக்டர் மற்றும் பார்க்கிங் பிரேக் ஆகியவை எளிதில் அணுகக்கூடிய வகையில் உள்ளன. காரின் ஆண்டெனா வழக்கமான நிலையான வகையைச் சேர்ந்தது. மேற்கூரை முழுவதுமாக மின்சாரத்தால் இயக்கப்படுகிறது. 30 கிமீ/மணி வேகத்தில் செல்லும்போதும் 18 வினாடிகளில் மேற்கூரை திறக்கும்/ மூடும்.
சன்ரூஃப் பயன்பாடானது, வெளிப்புறக் காற்றை அனுபவிக்க பகுதியளவு திறக்கும் வசதியையும் வழங்குகிறது. இந்த காரின் பின்புற வடிவமைப்பு, ஹார்ட் டாப் கூப்பர் கன்வெர்டபிள் காரில் இருந்து வேறுபடுகிறது. இதில் மேட்ரிக்ஸ் LED டெயில் லைட்கள் பல வடிவங்களில் ஒளிர்கின்றன. பார்க்கிங் சென்சார்கள் மற்றும் பின்புற கேமரா ஆகியவை காரை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு உதவுகின்றன.

காரின் பின்பக்க பூட் லிட் பகுதி 80 கிலோ வரை எடை தாங்கும் திறன் உடையது மற்றும் தற்காலிக இருக்கையாகப் பயன்படுத்தவும் ஏற்றது. பூட் ஸ்பேஸின் கொள்ளளவு சுமார் 200 லிட்டராகும், பின்புற இருக்கைகளை மடிக்கும்போது 665 லிட்டராக விரிவடையும்; இது அதிக லக்கேஜ்களையும் எளிதாக கொண்டு செல்ல உதவுகிறது.
2025 மினி கூப்பர் கன்வெர்டபிள் விமர்சனம் – என்ஜின் & பரிமாண அளவுகள்
2025 மினி கூப்பர் கன்வெர்டபிள் காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 201 பிஎச்பி மற்றும் 300 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை உருவாக்கக் கூடியதாக உள்ளது. இதன் உடன் இணைக்கப்பட்டுள்ள 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் கியர்பாக்ஸ் (DSG) என்ஜின் பவரை காரின் முன் சக்கரங்களுக்கு அனுப்புகிறது.

திறந்து மூடக்கூடிய மேற்கூரையின் கூடுதல் 100 கிலோ எடை காரணமாக, 0-இல் இருந்து 100 கிமீ/மணி வேகத்தை 6.9 வினாடிகளில் எட்டும் இந்த காரின் அதிகபட்ச வேகம் 240 கிமீ/மணி ஆகும். புதிய கூப்பர் கன்வெர்டபிள் காரின் நீளம் 3,821 மிமீ, அகலம் 1,727 மிமீ, உயரம் 1,415 மிமீ மற்றும் வீல்பேஸ் 2,495 மிமீ ஆகும். கிரவுண்ட் கிளியரன்ஸ் (தரையில் இருந்து காரின் அடிப்பகுதியின் உயரம்) நகர ஓட்டுதலுக்கு ஏற்றதாக உள்ளது. இந்த கார் லிட்டருக்கு 17 கிமீ மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.
2025 மினி கூப்பர் கன்வெர்டபிள் விமர்சனம் – டிரைவிங் அனுபவம்
மினி பிராண்டின் நற்பெயருக்கு ஏற்றவாறு அற்புதமான டிரைவிங் அனுபவத்தை புதிய கூப்பர் கன்வெர்டபிள் கார் வழங்குகிறது. இதன் சிறிய வீல்பேஸ் (முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம்) மற்றும் துல்லியமான ஹேண்ட்லிங், வளைவுகளில் நம்பிக்கையுடன் செல்ல உதவுகிறது. சஸ்பென்ஷன் உறுதியாக இருப்பதால், சிறந்த ஹேண்ட்லிங்கை வழங்குகிறது. இருப்பினும், சாலை பள்ளம், மேடுகளில் செல்லும்போது அவற்றால் ஏற்படும் குலுக்கல்களை உணர முடிகிறது.

இருந்தாலும், ஷார்ப்பான ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸ் உடன் கூடிய இந்த அமைப்பு, சுறுசுறுப்பான டிரைவிங்கை வழங்குகிறது. மேற்கூரை இல்லாமல் பயணம் செய்யும்போது என்ஜின் சத்தம் இருந்தாலும், அதனை ஸ்பீக்கர்களை ஒலிர விட்டு சமாளிக்க முடிகிறது. இந்த கார் நகரம் மற்றும் நெடுஞ்சாலைகளில் சிறப்பாக ஓட்டுவதற்கு ஏற்றது; மேலும் அதிக வேகத்தை எளிதில் எட்டுகிறது. காரின் பவர்-டு-வெயிட் விகிதம் சிறந்த செயல்திறனை உறுதி செய்கிறது.
2025 மினி கூப்பர் கன்வெர்டபிள் விமர்சனம் – டிரைவ்ஸ்பார்க் கருத்து
2025 மினி கூப்பர் கன்வெர்டபிள், அதன் தனித்துவமான வடிவமைப்பு, நேர்த்தியான உட்புறம் மற்றும் அற்புதமான ஓபன்-டாப் செயல்திறன் ஆகியவற்றால் கவனத்தை ஈர்க்கிறது. இது கிளாசிக் மினி கார்களின் அழகையும், நவீன தொழில்நுட்பம் மற்றும் சிறந்த ஹேண்ட்லிங்கையும் ஒருங்கிணைக்கிறது. கன்வெர்ட்டிபிள் கூரை, காரின் கவர்ச்சியை அதிகரிக்கிறது.

ஆதலால், இது கார் ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. கடந்த நவம்பரில் ப்ரீ-புக்கிங் (Pre-Booking) துவங்கப்பட்டு, விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த புதிய மினி கன்வெர்டபிள் காரின் விலை சுமார் ரூ.45 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் நேரடி போட்டியாளர்கள் குறைவாக இருந்தாலும், ஆடி ஏ4 (Audi A4) மற்றும் பிஎம்டபிள்யூ 2-சீரிஸ் கிரான் கூபே (BMW 2 Series Gran Coupe) போன்ற பிரீமியம் ஹேட்ச்பேக்குகள் மற்றும் எண்ட்ரி-லெவல் சொகுசு செடான் கார்களுடன் இது போட்டியிடும். இதன் ஸ்டைல், செயல்திறன் மற்றும் திறந்தவெளி அனுபவம் ஆகியவை, ஏற்கனவே ஒரு சொகுசு காரை வைத்திருப்பவர்களுக்கு இரண்டாவது காராக, வார இறுதி பயணங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகின்றன.


Click it and Unblock the Notifications









