7 பேர் தாராளமா போகலாம்! ஃபார்ச்சூனருக்கு செக் வைக்க வந்திருக்கும் காரை நாங்க ஓட்டி பாத்துட்டோம்!
நிஸான் (Nissan) நிறுவனம், இந்தியாவில் அதன் எக்ஸ்-டிரையல் (X-Trail) எஸ்யூவி (SUV) காரை 2005 ஆம் ஆண்டிலேயே முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதுவே முதல் தலைமுறை (டி30) எக்ஸ்-டிரையல் ஆகும். குடும்பத்துடன் பயணிப்பதற்கு ஏற்ற காராகவும், ஆஃப்-ரோடை சமாளிக்கும் திறன் கொண்டதாகவும் இது வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையிலேயே 2007 ஆம் ஆண்டில் எக்ஸ்-டிரையலின் முதல் தலைமுறைக்கு வெளியேற்றி அதற்கு பதிலாக இரண்டாம் தலைமுறையை (டி31) நிஸான் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியது. ரெனால்ட்-நிஸானின் சென்னை உற்பத்தி ஆலையில் வைத்தே இந்தியாவிற்கான இரண்டாம் தலைமுறை எக்ஸ்-டிரையல் அசெம்பிள் செய்யப்பட்டது.
இந்த இரண்டாம் தலைமுறை எக்ஸ்-டிரையல் முந்தைய தலைமுறையைக் காட்டிலும் மிகப் பெரிய உருவம் மற்றும் சிறப்பம்சங்களைக் கொண்டதாக தயார் செய்யப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. மேலும், கூடுதல் ஆஃப்-ரோடு திறன் கொண்ட காராகவும் இதனை நிஸான் இம்முறை வடிவமைத்திருந்தது. இந்த மாதிரியான சூப்பரான எஸ்யூவிக்கு காருக்கே அடுத்த ஏழாண்டுகளில் முற்று புள்ளி வைக்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டில் இந்த கார் மாடலை இந்தியாவில் நிஸான் வெளியேற்றியது. இந்த நிலையிலேயே இந்த கார் மாடலை மீண்டும் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் நிஸான் களமிறங்கி இருக்கின்றது. சரியாக பத்தாண்டுகள் இடைவெளிக்கு பின்னர் எக்ஸ்-டிரையலை அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.
குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இந்த காரை விற்பனைச் செய்ய இருக்கின்றது. இது நான்காம் தலைமுறை (டி33) எக்ஸ்-டிரையல் ஆகும். இதனையே சமீபத்தில் நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தோம். இதன் வாயிலாக கார் பற்றி அறிந்துக் கொண்ட முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

நிஸான் எக்ஸ்-டிரையல் எஸ்யூவி காரின் சிறப்பம்சங்கள் மற்றும் வடிவமைப்பு பற்றிய விபரங்கள்: முந்தைய தலைமுறை எக்ஸ்-டிரையலைப் போலவே இதுவும் அதிக நேர்த்தியானதாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, இதன் எஸ்யூவி தன்மையை மேலும் நிஸான் அதிகரிக்கச் செய்திருக்கின்றது. மேலும், இந்த காருக்கு கவர்ச்சியை சேர்க்கக் கூடிய அம்சங்கள் பலவற்றை நிஸான் சேர்த்து இருக்கின்றது.
அந்தவகையில் முன் பக்கத்தில் கவர்ச்சியான கிரில்லை நிஸான் வழங்கி இருக்கின்றது. பெரிய குரோம் பட்டை ஒன்றும், மெல்லிய குரோம் பட்டை ஒன்றும் கிரில்லை சுற்றி 'வி' வடிவில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், கிரில்லின் வலது மற்றும் இடது பக்கத்திலேயே எல்இடி ஹெட்லைட்டுகள் வழங்கப்பட்டு இருக்கின்றது. அதற்கு மேல் பக்கத்திலேயே பகல்நேர லைட்டுகளும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதிலேயே திருப்பங்களை இன்டிகேட் செய்யும் லைட்டுகளும் இடம் பெற்றிருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக எக்ஸ்-டிரயைலுக்கு அதிக கவர்ச்சியை சேர்க்கக் கூடிய ஒன்றாக பம்பரும், காற்றை உள் வாங்கும் துளைகளும் இருக்கின்றன. முன் பக்கத்தைப் போலவே பக்கவாட்டு பகுதிக்கு கவர்ச்சி சேர்க்கின்ற விதமாகவும் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.
அந்தவகையில், மிகவும் அழகிய 20 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த வீல்களில் அனைத்து விதமான சாலைகளையும் சமாளிக்கும் திறன் கொண்ட 255/40 டயர்களே சேர்க்கப்பட்டு இருக்கின்றன. மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் இந்த காரின் ரூஃப் மிதக்கின்ற வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.

இதற்கு அடுத்தபடியாக ஏ,பி மற்று சி பிள்ளர்களுக்கு கருப்பு நிறம் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இதன் டெயில் லைட்டுகளை பூமராங் வடிவத்திலேயே நிசான் தயார் செய்திருக்கின்றது. அனைத்துமே எல்இடி லைட்டுகளே ஆகும். வாகனத்தின் நிறுத்தை தெளிவாக காண்பிக்கும் நோக்கில் சிறிய பிரேக் லைட் ரூஃப் ஸ்பாய்ளரில் நிஸான் வழங்கி இருக்கின்றது.
வெளிப்பக்கத்திற்கு வழங்கப்பட்டதைப் போலவே அதிகம் முக்கியத்துவம் காரின் உட்பக்கத்திலும் நிஸான் வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், காருக்குள் பயணிக்கும்போது அதிகம் பிரீமியம் ஃபீலை வழங்கும் நோக்கில் சாஃப்ட்-டச் மெட்டீரியல்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதைத்தொடர்ந்து, சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும் நோக்கில் தட்டையான கீழ் பகுதியைக் கொண்ட ஸ்டியரிங் வீல், பேடில் ஷிஃப்டருடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

மேலும், 12.3 அங்குல டிரைவர் திரை டேஷ்போர்டின் மையப் பகுதியில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிராவுடன் இணைக்கப்பட்ட 8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் எக்ஸ்-டிரையலில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இன்ஃபோடெயின்மென்ட்-க்குக் கீழே பலதரப்பட்ட கருவிகளைக் கன்ட்ரோல் செய்யக் கூடிய பொத்தான்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, டூயல்-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோலுக்கான கன்ட்ரோல்களும் அங்கு இடம் பெற்றிருக்கின்றன. மேலும், யுஎஸ்பி ஃபோர்ட், 12V சாக்கெட் மற்றும் எஞ்சின் ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன்களையும் காண முடிகின்றது. கூடுதலாக ஒயர்லெஸ் சார்ஜரும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது டிரைவருக்கும், பயணியின் இருக்கைக்கும் நடுவில் இடம் பெற்றிருக்கின்றது.

இதேபோல், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், டிரைவ் மோடை மாற்றும் சுவிட்ச், கோப்பை மற்றும் தண்ணீர் பாட்டில் தாங்கியும் மையப்பகுதியில் இடம் பெற்றிருக்கின்றது. நிஸான் எக்ஸ்-டிரயைல் காரில் ஒரே நேரத்தில் 7 பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். முன் பக்க இருக்கை மிகவும் சௌகரியமாக பயணிக்க ஏற்றதாகக் காட்சியளிக்கின்றது.
இதை சாய்த்துக் கொள்ள முடியும். அதேவேளையில், இந்த காரின் நடு வரிசை இருக்கைகளை 40/20/40 என மடித்துக் கொள்ள முடியும். இதுதவிர, உயரமானவர்கள் அமர்ந்து ஏதுவான இருக்கையாகவும் மைய பகுதி இருக்கைகள் இருக்கின்றன. ஆனால், லெக்-ரூம் போதுமானதாக இல்லை. இதை இன்னும் கொஞ்சம் கூடுதலாக நிஸான் வழங்கி இருக்கலாம்.

அதேநேரத்தில் இந்த குறையை மறக்கும் விதமாக பெரிய சன்-ரூஃபை நிஸான் வழங்கி இருக்கின்றது. இது கேபினை விசாலமானதாக உணர செய்கின்றது. எக்ஸ்-டிரையலின் மூன்றாவது வரிசை இருக்கை சிறுவர்களுக்கே ஏற்றதாக இருக்கும். பெரியவர்களால் மிக தாராளமாக அமர்ந்து பயணிக்க முடியாது. குறிப்பாக, உடல் பருமனாக இருப்பவராக இருந்தால் கொஞ்சம் நெருக்கத்துடனேயே பயணிக்கின்ற வகையில் மூன்றாவது வரிசை இருக்கை உள்ளது.
மேலும், உட்காரும் நிலை சரியாக இல்லை என்பதை நாம் இங்கு கவனத்தில் கொண்டே ஆக வேண்டும். இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக ஏழு ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், டிராக்சன் கன்ட்ரோல், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட, முன் மற்றும் பின் பக்கத்தில் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

நிஸான் எக்ஸ்-டிரையலின் எஞ்சின் விபரங்கள்: நிஸான் நிறுவனம் இந்தியாவில் எக்ஸ்-டிரையல் காரை ஒற்றை எஞ்சின் ஆப்ஷனில் மட்டுமே விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. 1.5 லிட்டர் ஜியோமெட்ரி டர்போ, 2 சிலிண்டர் பெட்ரோல் என்சினே அது ஆகும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 4,800 ஆர்பிஎம்-இல் 161 பிஎச்பியையும், 2,800 முதல் 3,600 ஆர்பிஎம்மில் 300 என்எம் டார்க் ஆற்றலையும் அது உற்பத்தி செய்யும்.
இந்த என்சினுடன் 12V மைல்ட் ஹைப்ரிட் சிஸ்டமும் வழங்கப்பட்டு இருக்கின்றது. எக்ஸ்-டிரெயில்-இன் முன்சக்கரங்களுக்கே இவை இரண்டும் சேர்ந்து சிவிடி டிரான்ஸ்மிஷன் வாயிலாக இயக்க ஆற்றலை கடத்துகின்றன. நிஸான் எக்ஸ்-ட்ரெயில் 0-100 கிமீ வேகத்தை வெறும் 9.6 விநாடிகளிலேயே எட்டிவிடும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 200 கிமீ ஆகும்.

மேலும், ஒரு லிட்டருக்கு அதிகபட்சமாக 13.7 கிமீ மைலேஜை இந்த கார் மாடல் வழங்கும். இந்த காரின் மூன்றாவது வரிசை இருக்கைகளை மடித்துக் கொள்வதன் வாயிலாக 585 லிட்டராக இதன் பூட் ஸ்பேஸை அதிகப்படுத்திக் கொள்ள முடியும். அதுவே, இரண்டாவது வரிசையையும் சேர்த்து மடித்துக் கொண்டால் பூட் ஸ்பேஸை 1,484 லிட்டராக அதை மேலும் விரிவாக்கம் செய்துக் கொள்ள முடியும்.
நிஸான் எக்ஸ்-டிரையல் ஓட்டி பார்க்க எப்படி இருந்தது? புதிய நிசான் எக்ஸ்-டிரையல் என்பது வசதிக்காக உருவாக்கப்பட்ட ஒரு எஸ்யூவி ஆகும். இதன் ஓட்டும் விதமும் அதையே பிரதிபலிக்கிறது. இது நெடுஞ்சாலைகளில் மிகுந்த சுலபமாக பயணிக்கின்றது. இதேபோல், நகர பயன்பாட்டிலும் மிகவும் வசதியான காராகவே இது பிரதிபலிக்கின்றது.
இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் 1.5 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ என்சின் மிகவும் புத்திசாலியான ஓர் மோட்டாராகக் காட்சியளிக்கின்றது. குறைந்த வேகங்களில், இது அதிக சுருக்க விகித (High Compression Ratio)த்தை (14:1) பராமரிக்கிறது. இதன் வாயிலாக இந்தியர்களின் மிக பெரிய கவலையான எரிபொருள் விரையம் தவிர்க்கப்படுகின்றது.
ஆனால், ஆக்சிலேட்டரை போட்டு அழுத்து அழுத்து என அழுத்தி எடுத்தால், எஞ்சின் குறைந்த சுருக்க விகிதத்திற்கு (8:1) மாறுகிறது. இந்த நிலையிலேயே காரின் டாப் ஸ்பீடு நம்மால் எட்ட முடிகின்றது. இதன் எஞ்சின் கொஞ்சம் அதிக சத்தத்தை வெளியேற்றுகின்றது. ஆனால், இதன் சத்தம் அதிக வேகத்துடன் பெரிய அளவில் பொருந்தவில்லை.
மூன்று விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஈகோ, ஸ்டாண்டர்டு மற்றும் ஸ்போர்ட் ஆகிய ரைடிங் மோட்களே வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த மோட்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான ரைடிங் அனுபவத்தை வழங்கக் கூடியவை ஆகும். குறிப்பாக, ஈகோ அதிக எரிபொருள் சிக்கனத்திற்கு வழிவகுக்கும்.
அதேவேளையில், ஸ்போர்ட் ஆப்ஷன் அதீத இயக்க திறனை வழங்கக் கூடியதாக உள்ளது. மேலும், இந்த மோட்களை மாற்றும் போது மிகப் பெரிய மாற்றம் த்ரோட்டிலிலும், ஸ்டியரிங் எடையிலும் உருவாகின்றன. அதேவேளையில், ஸ்டாண்டர்டு மோடில் ஸ்டியரிங் வீல் மிகவும் மென்மையானதாகக் காட்சியளிக்கின்றது. பார்க்கிங்கை மிகவும் எளியதாக இந்த மோட் மாற்றும்.
இந்த கார் ஓர் பிரீமியம் கார் என்பதை நிஸான் நிறுவனம் அதில் வழங்கி இருக்கும் சஸ்பென்ஷன் வாயிலாகவும் உறுதி செய்திருக்கின்றது. மிகவும் மென்மையான சஸ்பென்ஷன் செட்-அப்பே வழங்கப்பட்டு இருக்கின்றது. அனைத்து விதமான சாலைகளையும் இது மிக சுலபமாக சமாளிக்கும். ஆனால் பள்ளம்-மேடுகளை அதிக வேகத்தில் கடந்தால் கொஞ்சம் சிக்கலைச் சந்திக்க நேரிடும். மென்மையான சஸ்பென்ஷன் என்பதால் திருப்பமான சாலைகளில் கொஞ்சம் உடல் சுழற்சி ஏற்படவும் நேரிடுகின்றது. ஆனால் நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் எக்ஸ்-ட்ரெயில் நிலைத்திருக்கும் உணர்வை தருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த இத்தகைய உணர்வுகளையே 2024 நிஸான் எக்ஸ்-டிரையல் காரில் நாங்கள் உணர்ந்தோம். இந்த காரை சிபியூ வாயிலாகவே நிஸான் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. மேலும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்கவும் அது திட்டமிட்டு இருக்கின்றது. எனவே சீக்கிரமே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்காமல் போகக் கூடிய நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









