ரெனால்ட் டஸ்டர் காரை இதைவிட கம்மியான விலையில் கொடுக்க முடியாது! ஓட்டிப் பார்த்ததில் மெர்சலாகி விட்டோம்!
ரெனால்ட் டஸ்டர் கார் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.49 லட்சம் முதல் தொடங்குகிறது. இது டஸ்டர் கார்கள் வரிசையில் மிகவும் மலிவான வேரியண்ட் ஆகும். 1 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. நடைமுறைக்கு ஏற்ற சிறந்த எஸ்யூவி காரான ரெனால்ட் டஸ்டர் 1 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் அதென்டிக், எவல்யூஷன் மற்றும் டெக்னோ என மொத்தம் மூன்று விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது.
டஸ்டர் காரின் ஸ்டைல் மிகவும் கம்பீரமானது மற்றும் உறுதியானது. இதில் 17-இன்ச் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. LED விளக்குகள் காரின் அழகைக் கூட்டுகின்றன. காரின் உட்புறம் மிகவும் நேர்த்தியாக பிரவுன் மற்றும் கருப்பு நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டாஷ்போர்டில் 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் வசதி உள்ளது.

இத்தகைய டஸ்டர் கார் ஆனது, நடைமுறை பயன்பாட்டை விட்டுக்கொடுக்காமல் சிறந்த மதிப்பினை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்காக ரெனால்ட்டின் சோதனை செய்யப்பட்ட புதிய மூன்று சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த 1 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் பிரத்யேகமாக 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே கிடைக்கிறது.
மேலும் இது, அதிக சக்தி வாய்ந்த டஸ்டரின் 1.3-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வேரியண்ட்களுக்குக் கீழே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சிறிய அளவிலான, புதிய 1 லிட்டர் என்ஜின் உடன் ரெனால்ட் டஸ்டர் சாலையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்க்க, டெல்லி NCR பகுதியில் இந்த காரை நாங்கள் ஓட்டிப் பார்த்தோம்.

ரெனால்ட் டஸ்டர் 1 லிட்டர் மேனுவல் விமர்சனம் - புதியதாக என்னென்ன மாற்றங்கள்?
ஏற்கனவே கூறியதுபோல், ரெனால்ட் டஸ்டர் 1 லிட்டர் மேனுவல் கார் ஆனது அதென்டிக், எவல்யூஷன் மற்றும் டெக்னோ ஆகிய மூன்று வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது. அதேசமயம் உயர் ரக டெக்னோ+ மற்றும் ஐகானிக் வேரியண்ட்கள் தற்போது 1.3-லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினுக்கு மட்டுமே பிரத்யேகமாக உள்ளன. 1 லிட்டர் என்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் நாங்கள் ஓட்டிப் பார்த்த டஸ்டரின் எண்ட்ரீ-லெவல் டெக்னோ வேரியண்ட்டின் தோற்றம் ஆனது டாப்-எண்ட் வேரியண்ட்கள் அளவிற்கு இல்லை என்றாலும், நடுத்தர வேரியண்ட்களின் தோற்றத்தைக் கொண்டிருந்தது.
இருப்பினும், செதுக்கப்பட்ட வடிவத்திலான முன்பக்க பொனட், கிரில்லில் உள்ள கம்பீரமான டஸ்டர் எழுத்துக்கள், தடிமனான முன் மற்றும் பின்பக்க ஸ்கிட் பிளேட்டுகள், அகலமான பாடி கிளாடிங் மற்றும் ரூஃப் ரெயில்கள் ஆகியவற்றுடன் டஸ்டர் காரின் முரட்டுத்தனமான SUV குணாதிசயங்களை நாங்கள் ஓட்டிப் பார்த்த டஸ்டர் கார் கொண்டிருந்தது.

இந்த வேரியண்ட்டை வாங்கும் வாடிக்கையாளர்கள் முக்கிய வெளிப்புற அம்சங்களைத் தவறவிடாமல் இருப்பதை ரெனால்ட் உறுதி செய்துள்ளது. இந்த டஸ்டர் 1 லிட்டர் மேனுவல் காரில் ஆட்டோமேட்டிக் LED ஹெட்லேம்ப்கள், LED ஃபாக் விளக்குகள், LED டெயில் லேம்ப்கள் மற்றும் டெயில் லேம்ப்களை இணைக்கும் லைட் பார் என அதிகமாக LED விளக்குகள் தாராளமாக வழங்கப்பட்டுள்ளன.
டாப் வேரியண்ட்கள் உடன் ஒப்பிடுகையில் இதில் உள்ள முக்கியமான வித்தியாசம் அலாய் சக்கரங்கள் மட்டுமே ஆகும். 1.3-லிட்டர் வேரியண்ட்களின் 18-இன்ச் அலாய் சக்கரங்களுடன் ஒப்பிடும்போது, இதில் 17-இன்ச் அலாய் சக்கரங்களே வழங்கப்படுகின்றன. அவற்றின் வடிவமைப்பும் சற்று மாறுபட்டுள்ளது. அதைத் தவிர, ஒட்டுமொத்த ஸ்டைல் மற்றும் சாலையில் இயங்கும் விதம் ஆகியவை விலையுயர்ந்த டஸ்டர் பதிப்புகளைப் போலவே கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கின்றன.

உட்புறத்தில், ரெனால்ட் டஸ்டர் 1 லிட்டர் மேனுவல் கார் ஆனது உயர் ரக வேரியண்ட்களைப் போல அதே டேஷ்போர்டு அமைப்பைப் பகிர்ந்து கொள்கிறது. இருப்பினும் மெட்டீரியல்கள் மற்றும் ட்ரிம்களில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உள்ளன. டாப்-எண்ட் ஐகானிக் வேரியண்டில் உள்ள லெதரெட் அப்ஹோல்ஸ்டரிக்கு பதிலாக, இதில் பிரீமியம் உணர்வைத் தரும் பிரவுன் மற்றும் கருப்பு நிற துணி ஃபினிஷ் வழங்கப்பட்டுள்ளது.
ரெனால்ட் நிறுவனம் இந்த பிரவுன் நிற துணி அலங்காரத்தை டேஷ்போர்டு மற்றும் கதவு பேட்களிலும் பயன்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் உயர் வேரியண்ட்களில் காணப்படும் ஃபாக்ஸ் கார்பன்-ஃபைபர் ட்ரிமிற்கு பதிலாக, இதில் மாறுபட்ட வெள்ளை நிற இன்செர்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உட்புறத்திற்கு ஒரு தனித்துவமான மற்றும் நேர்த்தியான தோற்றத்தை வழங்குகிறது.

டாப்-எண்ட் ஐகானிக் வேரியண்ட் உடன் ஒப்பிடும்போது, டஸ்டர் 1 லிட்டர் மேனுவல் டெக்னோ வேரியண்டில் பவர்டு மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள், 360-டிகிரி கேமரா, ADAS செயல்பாடுகள், கேபினை சுற்றிலும் விளக்குகள், காற்று சுத்திகரிப்பான் மற்றும் முன்பக்க பார்க்கிங் சென்சார்கள் போன்ற சில பிரீமியம் அம்சங்கள் இல்லை. மேலும் 10.25-இன்ச் டிஜிட்டல் கிளஸ்டர் திரைக்கு பதிலாக சிறிய 7-இன்ச் திரை உள்ளது.
இருப்பினும், உயர் வேரியண்ட்களைப் போலவே வயர்லெஸ் ஸ்மார்ட்போன் இணைப்பு மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பத்துடன் கூடிய 10.1 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் தொடுத்திரையைப் பெற்றுள்ளது. மேலும். வயர்லெஸ் போன் சார்ஜர், ஆர்கமிஸ் ஆடியோ சிஸ்டம், டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் மின்சாரம் மூலம் மடக்கக்கூடிய மிரர்கள் போன்ற சிறப்பம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, ரெனால்ட் டஸ்டர் 1 லிட்டர் மேனுவல் டெக்னோ வேரியண்ட்டில் ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், ரிவர்ஸில் பார்க் செய்வதற்கு உதவியாக கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் ISOFIX சைல்டு-சீட் மவுண்ட்கள் உள்ளன. இவை பயணிகளுக்குத் தேவையான அடிப்படை மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்கின்றன.
முன் இருக்கைகள் சிறந்த வசதியையும் சவுகரியத்தையும் வழங்குகின்றன. அதே நேரத்தில் பின் இருக்கைகள் டஸ்டர் காரின் பலங்களில் ஒன்றாகத் தொடர்கின்றன. பின் இருக்கை வரிசையில் உயரமான பயணிகளுக்கும் தாராளமான முழங்கால் மற்றும் தலைக்கான இடைவசதி உள்ளது. இதன் மூலம் இது குடும்பமாக பயணிப்பதற்கு ஏற்ற SUV-யாக அமைகிறது. பின் இருக்கை பயணிகளுக்கு பிரத்யேக ஏசி வென்ட்கள் மற்றும் USB டைப்-சி சார்ஜிங் போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

கேபினில் ஏராளமான ஸ்டோரேஜ் இடங்கள் மற்றும் சிறிய அறைகள் உள்ளன. மேலும் இதன் 518-லிட்டர் பூட் ஸ்பேஸ் இந்த பிரிவில் உள்ள மிகப்பெரிய அளவுகளில் ஒன்றாகத் தொடர்கிறது. இருப்பினும், இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு குறைபாடு என்னவென்றால், ஸ்பேர் வீல் (மாற்று சக்கரம்) வழங்கப்படவில்லை என்பதுதான். இது நீண்ட தூரப் பயணங்களுக்கு இந்த டஸ்டர் காரை கொண்டுச் செல்லலாமா என சற்று யோசிக்க வைக்கிறது.
ரெனால்ட் டஸ்டர் 1 லிட்டர் மேனுவல் விமர்சனம் - என்ஜின் மற்றும் செயல்திறன்
ரெனால்ட் டஸ்டர் 1 லிட்டர் மேனுவல் காரில் கைகர் காரில் பயன்படுத்தப்படும் அதே 1 லிட்டர், மூன்று-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், மிட்-சைஸ் SUV கார் டஸ்டர் என்பதற்காக ரெனால்ட் இதில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. இதன் விளைவாக இது அதிகப்பட்சமாக 100 hp ஆற்றலையும் 166 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

இது ஓட்டுநருக்குத் தேவையான போதுமான ஆற்றலை வழங்குகிறது. இதன் டார்க் திறன் கைகர் காரை விட சற்று அதிகமாக உள்ளது. மேலும் கியர் மாற்றும் பணிகளைச் செய்ய கைகரில் உள்ள 5-ஸ்பீடு கியர்பாக்ஸ்-க்கு பதிலாக 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வசதி இல்லை என்பது நகர்ப்புற வாடிக்கையாளர்களிடையே இந்த கார் மீதான ஈர்ப்பைச் சற்று குறைக்க வாய்ப்புள்ளது.
பெரும்பாலான மூன்று-சிலிண்டர் டர்போசார்ஜ்டு என்ஜின்களைப் போலவே, கார் ஓய்வில் இருக்கும்போது (idle) ஒருவித சத்தமும் அதிர்வுகளும் கவனிக்கத்தக்க வகையில் உள்ளன. இருப்பினும், கார் நகரத் தொடங்கியவுடன் சுத்திகரிப்பு மேம்படுகிறது மற்றும் என்ஜின் சீரான வேகத்திற்கு மாறுகிறது. குறைந்த என்ஜின் வேகத்தில் டர்போ கிடைப்பதில் குறைப்பாடு இருந்தாலும், 2,000 ஆர்பிஎம் வேகத்திற்கு மேல் செயல்திறன் மிகவும் சிறப்பாக உள்ளது.

தினசரி நகரப் பயணங்களில், இந்த ரெனால்ட் டஸ்டர் 1 லிட்டர் மேனுவல் கார் போதுமான வேகத்துடன் செயல்படும் மற்றும் போக்குவரத்து நெரிசலில் எளிதாகச் செல்லும். நெடுஞ்சாலைகள் மற்றும் செங்குத்தான சரிவுகளில், அதிக என்ஜின் ஆற்றலைப் பெற ஓட்டுநர்கள் அடிக்கடி கியர்களைக் குறைக்க வேண்டியிருக்கும். இதன் செயல்திறன் மிகவும் உற்சாகமாக இல்லாவிட்டாலும், ஒரு ஃபேமலி SUV காருக்குத் தேவையான போதுமான ஆக்ஸலரேஷனை இந்த என்ஜின் வழங்குகிறது.
இதன் கிளட்ச் மிகவும் லேசாக இருப்பதால், போக்குவரத்து நெரிசலில் ஓட்டும் போதும் சோர்வைத் தராது. 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் துல்லியமான கியர் மாற்றங்களை வழங்குகிறது மற்றும் என்ஜினின் குணாதிசயங்களுடன் நன்றாகப் பொருந்துகிறது. இருப்பினும், கியர்களை மாற்றுவது எளிதாக இல்லை. குறிப்பாக, காரை வேகமாக ஓட்டும்போது கியர் மாற்ற சற்று கூடுதல் முயற்சி தேவைப்படுகிறது.

இருப்பினும், சவாரி தரம் (Ride quality) ஆனது ரெனால்ட் டஸ்டர் 1 லிட்டர் மேனுவல் காரின் மிகச்சிறந்த பலங்களில் ஒன்றாகத் தொடர்கிறது. டெக்னோ வேரியண்டில் பொருத்தப்பட்டுள்ள சற்று சிறிய சக்கரங்கள் மென்மையான பயணத்திற்கு பங்களிக்கக்கூடும். குறைந்த வேகத்தில் கார் இயங்கும்போது ஒருவித உறுதித்தன்மை இருந்தாலும், அது ஒருபோதும் அசௌகரியமாக மாறாது. இது அனைத்து வகையான சாலைகளிலும் பயணிகளுக்குச் சிறந்த அனுபவத்தைத் தருகிறது.
இதன் சஸ்பென்ஷன் அமைப்பானது பள்ளங்கள், சிதலடைந்த சாலைகள் மற்றும் கரடுமுரடான மேற்பரப்புகளை வியக்கத்தக்க வகையில் உள்வாங்கிக் கொள்கிறது. பழைய டஸ்டர் போல் அல்லாமல், மோசமான சாலைகளிலும் ஸ்டீயரிங் சக்கரம் அதிர்வின்றி சீராக செயல்படுகிறது. இது காரின் பயண அனுபவத்தை மேலும் மேம்படுத்தி, அதிவேக பயணத்தின் போது தேவைப்படும் நிலைத்தன்மையையும் வழங்கக்கூடியதாக உள்ளது. திறந்த நெடுஞ்சாலைகளில் இந்த SUV கார் மிகவும் பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான உணர்வைத் தருகிறது.

வளைந்த சாலைகளிலும் ரெனால்ட் டஸ்டர் 1 லிட்டர் மேனுவல் கார் சிறப்பாகச் செயல்படுகிறது. துல்லியமான ஸ்டீயரிங் மற்றும் நன்கு கட்டுப்படுத்தப்பட்ட பாடி மூவ்மென்ட்கள் வளைவுகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவுகின்றன. இது மற்ற போட்டி கார்களைப் போல சுறுசுறுப்பாக இல்லாவிட்டாலும், டஸ்டர் ஒரு ஈர்க்கக்கூடிய குணாதிசயத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இது ஓட்டுநருக்கு உற்சாகமான பயண அனுபவத்தை வழங்க போதுமானதாக உள்ளது.
ரெனால்ட் டஸ்டர் 1 லிட்டர் மேனுவல் விமர்சனம் - மைலேஜ் சோதனை
ரெனால்ட் டஸ்டர் 1 லிட்டர் மேனுவல் காருக்கு ARAI சான்றளிக்கப்பட்ட எரிபொருள் திறன் லிட்டருக்கு 19.41 கிமீ ஆகும். எரிபொருள் சிக்கனத்தை அதிகரிக்க உதவும் வகையில், இந்த SUV காரில் ஈக்கோ (Eco) டிரைவிங் மோடு மற்றும் ஆட்டோமேட்டிக் என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து அதிக மைலேஜ் வழங்க உதவுகிறது.

நகரம் மற்றும் நெடுஞ்சாலை ஆகிய இரண்டிலும் மேற்கொள்ளப்பட்ட சுமார் 70 கிமீ தூர சோதனையில், டஸ்டர் 1 லிட்டர் மேனுவல் உண்மையான சூழலில் லிட்டருக்கு 18.1 கிமீ மைலேஜை வழங்கியது. வாகனத்தின் அளவு மற்றும் செயல்திறனைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த முடிவு நிறுவனம் கோரும் மைலேஜ் அளவிற்கு மிகவும் நெருக்கமாக இருப்பது ஈர்க்கக்கூடிய விஷயமாகும்.
ரெனால்ட் டஸ்டர் 1 லிட்டர் மேனுவல் விமர்சனம் - தீர்ப்பு
ரெனால்ட் டஸ்டர் 1 லிட்டர் மேனுவல் கார் ஆனது, அசல் டஸ்டர் காரைப் பிரபலமாக்கிய அடிப்படை அம்சங்களில் கவனம் செலுத்துகிறது. இது சிறந்த சவாரி தரம், நடைமுறை செயல்திறன், முரட்டுத்தனமான ஸ்டைல் மற்றும் மற்ற கார்களுக்கு சவாலான போட்டியளிக்கக் கூடிய மைலேஜ் ஆகியவற்றை மலிவான விலையில் வழங்குகிறது. மோசமான சாலைகளை எளிதாகக் கையாளக்கூடிய வசதியான குடும்ப SUV காரைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு இது மிகவும் பிடிக்கும்.
இந்த 1 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் 1.3-லிட்டர் என்ஜினைப் போல சக்தி வாய்ந்தது அல்ல என்றாலும், இது அன்றாட ஓட்டுதலுக்குப் போதுமான செயல்திறனை வழங்குகிறது. மேலும் இது காரின் விலையையும் பராமரிப்புச் செலவையும் குறைக்க உதவுகிறது. மிட்சைஸ் SUV கார்கள் பிரிவில் நுழையும் சிக்கனமான வாடிக்கையாளர்களுக்கு, ரெனால்ட் டஸ்டர் 1 லிட்டர் மேனுவல் ஒரு சிறந்த தேர்வாக அமையும்.


Click it and Unblock the Notifications
