சொகுசா இருக்கு... பெர்ஃபார்மென்சும் சூப்பர்... ஸ்கோடா ஸ்லாவியா 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ரிவியூ!
ஆக்டேவியா (Octavia) கார் மூலமாக ஸ்கோடா (Skoda) நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த 2002ம் ஆண்டு நுழைந்தது. அன்றைய காலகட்டத்தில் செடான்கள் இந்திய சாலைகளில் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்தன. எனவே நமக்கு தனித்துவமான சில செடான் கார்கள் கிடைத்தன. இதில், ஸ்கோடா ஆக்டேவியா கார், ஆட்டோமொபைல் ஆர்வலர்களை மிகவும் ஈர்க்க கூடிய வகையில் இருந்தது.
இடைப்பட்ட ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கோடாவின் அனைத்து செடான்களும் இந்திய சந்தையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தின. அத்துடன் தங்களுக்கென தனி அடையாளத்தையும் உருவாக்கின. பிரீமியமான ஐரோப்பியன் ஃபீல் ஆகட்டும், அல்லது விசாலமான மற்றும் சௌகரியமான இன்டீரியர் ஆகட்டும் அல்லது சிறப்பான செயல்திறன் ஆகட்டும், அனைத்து அம்சங்களிலும் ஸ்கோடாவின் செடான்கள் வாடிக்கையாளர்களை கவரக்கூடிய வகையில் இருந்தன.
ஆனால் இந்தியர்களின் செடான்கள் மீதான காதல் நாளடைவில் எஸ்யூவிகளை நோக்கி திரும்ப தொடங்கியது. தற்போது எஸ்யூவி கார்களின் விற்பனை கொடி கட்டி பறக்கும் நிலையில் செடான் கார்களின் விற்பனை 'டல்' அடித்து கொண்டுள்ளது. இருப்பினும் தனது புதிய தயாரிப்பான ஸ்லாவியா மூலம் இந்தியர்களின் செடான்கள் மீதான காதலை மீட்டெடுக்க ஸ்கோடா நிறுவனம் முயற்சி செய்கிறது. ஸ்கோடா ரேபிட் (Skoda Rapid) காருக்கு மாற்றாக, ஸ்கோடா ஸ்லாவியா விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது முறையான ஸ்கோடா செடானா? இதன் செயல்திறன் எப்படி உள்ளது? சௌகரியமாக இருக்கிறதா? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்து கொள்வதற்காக ஸ்லாவியா காரை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது இந்த கார் எங்களை உண்மையில் மிகவும் ஈர்த்தது. நாங்கள் ஓட்டியது ஸ்கோடா ஸ்லாவியா காரின் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மாடல் ஆகும். இந்த காரை பற்றிய விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

டிசைன்
டிசைன் பிரிவில் ஸ்கோடா ஸ்லாவியா கார் அதிக மதிப்பெண்களை ஸ்கோர் செய்கிறது. ஸ்கோடா ஸ்லாவியா காரின் டிசைன் ஆடம்பரமாக இருக்கிறது. எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும், ஸ்கோடா ஸ்லாவியா காரின் டிசைன் கவர்ந்து இழுக்கிறது. குறை சொல்வதற்கு ஒன்றுமே இல்லை.
மாடர்ன் ஸ்கோடா கார்களின் அனைத்து பண்புகளையும் ஸ்லாவியா கொண்டுள்ளது. முன் பகுதியில் ஸ்கோடா நிறுவனத்திற்கே உரித்தான பட்டர்ஃபிளை க்ரில் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை சுற்றிலும் க்ரோம் கொடுக்கப்பட்டுள்ளது. க்ரில் அமைப்பின் பக்கவாட்டில் இருபுறமும் 'L' வடிவ எல்இடி பகல் நேர விளக்குகள் உடன் எல்இடி ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த க்ரில் அமைப்பும், ஹெட்லேம்ப்களும் தனித்துவமான தோற்றத்தை ஸ்கோடா ஸ்லாவியா காருக்கு வழங்குகின்றன.
அதே சமயம் ஸ்கோடா ஸ்லாவியா காரில் வட்ட வடிவ பனி விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஹாலோஜன் பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன. பானெட் மீது உள்ள கேரக்டர் லைன்கள் (Character Lines) இந்த காரை இன்னும் கவர்ச்சியாக காட்டுகின்றன. சற்று முரட்டுத்தனமான தோற்றத்தையும் இவை ஸ்கோடா ஸ்லாவியா காருக்கு வழங்குகின்றன. ஸ்கோடா ஸ்லாவியா காரின் பக்கவாட்டு பகுதியிலும் கேரக்டர் லைன்களை காண முடிகிறது.

அத்துடன் டோர் ஹேண்டில்களில் க்ரோம் பட்டை வழங்கப்பட்டுள்ளது. இது தனித்துவமான டிசைனை பெற்றுள்ளது. முன் பக்க ஃபெண்டர்களின் மீது ஸ்கோடா பேட்ஜ் வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதே சமயம் சுறா துடுப்பு ஆன்டெனா கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இது பிரீமியமான உணர்வை கொடுக்கிறது.
ஸ்கோடா ஸ்லாவியா காரில், டைமண்ட்-கட், ட்யூயல்-டோன் 16 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அலாய் வீல்களும் கவர்ச்சியாக உள்ளன. இவை 10 ஸ்போக் வீல்கள் ஆகும். தனித்துவமான பேட்டர்னை (Pattern) அவை கொண்டுள்ளன. இது உண்மையிலேயே மிகவும் ஸ்டைலாக உள்ளது. டாப் வேரியண்ட்டில் மட்டுமே இந்த அலாய் வீல் டிசைன் கிடைக்கும்.
ஸ்கோடா ஸ்லாவியா காரில், 2 அலாய் வீல் ஆப்ஷன்களும், ஒரு ஸ்டீல் வீல் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த காரின் ஆக்டிவ் வேரியண்ட்டில் ஸ்டீல் வீல்களும், ஆம்பிஷன் வேரியண்ட்டில் சிங்கிள்-டோன் அலாய் வீல்களும் வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம் டாப் மாடலான ஸ்டைல் வேரியண்ட், இந்த ட்யூயல்-டோன் அலாய் வீல்களை பெற்றுள்ளது.

அதேபோல் இந்த காரின் பின் பக்கமும் கவர்ச்சிகரமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. இங்கே எல்இடி டெயில் லேம்ப்கள்தான் உங்களின் கவனத்தை ஈர்க்கும் முதல் விஷயமாக இருக்கும். அதே சமயம் 'பூட் லிட்' மீது 'SKODA' என வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த காரின் பின் பக்க பம்பர் பெரியதாக இருக்கிறது. க்ரோம் பட்டையையும் இது பெற்றுள்ளது. டிசைனை பொறுத்தவரை சிறு சிறு விஷயங்கள் கூட கவனம் ஈர்க்கும் வகையில் இருக்கின்றன.
ஒட்டுமொத்தத்தில் ஸ்கோடா ஸ்லாவியா கார் அற்புதமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. சாலையில் இந்த காரை நீங்கள் ஓட்டி சென்றால், அனைவரின் கவனமும் உங்கள் மீது திரும்பும் என்பதில் சந்தேகமில்லை.

காக்பிட் & இன்டீரியர்
பொதுவாக ஸ்கோடா நிறுவனத்தின் செடான் கார்கள் சொகுசான இன்டீரியருக்கு பெயர் பெற்றவை. இதன்படி ஸ்கோடா ஸ்லாவியா காரின் இன்டீரியரும் பிரீமியமாக உள்ளது. பொதுவாக ஸ்கோடா கார்களின் கதவை திறக்கும்போது அதிக எடை கொண்டதாக இருக்கும். இதன்படிதான் ஸ்லாவியா காரும் உள்ளது.
கதவை திறந்து உள்ளே சென்றதும், விசாலமான மற்றும் ட்யூயல்-டோன் (கருப்பு/பழுப்பு) இன்டீரியர் நம்மை வரவேற்கிறது. உள்ளே சென்ற உடனேயே இது பிரீமியமான கார் என்பதை நீங்கள் உணர்ந்து விடுவீர்கள். ஸ்கோடா குஷாக் காரில் வழங்கப்பட்டுள்ள அதே 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல்தான் ஸ்கோடா ஸ்லாவியா காரிலும் வழங்கப்பட்டுள்ளது. இதுதான் உங்களின் கவனத்தை ஈர்க்கும் முதல் விஷயமாக இருக்கும். மியூசிக் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கான கண்ட்ரோல்கள் ஸ்டியரிங் வீலில் வழங்கப்பட்டுள்ளன. நாங்கள் ஓட்டியது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் உடன் கூடிய டாப் மாடல் ஆகும். இந்த மாடலில் ஸ்டியரிங் வீலின் பின்னால் பேடில் ஷிஃப்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்டியரிங் வீலுக்கு பின்னால், 8 இன்ச் விர்ச்சூவல் காக்பிட் இடம்பெற்றுள்ளது. இந்த டிஸ்ப்ளேவை டிரைவர் தனது தேவைக்கு ஏற்ப 'கஸ்டமைஸ்' செய்து கொள்ள முடியும். இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்ல முடியும், தற்போதைய எரிபொருள் சிக்கனம், சராசரி எரிபொருள் சிக்கனம், எரிபொருள் அளவு, ஓடோமீட்டர், ஸ்பீடோமீட்டர் உள்பட பல்வேறு தகவல்களை இது காட்டுகிறது. இது பிரீமியம் ஆகவும், ஃபேன்ஸியாகவும் இருக்கிறது. ஆனால் இந்த காரின் டேஷ்போர்டு, ஹார்டு-டச் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இன்டீரியரை பொறுத்தவரையில், இது ஒன்றுதான் ஏமாற்றமாக உள்ளது. ஆனால் இது பார்ப்பதற்கு பிரீமியமான சாஃப்ட்-டச் பிளாஸ்டிக் போன்றுதான் தோற்றமளிக்கிறது.

டேஷ்போர்டின் மைய பகுதியில், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சிஸ்டத்துடன் உங்கள் ஸ்மார்ட்போனை இணைப்பது மிகவும் எளிமையானது. இந்த தொடுதிரை பயன்படுத்துவதற்கு நன்றாக இருப்பதுடன், வேகமாக செயல்படுகிறது.
ஸ்கோடா ஸ்லாவியா காரில் உயர்தரமான ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. டாப் மாடலான ஸ்டைல் வேரியண்ட்டில் சப்-வூஃபரும் இடம்பெற்றுள்ளது. பூட் பகுதியில் ஸ்பேர் வீலுக்கு உள்ளே சப்-வூஃபரை ஸ்கோடா நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த 'பிளேஸ்மெண்ட்' இடத்தை மிச்சப்படுத்தினாலும், ஒலி தரம் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஒலி தரம் முன்னேற்றம் காண்பது அவசியம்.
இந்த காரின் மிக முக்கியமான வசதிகளில் ஒன்றாக, ஸ்கோடா கனெக்ட் டெலிமாட்டிக்ஸ் சொல்யூசன் (Skoda Connect Telematics Solution) உள்ளது. உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் ஸ்கோடா ஸ்லாவியா காருடன் தொடர்ந்து இணைந்திருக்க இது அனுமதிக்கிறது. எனினும் காரின் எந்தவொரு அம்சத்தையும் ரிமோட் முறையில், அதாவது தொலைவில் இருந்து கட்டுப்படுத்துவதற்கு இது அனுமதிக்காது. எனவே குளிர்ச்சியான கேபினுக்குள் நுழைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அதற்கு 'குட்-பை' சொல்லி விடுங்கள். நீங்கள் உள்ளே சென்று வேண்டுமானால், கேபினை குளிர்ச்சியாக்கி கொள்ள முடியும். ஸ்கோடா கனெக்ட் சூட்டில் (Skoda Connect Suite) நிறைய வசதிகளை நிச்சயமாக சேர்க்க வேண்டும்.

இன்போடெயின்மெண்ட் திரைக்கு கீழே சென்டர் ஏசி வெண்ட்களும், அதற்கு கீழே ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோலுக்கான கண்ட்ரோல்களும் அமைந்துள்ளன. ஏசி-யை கட்டுப்படுத்துவதற்கு பட்டன்களோ, ஸ்லைடர்களோ அல்லது நாப்களோ (Knobs) இல்லை. டச் பேனல் (Touch Panel) மூலமாகவே கட்டுப்படுத்துதல் நடக்கிறது. இது பிரீமியமான உணர்வை தருகிறது.
இந்த காரின் சென்டர் கன்சோலும் பிரீமியமாக இருக்கிறது. கியர் லிவரில் லெதர் பூட் (Leather Boot) வழங்கப்பட்டுள்ளது. கியர் லிவருக்கு முன்னால் உங்கள் ஸ்மார்ட்போனை வைப்பதற்கான இடம் உள்ளது. இது வயர்லெஸ் சார்ஜராகவும் செயல்படும். ஸ்மார்ட்போன் போன்றவற்றை சார்ஜ் செய்து கொள்வதற்கு யூஎஸ்பி டைப்-சி போர்ட்களையும் ஸ்கோடா நிறுவனம் வழங்கியுள்ளது. அத்துடன் ஸ்கோடா ஸ்லாவியா காரில் ஆம்பியண்ட் லைட் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

சௌகரியம், நடைமுறை பயன்பாடு & பூட் ஸ்பேஸ்
சௌகரியம் மற்றும் நடைமுறை பயன்பாடு ஆகிய விஷயங்களில் ஸ்கோடா கார்கள் எப்போதுமே பிரகாசமாக ஒளிரும். இதற்கு ஸ்லாவியாவும் விதிவிலக்கு அல்ல. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இந்த காரில் ட்யூயல்-டோன் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. டாப் மாடலான ஸ்டைல் வேரியண்ட்டில் மட்டுமே ட்யூயல்-டோன் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி வழங்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மற்ற வேரியண்ட்களில் சிங்கிள்-டோன் ஃபேப்ரிக் இருக்கைகள்தான் கொடுக்கப்படுகின்றன.
ஸ்கோடா ஸ்லாவியா காரின் அனைத்து இருக்கைகளும் சௌகரியமாக உள்ளன. இந்த காரின் முன் பக்க இருக்கைகள் வெண்டிலேஷன் (Ventilation) வசதியையும் பெற்றுள்ளன. இது கூடுதல் சௌகரியத்தை வழங்குகிறது. தொலைதூர பயணங்களை மேற்கொண்டாலும் அவ்வளவாக களைப்பு தெரியாது.

இந்த காருடன் செலவிடுவதற்கு எங்களுக்கு மிக குறைந்த நேரம் மட்டுமே கிடைத்தது. இருப்பினும் தொலைதூர பயணங்களிலும் நல்ல சௌகரியம் கிடைக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியும். இந்த காரின் பின் பகுதியும் விசாலமாகவும், வசதியாகவும் இருக்கிறது. ஸ்கோடா ஸ்லாவியா காரின் வீல்பேஸ் நீளம் 2,651 மிமீ ஆகும். இதன் காரணமாக தாரளமான இடவசதி கிடைக்கிறது. அதே சமயம் இந்த காரின் அகலம் 1,752 மிமீ ஆகும். எனவே பின் இருக்கைகளில் தாராளமாக 3 பேர் அமரலாம். அத்துடன் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் பின் பகுதி பயணிகளுக்கு கூடுதல் சௌகரியத்தை வழங்குகிறது.

ரியர் ஏசி வெண்ட்கள் மற்றும் 2 டைப்-சி சார்ஜிங் போர்ட்களையும் பயணிகள் பயன்படுத்தி கொள்ள முடியும். ஸ்கோடா ஸ்லாவியா காரின் பின் பகுதியில் கப் ஹோல்டர்களுடன் மடித்து வைக்க கூடிய ஆர்ம்ரெஸ்ட் வழங்கப்பட்டுள்ளது. பின் பகுதியில் 3 பயணிகள் அமரவில்லை என்றால், இதனை சௌகரியமான பயன்படுத்தி கொள்ளலாம். ஸ்கோடா ஸ்லாவியா காரில் ஸ்டோரேஜ் ஸ்பேஸ்களும் அதிகளவில் உள்ளன. எனவே நடைமுறை பயன்பாட்டிலும் இந்த கார் தலைசிறந்து விளங்குகிறது.
ஸ்கோடா ஸ்லாவியா காரின் பூட் ஸ்பேஸ் 521 லிட்டர்கள் ஆகும். எனவே லக்கேஜ்களை வைப்பதற்கு பிரச்னை இருக்காது. அதே சமயம் இந்த காரின் பின் இருக்கைகளை மடக்கி வைத்து கொள்ள முடியும். அப்படி செய்தால் பூட் ஸ்பேஸ் 1,050 லிட்டர்களாக அதிகரிக்கும் என ஸ்கோடா நிறுவனம் தெரிவித்துள்ளது. லக்கேஜ்களை வைப்பதற்கு கூடுதல் இடவசதி தேவைப்பட்டால் நீங்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.

இன்ஜின் செயல்திறன் மற்றும் ஓட்டுதல் அனுபவம்
ஸ்கோடா நிறுவனத்தின் கார்கள் சொகுசு வசதிகளில் மட்டுமின்றி, செயல்திறனிலும் தலைசிறந்து விளங்கும். நாங்கள் ஓட்டிய ஸ்கோடா ஸ்லாவியா 1.5 லிட்டர் இன்ஜின் மாடல் அதற்கு மிகச்சிறந்த ஒரு உதாரணம். ஸ்கோடா குஷாக் காரில் பொருத்தப்பட்டுள்ள அதே 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்தான் ஸ்கோடா ஸ்லாவியா காரிலும் வழங்கப்பட்டுள்ளது. ஸ்கோடா ஸ்லாவியா காரின் இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் காம்பினேஷன்கள், ஸ்கோடா குஷாக் காரில் இருந்து பெறப்பட்டுள்ளன. ஸ்கோடா ஸ்லாவியா காரில் 2 இன்ஜின் தேர்வுகளும், 3 கியர் பாக்ஸ் தேர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்படி 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகிய இன்ஜின் தேர்வுகளில் ஸ்கோடா ஸ்லாவியா கார் கிடைக்கும். இந்த ரிவியூ-வில் பெரிய மற்றும் சக்தி வாய்ந்த 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம்.
இது நான்கு-சிலிண்டர், 1.5 லிட்டர் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 5,000 ஆர்பிஎம்மில் 148 பிஹெச்பி பவரையும், வெறும் 1,500 ஆர்பிஎம்மில் 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில், 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் மாடலைதான் நாங்கள் ஓட்டி பார்த்தோம்.
ஆரம்பத்தில் இருந்தே இந்த இன்ஜின் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜின் மிகவும் அமைதியாக இருக்கிறது. பெரிய அளவில் சத்தம் வருவதில்லை.

டிஎஸ்ஜி கியர் பாக்ஸை பயன்படுத்துவது எளிமையாக உள்ளது. இந்த 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் நன்றாக பொருந்தி போகிறது. இவற்றை 'பர்பெஃக்ட் மேட்ச்' என சொல்லலாம். டிரைவ் மோடில் கூட கியர் மாற்றங்கள் வேகமாகவும், மென்மையாகவும் உள்ளது. ஸ்போர்ட் மோடில் இது ஆக்ரோஷமாக மாறுகிறது. ஆனால் இதனை நாங்கள் குறைசொல்லவில்லை. இதனை Fun-to-drive என சொல்லலாம். அதே சமயம் மேனுவல் மோடில், கிட்டத்தட்ட மேனுவல் கியர் பாக்ஸ் மாடலை போலவே கியர்கள் மாறுகின்றன. அத்துடன் பேடில் ஷிஃப்டர்களும் பயனுள்ளதாக இருக்கிறது. அதே நேரத்தில் நகர்ப்புறங்களிலும், மெதுவாக ஊர்ந்து செல்லும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளிலும் என அனைத்து இடங்களிலும் ஸ்கோடா ஸ்லாவியா காரின் இந்த இன்ஜின் சிறப்பாக உள்ளது. இந்த இன்ஜின் எளிதாக வேகம் எடுக்கிறது. எந்தவொரு சூழலிலும் அழுத்தத்தை எதிர்கொள்ளவில்லை.
இதுதவிர ஸ்கோடா ஸ்லாவியா காரின் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்ட மாடலையும் நாங்கள் ஓட்டி பார்த்தோம். இந்த கியர் பாக்ஸ் மிகவும் அருமையாக உள்ளது. கார் ஆர்வலர்கள் இதனை நிச்சயமாக விரும்புவார்கள். அதே நேரத்தில் கிளட்க் இலகுவாகவும், பயன்படுத்துவதற்கு எளிமையாகவும் உள்ளது. இந்த இன்ஜினுடன் வழங்கப்படக்கூடிய இரண்டு கியர் பாக்ஸ் தேர்வுகளும் சிறப்பாக உள்ளன.

ஸ்கோடா ஸ்லாவியா காரில் ஓரளவிற்கு பாடி ரோல் உள்ளது. ஆனால் புகார் சொல்லும் அளவிற்கு எல்லாம் இல்லை. எனினும் முன் பகுதியில் இருப்பவர்களை காட்டிலும் பின்னால் இருப்பவர்கள் அதிக பாடி ரோலை உணர்வார்கள். அதே நேரத்தில் இந்த காரின் ஸ்டியரிங் வீல், பொதுவான ஸ்கோடா உணர்வை தருகிறது. குறைவான வேகத்தில் ஸ்டியரிங் வீல் இலகுவாக உள்ளது. எனவே நகர பகுதிகளில் எளிமையாக பயணிக்க முடிகிறது. அதே சமயம் வேகம் கூட கூட ஸ்டியரிங் சிஸ்டம் இறுக்கம் பெறுகிறது. இதன் மூலம் வேகமாக பயணிக்கும்போது டிரைவரின் நம்பிக்கை அதிகரிக்கிறது. அதே நேரத்தில் இந்த காரின் பிரேக்கிங் செயல்திறன் போதுமான அளவிற்கு நன்றாக உள்ளது. அதே சமயம் ஸ்கோடா ஸ்லாவியா காரின் என்விஹெச் லெவல்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. சத்தம் இன்னும் கொஞ்சம் குறைவாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் உங்களுக்கு நிச்சயமாக ஏற்படாது.

பாதுகாப்பு மற்றும் முக்கியமான வசதிகள்
பொதுவாக ஸ்கோடா கார்கள் அனைத்தும் சிறப்பான கட்டுமான தரத்துடன், நிறைய பாதுகாப்பு வசதிகளையும் பெற்றிருக்கும். ஸ்கோடா ஸ்லாவியா காரும் அதற்கு விதிவிலக்கு கிடையாது.
ஸ்கோடா ஸ்லாவியா 1.5 பாதுகாப்பு வசதிகள்
- 6 ஏர்பேக்குகள்
- இபிடி உடன் ஏபிஎஸ்
- மல்டி-கொலிசன் பிரேக்
- பார்க் டிஸ்டன்ஸ் கண்ட்ரோல்
- டிராக்ஸன் கண்ட்ரோல்
- எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம்
- ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் & ஹில் ஹோல்டு கண்ட்ரோல்
- ரோல்ஓவர் ப்ரொடெக்ஸன்
- எல்இடி லைட்கள்
- கண்ட்ரோல்கள் உடன் கூடிய ஸ்டியரிங் வீல்
- முன் பகுதியில் வென்டிலேட்ட் இருக்கைகள்
- ஆம்பியண்ட் லைட்டிங்
- 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட்
- ஸ்கோடா 8 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம்
- க்ரூஸ் கண்ட்ரோல்
- டைப்-சி சார்ஜிங் போர்ட்கள்
- ஆக்டிவ்
- ஆம்பிஷன்
- ஸ்டைல்
- டொராண்டோ ரெட்
- கேண்டி ஒயிட்
- கார்பன் ஸ்டீல்
- ரெஃப்லெக்ஸ் சில்வர்
- க்ரிஸ்டல் ப்ளூ
ஸ்கோடா ஸ்லாவியா 1.5 முக்கியமான வசதிகள்
வேரியண்ட்கள் மற்றும் வண்ண தேர்வுகள்
ஸ்கோடா ஸ்லாவியா கார் மொத்தம் 3 வேரியண்ட்களிலும், 5 வண்ண தேர்வுகளிலும் கிடைக்கும்.
ஸ்கோடா ஸ்லாவியா வேரியண்ட்கள்
ஸ்கோடா ஸ்லாவியா வண்ண தேர்வுகள்
டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?
ஸ்கோடா நிறுவனத்தில் இருந்து வெளிவந்துள்ள மற்றொரு பிரீமியமான செடான் காராக ஸ்லாவியா உள்ளது. இந்திய சந்தையில் ஸ்கோடா நிறுவனத்திற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஸ்லாவியா ஈட்டி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக ஸ்கோடா ஸ்லாவியா இருக்கும்.


Click it and Unblock the Notifications








