ரிவியூ செய்ய-போயி மனச பறிகொடுத்துட்டோம்... டாடாவோட கார்தானா இது! அனைத்திலும் அசத்தும் அல்ட்ராஸ் ஐசிஎன்ஜி!..
சிஎன்ஜி கார்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அவை நல்ல மைலேஜை தரும், பெட்ரோல்-டீசல் ஆகியவற்றைக் காட்டிலும் குறைவான விலையில் அது விற்பனைக்குக் கிடைக்கும். அதுதவிர, பராமரிப்பு செலவும் குறைவு. இதுபோன்ற காரணங்களுக்காக சிஎன்ஜி கார்கள் இந்தியாவில் மிக வேகமாக பிரபலமடைந்துக் கொண்டிருக்கின்றது.
அதேவேளையில், குறிப்பிட்ட சில காரணங்களுக்காக ஒரு சிலர் சிஎன்ஜி கார்களை வாங்குவதைத் தவிர்க்கின்றனர். அதில் முக்கிய ஒன்றாக பூட் ஸ்பேஸ் இருக்கின்றது. இதுமட்டுமின்றி பெட்ரோல், டீசல் ஆகியவற்றைக் காட்டிலும் குறைவான பவரையே அது வெளியேற்றும் என்கிற காரணமும் சிஎன்ஜி கார்களைப் பலர் தவிர்க்க காரணமாக இருக்கின்றது.

இந்த இரண்டையும் காரணம் காட்டி சிஎன்ஜி வாகனமே வேண்டாம் நிற்பவர்கள் ஒரு சிலர் இருக்கின்றனர். இவர்களையும் சேர்த்து கவர வேண்டும் என்கிற நோக்கிலேயே டாடா ஓர் புதிய சிஎன்ஜி காரை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. தனது புகழ்பெற்ற கார் மாடலான அல்ட்ராஸ் பிரீமியம் தர ஹேட்ச்பேக் கார் மாடலிலேயே புதிதாக சிஎன்ஜி தேர்வை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.
இந்த காரில் அனைத்திலும் மிக மிக சிறப்பான காராகக் காட்சியளிக்கின்றது. மிக முக்கியமாக சிஎன்ஜி கார் என்றாலே பூட் ஸ்பேஸ் இருக்காது என்கிற கருத்து அனைவரிடத்திலும் பரவலாக தென்படுகின்றது. இந்த சூழலில் இந்த கார் (டாடாவின் அல்ட்ராஸ் சிஎன்ஜி) மிக தாராளமான பூட் ஸ்பேஸுடன் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இது ஒட்டுமொத்த மார்க்கெட்டையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது.

இதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த காரில் டூயல் (இரட்டை) சிலிண்டர் செட்-அப் யுக்தியை பயன்படுத்தி இருக்கின்றது. பொதுவாக சிஎன்ஜி கார்களில் ஒற்றை சிலிண்டர் மட்டுமே பெரிய உருவத்தில் வழங்கப்படும். இது லக்கேஜ்களை ஏற்றிச் செல்ல முடியாத அளவிற்கு மிகப் பெரியதாக இருக்கும்.
இந்த நிலையிலேயே, ஒரே சிலிண்டராக பெருசாக வழங்கப்படுவதற்கு பதிலாக இரட்டை சிலிண்டரை குறைவான இடத்தை மட்டுமே ஆக்கிரமிப்பு செய்யும் வகையில் டாடா அதன் அல்ட்ராஸ் சிஎன்ஜி காரில் வழங்கி இருக்கின்றது. இந்த அம்சம் இந்திய கார் பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இத்தகைய பன்முக அம்சங்கள் கொண்ட அல்ட்ராஸ் ஐசிஎன்ஜி எனும் பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் டாடா காரையே அண்மையில் நாங்கள் ரைடு ரிவியூ செய்து பார்த்தோம். இளைஞர்களின் பிரியமான சுற்றுலா தளமான கோவாவில் வைத்தே இதை செய்தோம். இந்த ரைடு ரிவியூ வாயிலாக அல்ட்ராஸ் சிஎன்ஜி கார்குறித்து அனைத்து சுவாரஷ்யமான தகவல்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். இந்த தகவலை விரிவாக காணலாம், வாங்க.
நடைமுறைக்கு ஏற்ற சிஎன்ஜி காரா டாடா அல்ட்ராஸ் ஐசிஎன்ஜி? டாடா அல்ட்ராஸ் நடைமுறைக்கு ஏற்ற பிரீமியம் தர ஹேட்ச்பேக் ஆகும். இதன் சிஎன்ஜி வெர்ஷனும் அப்படியான காராகவே உள்ளது. காரில் வழங்கப்பட்டிருக்கும் அம்சங்கள் தொடங்கி அதன் வெளிப்புற தோற்றம் வரையில் என அனைத்திலும் பிரீமியம் மிகுதியாக வழங்கப்பட்டிருக்கின்றது.

வழக்கமான பெட்ரோல் அல்ட்ராஸும், சிஎன்ஜி அல்ட்ராஸும் ஒரே தோற்றம் கொண்டதாகவே இருக்கின்றன. ஒற்றை பேட்ஜை தவிர. ஆமாங்க, டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜியை அடையாளம் காண்பதற்காக அல்ட்ராஸ் ஐசிஎன்ஜி எனும் பேட்ஜ் மட்டுமே அதில் கூடுதலாக சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இதைத்தவிர வெளிப்புறத்தில் வேறு எந்த மாற்றத்தையும் நம்மால் காண முடியாது.
காரின் உட்பக்கத்திற்குள் நுழையும்போதும், சிஎன்ஜி அல்ட்ராஸ் மற்றும் வழக்கமான அல்ட்ராஸ் இரண்டும் ஒரே மாதிரியானதாக இருப்பதை நம்மால் காண முடிகின்றது. அதேவேளையில் கணிசமான அளவில் புதிய அம்சங்களை நம்மால் காண முடிகின்றது. அந்தவகையில், சென்ட்ரல் கன்சோலில் பெட்ரோல்-சிஎன்ஜி எனும் பட்டன் புதிதாக வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்த பட்டனே காரை பெட்ரோல் அல்லது சிஎன்ஜி என தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள உதகின்றது. இதுதவிர சிஎன்ஜி காரிலேயே முதல் முறை என கூறும் அளவிற்கு வாய்ஸ்-ஆக்டிவேட்டட் சிங்கிள் பேனல் ரூஃப்பும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர இன்னும் பல அம்சங்கள் அல்ட்ராஸ் ஐசிஎன்ஜி காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
அந்தவகையில், பெட்ரோல் அல்ட்ராஸில் வழங்கப்பட்டு இருக்கும் அனைத்து வசதிகளையும் இதில் நம்மால் காண முடிகின்றது. ஓர் நடுநிலை அல்ட்ராஸின் தேர்வில் இடம் பெற்றிருக்கும் அனைத்து சிறப்பம்சங்களையும் இந்த காரில் நம்மால் காண முடிகின்றது. தானாக இயங்கும் ஹெட்லைட்டுகள், மழை பெய்தால் தானாக வைப் செய்யும் வைப்பர்கள், 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என எக்கசக்க அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

இந்த தொடுதிரையானது டாடாவின் ஐஆர்ஏ ஸ்மார்ட் கார் இணைப்பு வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதியும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, இன்னும் சில உயர்நிலை வசதிகளும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
அந்தவகையில், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஏர் ப்யூரிஃபையர், லெதராலான இருக்கைகள் மற்றும் டூயல் டோன் அலாய் வீல்கள் அல்ட்ராஸ் ஐசிஎன்ஜியில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இத்துடன் மிகப் பெரிய மாற்றாக இந்த காரின் பின்பக்கம் அமைந்துள்ளது. ஏற்கனவே கூறியதுதான் பின் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கும் இரட்டை சிஎன்ஜி சிலிண்டர் செட்-அப்பை பற்றிதான் கூறிக் கொண்டிருக்கின்றோம்.

இந்தியாவின் வேறு எந்த சிஎன்ஜி காரிலும் இந்த மாதிரியான ஓர் அமைப்பை நம்மால் பார்க்க முடியாது. ஒவ்வொரு சிலிண்டரும் 30 லிட்டர் கொள்ளளவுக் கொண்டவை ஆகும். இரண்டு சிலிண்டர்களிலும் சேர்த்து 60 லிட்டர் வரை சிஎன்ஜியை நிரப்பிக் கொள்ள முடியும். இந்த இரட்டை சிலிண்டர் செட்-அப்பின் வாயிலாகவே 210 லிட்டர் பூட் ஸ்பேஸ் கிடைக்கப் பெற்றிருக்கின்றது.
வழக்கமான அல்ட்ராஸின் பூட் ஸ்பேஸ் 345 லிட்டர் என்பது குறிப்பிடத்தகுந்தது. பிற சிஎன்ஜி கார்களில் இந்த அளவு ஸ்பேஸை எதிர்பார்க்க முடியாது. சின்ன லக்கேஜ் ஆனாலும் அதில் வைப்பது மிக சிரமமாக இருக்கும். இத்தகைய அவல நிலையையே தன்னுடைய மாறுபட்ட யுக்தியால் (இரட்டை சிலிண்டரை அறிமுகத்தால்) டாடா மோட்டார்ஸ் போக்கி இருக்கின்றது. ஆகையால், நடைமுறைக்கு ஏற்ற மிக மிக உகந்த சிஎன்ஜியாக அல்ட்ராஸ் ஐசிஎன்ஜி காட்சியளிக்கின்றது.

டாடா அல்ட்ராஸ் ஐசிஎன்ஜி எஞ்ஜின் அமைதியானதா மாறிவிட்டதா? டாடா மோட்டார்ஸ் அதன் பெட்ரோல் கார்கள் சிலவற்றில் பயன்படுத்தி வரும் 1.2 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் 3 சிலிண்டர் ரெவோட்ரான் மோட்டாரையே பயன்படுத்தி இருக்கின்றது. சிஎன்ஜியாலும் இயங்கும் வகையில் மாற்றங்களைச் செய்தே இந்த மோட்டாரை அது பயன்படுத்தி இருக்கின்றது.
அதேவேளையில் இது பெட்ரோலிலும் இயங்கும். பெட்ரோலில் இயங்கும்போது அதிக பவரை வெளியேற்றக் கூடியதாக இந்த மோட்டார் இருக்கும். 87 பிஎச்பி பவரையும் 115 என்எம் டார்க்கையும் பெட்ரோலில் இயங்கும்போது அது வெளியேற்றும். அதுவே, சிஎன்ஜியில் இயங்கும்போது 72.4 பிஎச்பி பவரையும், 103 என்எம் டார்க்கை மட்டுமே வெளிப்படுத்தும்.

எனவே சிஎன்ஜியில் இயங்கும்போது அல்ட்ராஸ் சற்றே அமைதியான பிள்ளையாக மாறிவிடும். டாடா அல்ட்ராஸ் ஐசிஎன்ஜி ஓர் முன்னியக்கம் கொண்ட காராகும். இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த காரில் உள்ள ஓர் சிலிண்டரில் கேஸ் தீர்ந்துவிட்டால் கார் நின்றுவிடுமா என்கிற சந்தேகம் உங்களுக்கு எழும்பலாம்.
இத்தகைய சிக்கல் ஏற்படாத வண்ணமே தன்னுடைய அல்ட்ராஸ் ஐசிஎன்ஜியை டாடா வடிவமைத்திருக்கின்றது. இதேபோல், புதிய ஸ்மார்ட் ஈசியூ சிஸ்டத்தையும் இந்த காரில் டாடா பயன்படுத்தி இருக்கின்றது. இந்த அம்சம் தானாகவே சிஎன்ஜி மோடிற்கு மாற உதவும். இந்த காரில் சிஎன்ஜி-யை நிரப்புவது மிகவும் சுலபமானது ஆகும்.

வெகு விரைவில் இரண்டு சிலிண்டர்களையும் ஃபில் செய்து கொள்ள முடியும். இதற்கான சிறப்பு நாஸில்களே இந்த சிலிண்டர்களில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர சிறிய ஸ்விட்ச் ஒன்று இதில் வழங்கப்பட்டு இருக்கும். அது ஃப்யூவல் ஃபில்லரின் மூடிகள் திறந்திருப்பதை உணர்ந்தால் தானாக இயங்கி கேஸ் வெளியேற்றத்தை தடுக்கும் வகையில் மூடிக்கொள்ளும்.
இதைத்தொடர்ந்து, அதிகப்படியான உஷ்னம் இருப்பதை இந்த கார் கண்டறிந்தால் சிஎன்ஜியை வளமண்டலத்தில் தானாகவே வெளியேற்றிவிடும். இதுபோல் இன்னும் பல பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், பிரேக் ஸ்வே கன்ட்ரோல் மற்றும் கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. டாடா அல்ட்ராஸ் ஓர் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டாடா அஸ்ட்ராஸ் எந்த அளவிற்கு திருப்தியான ரைடு அனுபவத்தை வழங்கியது? பெட்ரோல் அல்ட்ராஸைக் காட்டிலும் சிஎன்ஜி அல்ட்ராஸ் குறைவான பிஎச்பி மற்றும் டார்க்கையே வெளியேற்றும் என்பது குறைவான வேகத்தில் செல்லும்போது வரை உங்களால் உணர முடியாது. கொஞ்சம் வேகமாக செல்ல வேண்டும் என நினைத்து ஆக்சலரேஷனை அழுத்தும்போது மட்டுமே இதை நீங்கள் உணர்வீர்கள்.
ஆனால், நகர்புற பயன்பாட்டின் போது இந்த வித்தியாசங்கள் உங்களுக்கு பெரிதாக தெரியவே தெரியாது. இந்த உணர்வை நாங்கள் பெற்றோம். பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரண்டும் ஒரே மாதிரியாக இயங்குவதைப் போலவே உணர்வு கிடைக்கும். ஒருவேளை அதிக கியரில் இருக்கும்போது குறைவான rev கிடைப்பதாக நீங்கள் உணர்ந்தால், குறைவான கியருக்கு மாற்றி அதிலேயே பயணத்தைத் தொடரலாம்.

இதில் நல்ல ரெவ்வை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் மாற்றுவதும் மிக சுலபமாக உள்ளது. அதேவேளையில், சிஎன்ஜியால் இயங்கிக் கொண்டிருக்கும்போது, போதுமான அளவு சிஎன்ஜி இல்லை எனில் தானாகவே பெட்ரோலுக்கு மாறிவிடும் அம்சம் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றது.
ஆகையால், நடு ரோட்டில் எரிபொருள் இல்லாமல் வாகனம் நிற்கும் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. அதேவேளையில் எப்போதும் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரண்டும் காரில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதேநேரத்தில், நம்மாலும் பெட்ரோல்-சிஎன்ஜி மோட்களை மாற்றிக் கொள்ள முடியும். இதற்கான பட்டன் சென்ட்ரல் கன்சோலில் வழங்கப்பட்டிருக்கும்.

ஒரு சின்ன க்ளிக்கிலேயே இதை மாற்றிவிட முடியும். இந்த அம்சங்கள் அனைத்தும் மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களின் சிஎன்ஜி கார்களைக் காட்டிலும் டாடாவின் இந்த தயாரிப்பு மேம்பட்டது என்பதை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. மேலும், இந்த காரை ஓட்டி பார்த்தபோது சஸ்பென்ஷன் செட்-அப் லேசாக விறைப்பாக இருப்பதை நாங்கள் உணர்ந்தோம்.
பின் பகுதியில் இரண்டு சிலிண்டர்கள் இடம் பெற்றிருப்பதே இத்தகைய உணர்விற்கு காரணமாக இருக்கின்றது. ஆம், அதிக எடைக் காரணமாக வாகனம் மிகவும் தாழ்வானதாக மாறிவிடக் கூடாது என்பதற்காகவே அதிக விறைப்பு தன்மைக் கொண்ட சஸ்பென்ஷன்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஆனால், இந்த அம்சமே சில நேரங்களில் அசௌகரியமானதாக மாறிவிடுகின்றது.

குறிப்பாக, பள்ளம் மற்றும் மேடுகள் நிறைந்த சாலையில் பயணிக்கும்போது முதுகு வலியை ஏற்படுத்தக் கூடியதாக தெரிகின்றது. இதன் ஸ்டியரிங் வீல் பெட்ரோல் மாடலில் உள்ளதைப் போலவே இருக்கின்றது. இது மிக சிறந்த பயன்பாட்டு அனுபவத்தை வழங்கும் வகையில் இருக்கின்றது. உயர் வேகங்களில் இதன் வீல்கள் அதிக எடைக் கொண்டதாக தெரிகின்றது.
இது இயக்கத்தை மிகவும் சுவாரஷ்யமானதாக மாற்ற உதவுகின்றது. இத்துடன், மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்தை வழங்கும் விதமாக அல்ட்ராஸ் சிஎன்ஜி காரில் முன் மற்றும் பின் வீல்களில் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை சடன் பிரேக்கைகூட பெரிய அளவில் அலுங்கல், குலுங்கல் இல்லாததாக வழங்குகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காரில் நாங்கள் உணர்ந்த சிக்கல் என்னவென்றால், பிரேக் பெடல் கிளட்சிற்கு மிக அருகில் வழங்கப்பட்டிருப்பதால் அதை பயன்படுத்துவது சற்று சிரமமாக இருக்கின்றது. மற்றபடி நாங்கள் இந்த காரை ஓட்டி பார்த்ததில் அதன் பாதுகாப்பு திறனைப் போலவே அதிக ஸ்டார்களை மிக தாராளமாக வழங்கலாம். 4 முதல் 4.5 ஸ்டார்களை மிக தாராளமாக வழங்கலாம்.


Click it and Unblock the Notifications









