விரைவில் வரும் புதிய டாடா நானோ ஜென்எக்ஸ் பற்றிய ஒரு சிறப்பு பார்வை
வரும் 19ந் தேதி புதிய டாடா நானோ கார் விற்பனைக்கு வர இருக்கிறது. இதுவரை நானோ காரில் மாற்றங்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய மாடலாக அறிமுகம் செய்யப்பட்டாலும், இப்போது வர இருக்கும் புதிய நானோ ஜென்எக்ஸ் கார் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
இதற்கு காரணம், புதிய டாடா நானோ ஜென்எக்ஸ் கார் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மட்டுமின்றி, டிசைன் மாற்றங்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் சிறப்பம்சங்கள் புதிய டாடா நானோ காரில் இருக்கிறதா என்பதை ஸ்லைடரில் காணலாம்.

01. டிசைன்
புதிய மாடலில் ஸ்மோக்டு ஹெட்லைட், முன்புறத்தில் புதிய கிரில் மற்றும் புதிய பம்பர் அமைப்பு போன்றவற்றுடன் புதிய டாடா நானோ ஜென்எக்ஸ் வருகிறது. ஒட்டுமொத்த டிசைனில் பழைய நானோ டிசைனிலிருந்து அதிக மாற்றங்கள் தெரியவில்லை. பனிவிளக்குகள் அறையின் டிசைனும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

02. பின்புறத்தில் கதவு
இதன் முக்கிய அம்சம் பின்புறத்தில் பொருட்களை வெளியிலிருந்து வைத்து எடுப்பதற்கு வசதியாக பூட்ரூமை திறந்து மூடுவதற்கான கதவு கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 110 லிட்டர் கொள்ளளவு கொண்ட நானோ காரின் பூட்ரூமில் பொருட்களை எளிதாக வைத்து எடுக்கலாம். மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலில் 110 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஸ்டோரேஜ் அறையும், ஏஎம்டி மாடலில் 91 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூமும் இருக்கிறது. இதனை திறப்பதற்கு தனியாக லிவர் இல்லை. எனவே, சாவியால் மட்டுமே திறந்து மூட முடியும்.

03. எஞ்சின்
டாடா நானோவில் கூடுதல் சிசி கொண்ட எஞ்சின் பொருத்தினால் நன்றாக இருக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால், தற்போதைய மாடலில் இருக்கும் அதே 624சிசி பெட்ரோல் எஞ்சின்தான புதிய ஜென்எக்ஸ் மாடலிலும் இடம்பெற்றிருக்கிறது. இந்த எஞ்சின் 38.19 பிஎஸ் பவரையும், 51 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வழங்கும்.

04. கியர்பாக்ஸ்
புதிய நானோ ஜென்எக்ஸ் மாடலில் ஆட்டோமேட்டட் மேனுவல் கியர்பாக்ஸ் எனப்படும் புதிய வகை கியர்பாக்ஸ் அளிக்கப்படும். இந்த கியர்பாக்ஸ் கொண்ட மாடலில் க்ள்ட்ச் பெடல் இருக்காது. பிரேக் மற்றும் ஆக்சிலேட்டர் பெடல்கள் மட்டும்தான் என்பதால், ஓர் ஆட்டோமேட்டிக் கார் அனுபவத்தை வழங்கும். மேலும், நகரப்ப்புறத்தில் ஓட்டுவதற்கு எளிதாக இருக்கும். நம் நாட்டின் மிக குறைவான விலை கொண்ட ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடலாக புதிய நானோ கார் மாடல் வருகிறது.

05. மைலேஜ் விபரம்
புதிய டாடா நானோ ஜென்எக்ஸ் காரின் ஏஎம்டி மாடல் லிட்டருக்கு 21.9 கிமீ மைலேஜ் தரும் என்றும், மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 25.4 கிமீ மைலேஜ் தரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு 15 லிட்டர் பெட்ரோல் டேங்க் இருந்த நிலையில், தற்போது 24 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்குடன் வருகிறது டாடா நானோ.

06. உட்புற இடவசதி
பழைய மாடலுக்கும் இந்த புதிய மாடலுக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை. வழக்கம்போல் இந்த குட்டிக் காரின் உட்புறத்தில் 4 பேர் செல்வதற்கு சிறப்பான இடவசியை அளிக்கும். 5 பேர் வரை கூட செல்வதற்கான இடவசியை அளிக்கும். தலை இடிக்காத அளவு போதிய ஹெட்ரூமையும், கால்களை வசதியாக வைப்பதற்கு போதிய லெக்ரூம் இடவசிதியையும் அளிக்கிறது. இருக்கை அமைப்பில் மாற்றங்கள் இல்லை. அதிக பொருட்களை வைப்பதற்கு ஏதுவாக பின்புற இருக்கையை மடக்கி வைக்க முடியும்.

07. மீட்டர் கன்சோல்
புதிய ஜென்எக்ஸ் நானோ காரின் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் டேஷ்போர்டின் நடுவில் இடம்பெற்றிருக்கிறது. அனைவரும் இதனை விரும்பி ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியவில்லை. வெளிநாடுகளுக்கு இடதுபக்க மாடலுடன் தயாரிக்கும்போது, இந்த இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் நடுவில் இருந்தால் தயாரிப்பு செலவீனத்தை கட்டுப்படுத்த முடியும் என்ற நோக்கில் கொடுத்துள்ளனர். மீட்டர் கன்சோல் அனலாக் ஸ்பீடோமீட்டர் மற்றும் மின்னணு திரையுடன் வருகிறது. இந்த மின்னணு திரை மூலமாக சராசரி எரிபொருள் சிக்கனம், வண்டி ஓடிய தூரம், கடிகாரம், ட்ரிப் மீட்டர் போன்ற பல தகவல்களை பெற முடியும். ஏஎம்டி மாடலில் கியர் இண்டிகேட்டர் வசதியும் உள்ளது.

08. வசதிகள்
பழைய மாடலைவிட சற்று அடக்கமான ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டிருக்கிறது. புளூடூத் மற்றும் யுஎஸ்பி போர்ட்டுடன் கூடிய மியூசிக் சிஸ்டம், முன்புறத்திற்கான பவர் விண்டோஸ், சார்ஜிங் அவுட்லெட் ஆகியவை உள்ளன. திரும்பவும், கியர் லிவர் அருகில் பவர் விண்டோஸ் கொடுக்கப்பட்டிருப்பது அசகவுரியமான விஷயமாக கூறலாம்.

09. ஸ்டோரேஜ் வசதி
புதிய நானோ காரில் பயன்பாட்டிற்கு ஏற்ற அளவில் ஸ்டோரேஜ் வசதிகள் இல்லை. ஆவணங்களை வைத்துக் கொள்ளக்கூடிய வகையில், சிறிய டோர் பாக்கெட்டுகள் உள்ளன.

10. பாதுகாப்பு
முன்பைவிட பாதுகாப்பான கார் என்று டாடா மோட்டார்ஸ் பெருமை அடித்தாலும், எந்தவொரு நவீன பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெறவில்லை. ஏர்பேக், ஏபிஎஸ் போன்ற நவீன பாதுகாப்பு அம்சங்கள் இல்லை. 4 பேருக்கு மட்டும் சீட் பெல்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ரீஇன்ஃபோர்ஸ்டு பாடி என்பதால் கூடுதல் பாதுகாப்பு கொண்டதாக டாடா தெரிவிக்கிறது.

11. எதிர்பார்க்கும் விலை
டாடா நானோ ஏஎம்டி மாடல் ரூ.2.75 லட்சம் முதல் ரூ.3 லட்சத்திற்குள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

12. புதுசு ஓகேவா?
ஓகேதான். புதிய டாடா நானோ ஜென்எக்ஸ் மாடல் நகர்ப்புற பயன்பாட்டிற்கு சிறப்பானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சிறந்த மைலேஜ், அடக்கமான வடிவம், சரியான விலை போன்றவை நானோவுக்கு வலுசேர்க்கின்றன. மேலும், ஏஎம்டி மாடல் நகர்ப்புற பயன்பாட்டிற்கும், பெண்கள் ஓட்டுவதற்கும் சிறப்பான சாய்ஸ். ஆனால், ஒட்டுமொத்த மதிப்பீட்டில் சொல்லப் போனால், நானோ இன்னமும் பின்தங்கிய மாடலாகவே இருக்கிறது. கூடுதல் பாதுகாப்பு வசதிகள் இருந்தால் இந்த காரை பணத்திற்கு சிறந்த மதிப்பு கொண்ட மாடலாக கூறலாம். நெடுஞ்சாலை பயணத்திற்கு ஏற்றவாறு, இன்னமும் போதிய பாதுகாப்பு மற்றும் சக்தி கொண்ட மாடலாக இல்லை என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது.



Click it and Unblock the Notifications








