கிளட்சுக்கு குட்பை... பெஸ்ட் ஆட்டோமேட்டிக் ஹேட்ச்பேக் கார்கள்!
பெருநகரங்களில் மட்டுமன்றி சிறு நகரங்களையும் இன்று பல்கி பெருகி வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. எந்த பக்கம் திரும்பினாலும் விட மாட்டேன் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில், கார் ஓட்டுவது என்பது மிக சவாலான விஷயமாக மாறியிருக்கிறது.
அலுவலகத்தில் அலுத்து சலுத்து காருக்குள் ஏறினால், போக்குவரத்து நெரிசலில் காரை செலுத்தி வீடு வந்து சேர்வதற்குள் பாதி திராணி போய்விடுகிறது. இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலில் எளிதாக ஓட்டப் பயன்படும் ஆட்டோமேட்டிக் கார்கள் மீதான கவனம் அதிகரித்து வருகிறது. கிளட்ச் தொல்லையிலிருந்து விடுபட்டு சற்று நிம்மதியாக கார் ஓட்டுவதற்கு ஆட்டோமேட்டிக் கார்கள் சிறந்ததாக இருக்கின்றன.
மைலேஜ் சற்று குறைந்தாலும், போக்குவரத்து நெரிசலில் முட்டி முணங்காமல் வருவதற்கு பயன்படுவதும், பெண்களுகும் எளிதாக ஓட்டும் வசதி இருப்பதால் விற்பனையும் மெல்ல அதிகரித்து வருகிறது. நம் நாட்டு மார்க்கெட்டில் விற்பனையாகி வரும் சிறந்த ஆட்டோமேட்டிக் ஹேட்ச்பேக் கார்கள் பற்றியும், இந்த பட்டியலில் உங்களது எதிர்பார்ப்புக்கும், தேவைக்கும் சிறந்த கார்களையும் தேர்வு செய்து வழங்கியுள்ளோம்.

மாருதி ரிட்ஸ்
மாருதி ரிட்ஸ் காரில் விஎக்ஸ்ஐ பெட்ரோல் வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல் கிடைக்கிறது. சரியான விலை கொண்ட ஆட்டோமேட்டிக் ஹேட்ச்பேக் கார் என்பதோடு, மாருதியின் விற்பனைக்கு பிந்தைய சேவைத் தரமும் இந்த காரை நம்பி தேர்வு செய்ய வழிவிடுகிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் இயைந்து செயல்புரியும் இந்த காரின் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மிக மென்மையாக இருப்பதையும் சொல்லியாக வேண்டும். இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், பவர் விண்டோஸ், டில்ட் ஸ்டீயரிங் உள்ளிட்ட பல வசதிகள் இதில் உண்டு. அதேவேளை, இந்த காரில் ஸ்டீரியோ சிஸ்டம் இல்லாதது மிகப்பெரிய குறை.

ரிட்ஸ் ஆட்டோமேட்டிக்
விலை: ரூ.6.19 லட்சம்
டிரான்ஸ்மிஷன்: 4 ஸ்பீடு
மைலேஜ்: 17.16 கிமீ

ஹூண்டாய் கிராண்ட் ஐ10
ஹூண்டாய் சமீபத்தில் கொண்டு வந்த கிராண்ட் ஐ10 கார் மார்க்கெட்டில் தற்போது அதிகம் விரும்பப்படும் கார் மாடல் என்ற பெயரை பெற்றிருக்கிறது. சவுகரியமான இடவசதி, தரமான இன்டிரியர், கூடுதல் வசதிகளுடன் சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் கொண்டதாகவும் இருக்கிறது. அதேவேளை, மாருதி ரிட்ஸ் காருடன் ஒப்பிடுகையில், ஏபிஎஸ் உள்ளிட்ட வசதிகள் டாப் வேரியண்ட்டான அஸ்டாவில் கூட இல்லை என்பது மிகப்பெரிய மைனஸ்.

ஐ10 ஆட்டோமேட்டிக்
விலை
ஸ்போர்ட்ஸ்: ரூ.5.95 லட்சம்
அஸ்டா: ரூ.6.23 லட்சம்
டிரான்ஸ்மிஷன்: 4 ஸ்பீடு
மைலேஜ்: 18.9 கிமீ/லி

ஹோண்டா பிரியோ ஆட்டோமேட்டிக்
வாடிக்கையாளர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் ஹோண்டா பிரியோ ஆட்டோமேட்டிக் கிடைக்கிறது. நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு மிக எளிமையாக இருப்பதும், இதன் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் மிக சுகமான அனுபவத்தை தரும். மாருதி ரிட்ஸ் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரை விட நெடுஞ்சாலைகளிலும் சிறப்பான பெர்ஃபார்மென்சை வழங்குகிறது. ஏபிஎஸ், இபிடி மற்றும் முன்புற ஏர்பேக்குகள் இதில் நிரந்தர அம்சங்கள். பின்புற தோற்றம் மட்டுமே மைனசாக கூறலாம்.

பிரியோ ஆட்டோமேட்டிக்
விலை: ரூ.6.12 லட்சம்
டிரான்ஸ்மிஷன்: 5 ஸ்பீடு
மைலேஜ்: 18.9 கிமீலி

ஹூண்டாய் ஐ20 ஆட்டோமேட்டிக்
ஸ்போர்ட்ஸ் டாப் வேரியண்ட்டில் ஹூண்டாய் ஐ20 காரின் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல் கிடைக்கிறது. விலை சற்று அதிகம் என்றாலும் தோற்றம், தரம், வசதிகள் என அனைத்திலும் சிறந்த கார். நகர்ப்புறம், நெடுஞ்சாலை என இரண்டிலும் சிறப்பான ஓட்டுதல் தரத்தை வழங்குகிறது. பிரியோவில் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும் நிலையில், இந்த காரில் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது பெர்ஃபார்மென்ஸில் சிறிது ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும், கொடுக்கும் விலைக்கு ஏற்ற சொகுசான ஹேட்ச்பேக் காரை விரும்புவோர்க்கு சிறந்த சாய்ஸ்.

ஐ20 ஆட்டோமேட்டிக்
விலை: ரூ.7.88 லட்சம்
டிரான்ஸ்மிஷன: 4 ஸ்பீடு
மைலேஜ்: 15.04 கிமீலி

நிசான் மைக்ரா
பிரியோவுடன் மிக நெருக்கமான அம்சங்களை கொண்டிருக்கும் கார் மாடலாக நிசான் மைக்ரா ஆட்டோமேட்டிக் காரை குறிப்பிடலாம். அனைத்து சாலை நிலைகளிலும் சிறந்த ஓட்டுதல் தரம், கையாளுமை உள்ளிட்டவற்றில் சிறந்த ஆட்டோமேட்டிக் கார். வசதிகளை பொறுத்தவரையில் பிரியோவை விஞ்சுகிறது மைக்ரா. சிறந்த இடவசதியுடன், கூடுதல் பூட்ரூமையும் கொண்டிருக்கிறது. இவையெல்லாவற்றையும் விட சிவிடி டிரான்ஸ்மிஷன் கொண்ட மைக்ரா அதிக மைலேஜை வழங்குகிறது.

மைக்ரா ஆட்டோமேட்டிக்
விலை: ரூ.6.49 லட்சம்
டிரான்ஸ்மிஷன்: (Continuously variable transmission)சிவிடி
மைலேஜ்: 19.34 கிமீ/லி

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி டிஎஸ்ஐ
ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி டிஎஸ்ஐ காரின் ஆட்டோமேட்டிக் மாடல் போட்டியாளர் யாரும் இல்லாத இடத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சிறந்த பெர்ஃபார்மென்ஸ் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது. எனவே, இதனை நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு ஏற்ற காராக குறிப்பிட முடியாது. ஒரு பவர்ஃபுல்லான ஆட்டோமேட்டிக் ஆல் ரவுண்டராக கூறலாம். இதனால், நகர்ப்புறத்திற்கு ஏற்ற கார் இல்லை என்றும் கூற முடியாது. பிற மாடல்களை போலவே நகர்ப்புறத்திற்கும் ஏற்றதாக இருப்பதுடன், நெடுஞ்சாலைகளில் சிறப்பான பெர்ஃபார்மென்ஸை வழங்கும் ஹேட்ச்பேக் காராக கூறலாம். மிட்சைஸ் செடான் கார்களில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் இந்த காரில் கொடுக்கப்பட்டிருப்பதால் ஒப்பீடு அவசியம் இல்லை.

போலோ ஜிடி ஆட்டோமேட்டிக்
விலை: ரூ.7.99 லட்சம்
டிரான்ஸ்மிஷன்: 7 ஸ்பீடு டிஎஸ்ஜி
மைலேஜ்: 17.2 கிமீலி

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு
வசதிகள், ஓட்டுதல் தரம், விலை என எல்லா வகையிலும் ஹோண்டா பிரியோதான் நல்ல சாய்ஸ். ஆனால், கொஞ்சம் பிரிமியம் அம்சங்கள் மற்றும் கூடுதல் இடவசதியை மனதில் வேண்டுவோர்க்கு நிசான் மைக்ரா பக்கம் கை நீட்டிவிடலாம். பட்ஜெட் பற்றி கவலையில்லை, சிறந்த பெர்ஃபார்மென்ஸ் கொண்ட ஆட்டோமேட்டிக் ஹேட்ச்பேக் கார்தான் வேண்டும் என்பவர்களுக்கு போலோ ஜிடி மற்றும் ஹூண்டாய் ஐ20 ஆகிய இரண்டு கார்களுமே சிறந்த சாய்ஸ். கார் மட்டும் சிறப்பாக இருந்தால் போதுமா? என்று கேள்வி எழுப்புவர்களுக்கு சிறப்பான சர்வீஸ் நெட்வொர்க் மற்றும் சேவையை வழங்குவதில் ஃபோக்ஸ்வேகனை விட ஹூண்டாய் சிறந்து விளங்குவதால், இறுதியில் ஐ20தான் சிறப்பானதாக கூற முடியும்.


Click it and Unblock the Notifications








