டொயோட்டா லிவாவில் கொடைக்கானலுக்கு ஒரு உலா!
பெரிய கார் செக்மென்ட்டில் கோலோய்ச்சி வரும் டொயோட்டா வர்த்தக விரிவாக்கத்தின் பொருட்டு அறிமுகம் செய்த மாடல் லிவா. அதிகம் விற்பனையாகும் இந்த மார்க்கெட்டில் மாருதி, ஹூண்டாய் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு மத்தியில் டொயோட்டா லிவா எடுபடாதது உண்மைதான்.
சில நேரங்களில் நல்ல மாடலாக இருந்தாலும், டிசைன், விற்பனை கொள்கை, சர்வீஸ் போன்றவற்றால் விற்பனை பாதிக்கப்படுவதுண்டு. அந்த பட்டியில் உள்ள மாடல்களில் டொயோட்டா லிவாவும் துரதிருஷ்டவசமாக இடம்பெற்றுவிட்டது. ஹேட்ச்பேக் கார் செக்மென்ட்டில் போட்டி அதிகம். அத்துடன் அழகியலும் முக்கிய விஷயமாக பார்க்கப்படுவதால் இதுபோன்ற நல்ல கார் மாடல்கள் பின்தங்கி இருக்கின்றன.
அந்த விதத்தில் விற்பனையில் குறைவாக இருந்தாலும், பல விதங்களில் சிறந்த மாடலாக இருந்து வரும் டொயோட்டா லிவா டீசல் காரை ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் டிரைவ்ஸ்பார்க் டீமிற்கு டொயோட்டா வழங்கியது.
பல இடங்களை பார்த்துவிட்டு இறுதியில் பெங்களூர் டு கொடைக்கானல் என பயணத் திட்டம் தேர்வானது. சிறந்த நெடுஞ்சாலைகள், அழகிய கொடைக்கானல் மலைச்சாலைகளில் வைத்து இந்த காரை ஓட்டிப் பார்க்கும் விதத்தில் இந்த பயணம் அமைந்தது. அந்த அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

வார இறுதி குதூகலம்...
கடந்த சனிக்கிழமை மதியம் கார் அலுவலகத்திற்கு வந்தது. அலுவலகத்தில் பணிகளை முடித்துக் கொண்டு, ஆயத்தமாகி மாலை கொடைக்கானல் நோக்கி டொயோட்டா லிவாவில் எமது உலாவை தொடங்கினோம்.

போக்குவர்த்து நெரிசல்...
வார இறுதியில், குறிப்பாக சனிக்கிழமை இரவுகளில் பெங்களூரின் முக்கிய சாலைகள் உள்ள பப்புகளும், பார்களும் பரபரப்பாக இருக்கும். அதுவே போக்குவரத்து நெரிசலுக்கும் காரணமாகிவிடும். எதிர்பார்த்தபடியே, எமது வழியில் போக்குவரத்து கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது. மெதுவாக ஓசூர் சாலையை பிடித்து போக்குவரத்து நெரிசலில் கரைந்தோம்.

சூப்பரு...
ஓசூரை கடந்து நெடுஞ்சாலையில் லிவாவை சீற விட்டோம். மிட் ரேஞ்ச்சில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துகிறது லிவா. பவர் டெலிவிரியும் மிக சீராக இருக்கிறது. லிவாவை பவரை பரிசோதித்துவிட்டு, எமது பவரை கூட்டிக் கொள்ள ஒரு தேனீர் இடைவேளை எடுக்க நிறுத்தி, மீண்டும் புறப்பட்டோம்.

வத்தலகுண்டு...
நள்ளிரவு ஒரு மணியளவில் வத்தலகுண்டு அடைந்திருந்தோம். அங்கு சென்றவுடன் தலப்பாக்கட்டி பிரியாணி ஓட்டல்தான் நினைவுக்கு வந்தது. கொடைக்கானல் வருபவர்களுக்கு இங்குள்ள தலப்பாக்கட்டி பிரியாணி ஓட்டல் ஓர் சிறப்பான உணவருந்தும் இடமாக இருக்கிறது. கால நேரம் எமக்கு ஒத்துழைக்காததால் ஏற்கனவே சென்ற நினைவுகளை சுமந்து கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.

குளு குளு வரவேற்பு
கார் ஓட்டி வந்த களைப்பை போக்கியது கொடைக்கானலின் அதிகாலை குளுமை. கொடைக்கானலின் சில்லென்ற காலை எமக்கு மனதிலும், உடலிலும் புத்துணர்வை தந்தது. அத்துடன் லிவாவில் எமது உலாவை காலையிலேயே துவங்கினோம். நேராக ஏரிக்கு லிவாவை விட்டோம். சுற்றுலாப் பயணிகளின் மனதில் உள்ள இறுக்கங்களை கொடை ஏரி கரைத்துவிடும் என்பதை இந்த படத்தை பார்த்தால் தெரியும்.

சுற்றுலா இடங்கள்...
கொடைக்கானலின் முக்கியமன சுற்றுலா மையங்களான பில்லர் ராக்ஸ் எனப்படும் திண் பாறை, குணா குகை, பைன் மரங்கள் சூழ்ந்த வனப்பகுதி, கோல்ஃப் மைதானம் போன்ற இடங்களின் வழியாக செல்ல முடிவு செய்து லிவாவை விரட்டினோம். இடையிடையே சாரல் மழையும் எமது பயணத்தை குதூகலமாக்க கொடைக்கானலின் முக்கிய பகுதிகளில் ஒரு ரவுண்ட் அடித்தோம்.

யூகலிப்டஸ் வந்த கதை..
கொடைக்கானலில் எங்கும் வியாபித்து வளர்ந்து நிற்கும் யூகலிப்டஸ் மரங்கள் 1867ல் முதல்முதலாக பாம்பே ராணுவப் படையில் பணியாற்றிய மேஜர் பேட்ரிட்ஜ் என்பவர் கொண்டு வந்தார். இப்போது 11,000 ஹெக்டேர் பரப்பளவில் இந்த மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. இப்போது இதுவும் ஒரு முக்கிய தொழிலாக மாறியிருக்கிறது. ஆனால், இது நிலத்தடி நீர் ஆதாரத்தை பாதிப்பதாக புகார் இருக்கிறது.

போஸ் கொடுத்த லிவா
கொடைக்கானலுக்கு வந்ததே போட்டோ எடுக்கத்தான் என்பதுபோல் பலர் வருவர். அந்த வகையில், லிவாவை அழகான இடங்களிலும், பல கோணங்களில் புகைப்படங்களை க்ளிக்கினோம். டொயோட்டா லிவாவின் புதிய க்ரில் அமைப்பு சிறப்பாக இருக்கிறது. இருப்பினும், ஒட்டுமொத்தமாக எளிமையான டிசைன் அமைப்பு தனி நபர் வாடிக்கையாளர்களின் விருப்பதை நிறைவு செய்யவில்லை.

பக்கவாட்டு தோற்றம்
மிக எளிமையான வடிவமைப்பு கொண்ட பக்கவாட்டு டிசைனுக்கு, இன்டிகேட்டர் கொண்ட சைடு மிரர்கள், 12 ஸ்போக்குகள் கொண்ட 15 இன்ச் அலாய் வீல்கள் சிறப்பு சேர்க்கின்றன. கருப்பு நிற பி பில்லர், க்ரோம் ஹேண்டில்களும் இந்த காரை பார்க்க ரம்மியமாக்கும் விஷயங்கள்.

பின்புற டிசைன்
டொயோட்டா லிவா காரின் பின்புறத்தில் டெயில் லைட் க்ளஸ்ட்டர் கவர்ச்சியாக இல்லை. அதேநேரத்தில், டெயில் கேட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் க்ரோம் பட்டை கவர்ச்சியான விஷயமாக கூறலாம். ஏனெனில், க்ரோம் அலங்காரம் என்பது இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்த ஒன்றாக இருப்பதால், குறிப்பிட வேண்டிய விஷயமாக உள்ளது.

இன்டிரியர்
டொயோட்டா லிவா காரின் இன்டிரியரின் பல பாகங்கள் மென்மையான உணர்வை தருவதாக இல்லை. இரட்டை வண்ண இன்டிரியர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அடிப்பாகம் சிறிது தட்டையான ஸ்டீயரிங் வீல் உள்ளது. அதேநேரத்தில், சுவிட்சுகளை இயக்க எளிதாகவும், கைக்கு லாவகமாகவும் உள்ளது. உட்புற இடவசதி மெச்சும்படியாக உள்ளது. குறிப்பாக, பின் இருக்கைகள் போதிய இடவசதியை அளிப்பதாக இருக்கிறது.

ஹார்டு க்ளட்ச்...
ஷார்ட் டிராவல் எனப்படும் குறைந்த தூர இயக்கம் கொண்ட க்ளட்ச் பெடல் இருந்தாலும், மிதிப்பதற்கு சற்று கடினமான உணர்வு இருக்கிறது. நகர்ப்புறங்களில் அதிக நேரம் ஓட்டும்போது இது சற்று அயர்ச்சியை தரலாம். ஆனால், நெடுஞ்சாலைகளில் க்ளட்ச் பெடல் தொந்தரவு இல்லாமல் மிகச்சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தை தருகிறது.

எஞ்சின்
டிசைன், இன்டிரியர் போன்றவற்றில் சில குறைகள் மனதில் தோன்றினாலும், இந்த காரின் எஞ்சின் செயல்திறன் அனைத்தையும் மறக்க செய்கிறது. இதில், இருக்கும் 68 பிஎச்பி பவர் கொண்ட 1.4 லிட்டர் டீசல் எஞ்சினின் சக்தி சிறப்பாக இருக்கிறது. ஏற்றமான சாலைகளில் கூட இதன் பவர் வெளிப்பாடு சிறப்பாக இருக்கிறது. இரண்டாவது கியரிலேயே போதுமான சக்தி கிடைப்பதால் மலைச்சாலைகளில் ஏறும்போது முதல் கியருக்கு தாவுவதை தவிர்க்க முடிகிறது.

கையாளுமை
முன்புறத்தில் மெக்பர்ஷன் ஸ்ட்ரட் சஸ்பென்ஷன் அமைப்பும் பின்புறத்தில் டார்சன் பீம் சிஸ்டமும் உள்ளது. இவை சொகுசான பயணத்தையும், சிறப்பான கையாளுமைக்கும் உறுதுணையாக இருக்கின்றன. மேலும், வளைவுகளில் திருப்பும்போது நம்பிக்கையான உணர்வை இந்த காரின் சஸ்பென்ஷன் அமைப்பு வழங்குகிறது. இந்த காரின் 15 இன்ச் சக்கரங்களும், 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸும் அனைத்து சாலை நிலைகளையும் எளிதாக சமாளிக்க உதவுகிறது.

பூட் ரூம்
டொயோட்டா லிவா காரின் 251 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் சிறிய குடும்பத்தினருக்கு ஏதுவான பொருட்களுக்கான இடவசதியை அளிக்கும்.

ஹெட்லைட்
டொயோட்டா லிவாவின் ஹெட்லைட் மிக சிறப்பாக இருக்கிறது. கொடைக்கானல் மலைச் சாலைகளில் இரவு நேரத்தில் செல்வதற்கு இந்த ஹெட்லைட் அருமையாக உதவி புரிந்தது.

லிவா விஎக்ஸ்டி
லிவா விஎக்ஸ்டி வேரியண்ட்டில் முக்கியமாக 15 இன்ச் அலாய் வீல்கள், பனி விளக்குகள், பின்புற வைப்பர், இன்டிகேட்டர்கள் கொண் சைடு மிரர்கள் ஆகியவை உள்ளன.

இருளை தழுவிய வானம்
தொடர்ந்து பரப்பரப்பாக இயங்கி போட்டோ ஷூட்டை முடித்து திரும்பும்போதே, இரவை வானம் தழுவிக் கொண்டிருந்தது. அப்படியே வந்து, கொடைக்கானல் ஏரியில் வந்து சற்று ரிலாக்ஸ் செய்தோம்.

மீண்டும் பெங்களூர்...
மறுநாள் காலை பெங்களூர் நோக்கி எமது பயணம் துவங்கியது. வழியில் வைகை அணைக்கட்டில் ஒரு சிறிய இடைவேளையை எடுத்தோம். மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கான நீர் தேவையை நிறைவு செய்வதில் இந்த அணைக்கட்டு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இங்கு சுற்றுலாச் செல்பவர்கள் வழியில் தவற விடாக்கூடாத இடமாகவும் கூறலாம்.

லிவா எப்படி?
எமது கவனத்தில் நின்ற டொயோட்டா லிவாவின் சில முக்கிய சிறப்பம்சங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம். சிறப்பான டிரைவிங் பொசிஷன் கொண்ட காராக உள்ளது டொயோட்டா லிவா. அதுவே, டாக்சி டிரைவர்களை கவர காரணமாகிவிட்டதாக தோன்றுகிறது. ஓட்டுபவரை எளிதாக திருப்திப்படுத்தும் அம்சங்கள் உள்ளன. ஏனெனில், இதன் செயல்திறன் மிக்க டீசல் எஞ்சினும், சிறப்பான கையாளுமை மற்றும் சொகுசை தரும் சஸ்பென்ஷன் அமைப்பும் ஓட்டுனரை எளிதாக சமாதானப்படுத்திவிடும். இடவசதியிலும் நிறைவை தரும். டொயோட்டாவின் நம்பகத்தன்மையும் இந்த காருக்கு கூடுதல் பக்க பலம். ஆனால், டாக்சி முத்திரை விழுந்துவிட்டதால் தனிநபர் மார்க்கெட்டில் எடுபட முடியாமல் தவிக்கிறது.


Click it and Unblock the Notifications








