க்ரெட்டாவை தூக்கிச் சாப்பிடுமா டொயோட்டா ஹைரைடர்... இதோ ரிவியூவை படிங்க...
டொயோட்டா நிறுவனம் புதிதாக அர்பன் க்ரூஸியர் ஹைரைடர் என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் எப்படி இருக்கிறது? இது சொல்லப்படும் அளவிற்குச் சிறப்பாக வேலை செய்கிறதா? ரிவியூவில் காணலாம்.

நீண்ட ஆண்டுகளாக B செக்மென்டில் கொடிகட்டி பறந்து வருவது ஹூண்டாய் க்ரெட்டா கார் தான். இதற்குப் போட்டியாக மார்கெட்டில் பல கார்கள் வந்தாலும் அது வந்த இடம் தெரியாமலேயே போனது. ஹூண்டாய் க்ரெட்டா மார்கெட்டில் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பைப் பெற்றுள்ளது. போட்டியாக எந்த கார் வந்தாலும் ஹூண்டாய் க்ரெட்டா மீது இருக்கும் க்ரேஸ் மக்களுக்குப் போகவில்லை.

இந்நிலையில் இந்த இடத்திற்குப் போட்டிப் போட இந்தியாவின் அரசியல் தலைவர்களுக்கு பிடித்தமான எஸ்யூவி காரான ஃபார்ச்சூனர் காரை தயாரிக்கும் டொயோட்டா நிறுவனம் இந்த செக்மெண்டில் தனது காரை இறக்கி ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு போட்டியைக் கொடுத்துள்ளது.

டொயோட்டா நிறுவனம் இந்த காருக்கு டொயோட்டா அர்பன் க்ரூஸியர் ஹைரைடர் என பெயர் வைத்துள்ளது. பெயர் பெரியதாக இருப்பதால் மக்கள் ஹைரைடர் என்றே இந்த காரை அழைக்கிறார்கள் சிலர் அர்பன் க்ரூஸியர் என்றும் அழைக்கிறார்கள். இந்த டொயோட்டா அர்பன் க்ரூஸியர் ஹைரைடர் காரை எங்கள் டிரைவ்ஸ்பார்க் குழு பெங்களூருவில் ஓட்டிப்பார்த்தது. இதன் ரிவியூவை காணலாம்

டொயோட்டா அர்பன் க்ரூஸியர் ஹைரைடர் - வெளிப்புற டிசைன்
டொயோட்டா இந்த காரின் டிசைன் பெரியதாகச் சொதப்பவில்லை. இந்த காரின் ஷார்ப் லைன்கள் காருக்கான ஸ்டைலிஷ் லுக்கை கொடுக்கிறது. ஆனால் இது போக மேலும் பல விஷயங்களைச் சிறப்பாகச் செய்திருக்கலாம். சில டிசைன்கள் எல்லாம் ஏன் கொடுத்திருக்கிறார்கள் எனக் குழப்பமாகத் தான் இருக்கிறது.

முன்பக்கத்தைப் பொருத்தவரை தற்போது உள்ள எஸ்யூவி கார்களை போல இந்த ஹைரைடர் காரிலும் ஸ்பிலிட் ஹைட்லைட் வழங்கப்பட்டுள்ளது. இது போக இதில் ட்வின் எல்இடி பகல் நேரத்திலும் எரியும் ரன்னிங் லைட் கொடுக்கப்பட்டுள்ளது. இது மத்தியில் உள்ள டொயோட்டா பேட்ஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் க்ரிலின் மேல் பகுதியில் க்ரோம் பட்டைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

கீழே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பம்பர் கோக்கப்பட்டுள்ளது அதில் க்ரோம் பட்டைகளால் சுற்றப்பட்ட எல்இடி புரோஜெக்டர் ஹைட்லைட் கொடுக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிக்கும் கீழே வித்தியாசமான வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது ஸ்டைலிங்கிற்காக வேறு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஹைரைடர் காரின் பக்கவாட்டு பகுதிகள் எல்லாம் பல்ஜாகவும், க்ரீஸ்களுடனும் இருக்கிறது. பானட் பகுதியில் உள்ள வடிவமைப்பு சிறப்பாக இருக்கிறது. இந்த காரில் வீல் ஆர்ச்கள் வழக்கம் போல வட்டமாக இல்லாமல் சற்று சதுர வடிவில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இது போக காரில் 17 இன்ச் அலாய் வீல் கொடுக்கப்பட்டுள்ளது. இது பார்க்க சிறியதாக இருக்கிறது.

இது போக கருப்பு நிறத்தில் ஓஆர்விஎம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் காரின் ஜன்னல் பகுதியில் க்ரோம் பட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இது போக காரில் ஃப்ளோட்டின் ரூப் வழங்கப்பட்டுள்ளது. இது காரின் ட பில்லரில் டூயல் டோன் லுக்கை கொடுக்கிறது.

இந்த ஹைரைடர் காரின் பின்பகுதியைப் பொருத்தவரை வழக்கமான எல்இடி பிரேக் லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதை இணைக்கும் வகையில் க்ரோம் பார் வழங்கப்பட்டுள்ளது அதன் மையத்தில் டொயோட்டா பேட்ஜூம் வழங்கப்பட்டுள்ளது. டர்ன் சிக்னல் மற்றும் ரிவர்ஸ் லைட்டிங் எல்லாம் வெர்டிகல் போசிஷனில் இருக்கிறது. இது போக இந்த காரின் ரூஃப்பின் பின்பக்கம் ஸ்பாய்லர் கொடுக்கப்பட்டுள்ளது. அதலேயே பிரேக் எல்இடி லைட்டும் வழங்கப்பட்டுள்ளது. கீழே ஸ்கிட் பிளேட்களும் வழங்கப்பட்டுள்ளன.

டொயோட்டா அர்பன் க்ரூஸியர் ஹைரைடர் - உட்புற கட்டமைப்பு
டொயோட்டா ஹைரைடர் காரை பொருத்தவரை வரை க்ரெட்டா காருக்கு போட்டிப் போடும் வகையில் இந்த வடிவமைப்பு உள்ளது. கருப்பு மற்றும் பிரெளன் நிற டூயல் டோன் தீம் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. இது காருக்கு ஒரு பிரிமியம் ஃபீலை வழங்குகிறது. கார் முழுவதும் சாஃப்ட் டச் மெட்டிரியல் வழங்கப்பட்டுள்ளது.

இது போக காரின் மையப்பகுதியில் பானாரோமிக் சன்ஃரூப் வழங்கப்பட்டுள்ளது. இது காருக்குள் அதிக இட வசதி மற்றும் காற்றோட்டத்தைத் தருகிறது. ஆனால் உட்புறத்தின் பிளாக்ஸ்டிக் செக்ஷனில் உள்ள பிளாக்ஸ்டிக்கின் தரம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.

இந்த காரின் மல்டி லேயர் டேஷ்போர்டு முக்கிய இடத்தை வகிக்கிறது. டிரைவருக்கு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மத்தியில் 9 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற அம்சங்கள் எல்லாம் இடம் பெற்றுள்ளன. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வாய்ஸ் அசிஸ்ட்டென்ட்களுடன் இயங்கும் திறன் கொண்டு இதே டிஸ்பிளே 360 டிகிரி கேமராவின் டிஸ்பிளே ஆகவும் செயல்படும்.

இந்த டொயோட்டா ஹைரைடர் கார் கனெக்டெட்ட கார் தொழிற்நுட்பத்தில் இயங்கும் திறன் கொண்டது. இதில் ரிமோட் இக்னீஷியன் ஆன்/ ஆஃப் தொழிற்நுட்பம், ரிமோட் ஏசி கண்ட்ரோல், டோர் லாக்/ அன்லாக் சிஸ்டம், வாகனம் திருடப்பட்டால் டிராக் செய்யும் தொழிற்நுட்பம், டொயோட்டா ஆப் மூலம் இவை எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் தொழிற்நுட்பம். ஸ்மார்ட் வாட்ச் உடன் இணைக்கக்கூடிய தொழிற்நுட்பம் என ஏகப்பட்ட அம்சங்களை வழங்குகிறது.

மேலும் இந்த காரின் முன்பக்கம் வென்டிலேட்டட் சீட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது போக முன்பக்க ஆர்ம் ரெஸ்ட்களை ஸ்லைட் செய்யும் தொழிற்நுட்பம் பின்பக்கம் 60:40 எனப் பிரிக்கப்பட்ட சீட்கள், மேலும் 255 லிட்டர் ஃபூட் வசதி, ஹைட்ஸ் அப் டிஸ்பிளே, பெடல் ஸிஃப்டர்ஸ், வயர்லெஸ் சார்ஜிங் பேட், பின்பக்க ஏசி வென்ட் மற்றும் யூஎஸ்பி போர்ட்கள், அம்பியட் லைட்டிங், பின்புறம் ஃபூட்டிற்கான தனி லைட்டிங் ஆகிய அம்சங்கள் இருக்கிறது.

பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்தவரை டொயோட்டா அர்பன் க்ரூஸியர் காரில் 6 ஏர்பேக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், வெஹிகில் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், ஹில் டிசென்ட் கண்ட்ரோல், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக், பின்பக்க பயணிகளுக்கான
3 பாய்ண்ட் சீட் பெல்ட், TPMS ஆகிய அம்சங்களும் இந்த காரில் உள்ளது.

ஸ்பெக் மற்றும் டைமென்ஷன்
டொயோட்டா அர்பன் க்ரூஸியர் காரை பொருத்தவரை மொத்தம் இரண்டு பவர் டிரைன் ஆப்ஷன்கள் உள்ளன. மாருதி சுஸூகியிடம் வாங்கிய 1.5 லிட்டர் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம், இது போகச் சொந்த தயாரிப்பான 1.5 லிட்டர் செல்ஃப் சார்ஜிங் தொழிற்நுட்பம் கொண்ட அட்கின்சன் சைக்கிள் இன்ஜின் இருக்கிறது. இதே இன்ஜின் தான் அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் டொயோட்டா கேம்ரீ காரில் இருக்கிறது.

மாருதி நிறுவனம் உருவாக்கி மைல்டு ஹைபிரிட் செட்டப் அந்த காரிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த காரில் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 101.65 பிஎச்பி பவரையும் 136.8 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும், இதில் உள்ள மைல்டு ஹைபிரிட் செட்டப் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் பிரென்ட் வீல் மற்றும் ஆல் வில் டிரைவ் ஆப்ஷன்களும் உள்ளன.

இரண்டாவதாக உள்ள செல்ஃப் சார்ஜிங் ஸ்டிராங்க் ஹைபிரிட் செட்டப்பை பொருத்தவரை 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் இன்ஜின் மற்றும் ஒரு எலெக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. இது 91.1 பிஎச்பி பவரையும், 122என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும், இதில் எலெக்ட்ரிக் மோட்டார் மட்டும் 79.1 பிஎச்பி பவரையும் 141 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ஆனால் இந்த காரின் அதிகபட்ச திறன் 114 பிஎச்பி பவருடன் லிமிட் செய்யப்பட்டுள்ளது. அப்படிச் செய்வதன் மூலம் 27.97 கி.மீ மைலேஜை இந்த கார் வழங்குகிறது. இந்த ஸ்டிராங்க் ஹைபிரிட் செப்டப் இ-சிவிடி கியர் பாக்ஸ் உடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. இது பிரென்ட் வீல் டிரைவில் மட்டுமே இயங்கும் திறன் கொண்டது.

இந்த கார் மொத்தம் 4365 மிமீ நீளம், 1795 மிமீ அகலம், மற்றும் 1645 மிமீ உயரம் கொண்டது. இந்த காரின் வீல் பேஸை பொருத்தவரை 2600 மிமீ நீளம் கொண்டது. இந்த கார் ஒட்டு மொத்தமாக 1755 கிலோ எடை கொண்டது.

டிரைவிங் இம்பிரஷன்
நாங்கள் அர்பன் க்ரூஸியர் ஹைரைடர் காரின் ஸ்டிராங்க் ஹைபிரிட் இன்ஜின் செட்டப் கொண்ட காரை ஓட்டிப்பார்த்தோம். இந்த செட்டப் குறைவான பெட்ரோல் செலவில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் மைலேஜை நாங்கள் டெஸ்ட் செய்யவில்லை.

நாங்கள் கொஞ்ச நேரம் தான் இந்த காரை ஓட்டிப்பார்த்தோம். இதில் எக்கோ மற்றும் நார்மல் ஆகிய மோட்களில் ஆக்ஸிலரேட்டரை எவ்வளவு தான் அழுத்தி மிதித்தாலும் மெதுவாகதான் ரெஸ்பான்ஸ் செய்கிறது. பவர் மோடில் சிறப்பாக ரெஸ்பான்ஸ் செய்கிறது. இவி மோடில் சத்தமே இல்லாமல் கார் இயங்குகிறது.

இந்த காரில் பேட்டரி ரீஜெனரேட்டிவ் மோட் இருக்கிறது. இது காரை ஒன் பெடல் டிரைவிங்கை சாத்தியமாக்குகிறது. கார் ஓட்டும் போது காருக்குள் என்ன நடக்கிறது என்பது பெரிய அளவில் உள்ளே தெரியவில்லை. இது பார்க்கும் போது நீங்கள் இந்தியாவின் கண்டிஷன்களுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட ரெகுலர் பெட்ரோல் கார் போல தெரிகிறது. சிவிடி கியர் பாக்ஸ் கொஞ்சம் செட்பேக்காக இருக்கிறது. சாதாரண சில் பயணத்திற்கு இது சிறந்தது.

இந்த ஹைரைடர் காரில் சஸ்பென்சன்கள் ஸ்டிஃப்பாக உள்ளது. இது ஸ்டிராங்க் ஹைபிரிட் சிஸ்டத்திற்காக வழங்கப்பட்டுள்ள அதிக எடை கொண்ட பேட்டரியை சமாளிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது. இதனால் கரடு முரடான சாலைகளில் செல்லும் போது கார் அதிகமாகக் குலுங்குகிறது. முக்கியமாக பின் சீட் அதிகமாகக் குலுங்குகிறது.

இந்த காரின் ஸ்டியரிங் வீல் மாருதி சுஸூகி நிறுவனத்தின் பாகங்களைக் கொண்டு தயார் செய்யப்பட்டுள்ளது. இது குறைந்த வேகத்தில் லைட்டாக இருக்கிறது. இது சிட்டிக்குள் காரை ஓட்ட சிறப்பாக இருக்கிறது. இதுவே வேகமாகச் செல்லும் போது வெயிட்டாக மாறுகிறது. ஆனாலும் இன்னும் வெயிட் அதிகமாகவேண்டும் என்றே நினைக்கிறோம்.

இந்த டொயோட்டா ஹைரைடர் காரை பொருத்தவரை அனைத்து வீல்களும் டிஸ்க் பிரேக்கில் இயங்குகிறது. மேலும் இந்த காரில் உள்ள பெடல் ஸிஃப்டர்கள் பயன்படுத்துவதற்கு எளிதாக உள்ளது. இந்த காரின் கேபின் உள்ள இருக்கும் NVH லெவல் சிறப்பாக இருக்கிறது. வெளியிலிருக்கும் சத்தம் பெரிய அளவில் உள்ளே கேட்கவில்லை. குறிப்பாக இவி மோடில் கார் செல்வதே தெரியவில்லை.

இறுதித் தீர்ப்பு
டொயோட்டா அர்பன் க்ரூஸியர் ஹை ரைடர் காரை பொருத்தவரை ஸ்பார்பான லுக், அதிகமாக தொழிற்நுட்ப அம்சங்கள், ஹைபிரிட் தொழிற்நுட்பம் என டொயோட்டா நிறவமன் இந்த பேக்கேஜை சிறப்பாக வடிவமைத்துள்ளது. இந்த கார் உண்மையிலேயே க்ரெட்டாவிற்கு போட்டி போட்டு அதன் விற்பனையைக் குறைக்குமா என்பது அதன் விலை குறித்த விபரங்கள் வெளியான பின்பு தான் தெரியவரும்.


Click it and Unblock the Notifications








