உலகையே மிரள வைத்த ஃபோக்ஸ்வேகன் கார் இந்தியா வந்தாச்சு! ஓட்டி பார்த்த எங்களுக்கு இன்னும் ஷாக் குறையல!!

ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்தில் இருந்து உலகளவில் பிரபலமான கோல்ஃப் ஜிடிஐ (Golf GTI) கார் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் இன்று (மே 26) அறிமுகம் செய்யப்படுகிறது. உலகின் பல நாடுகளில் வரவேற்பை பெற்ற ஹேட்ச்பேக் கார் என்பதினாலேயே கோல்ஃப் ஜிடிஐ கார் மீது பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த காரின் பெயரில் உள்ள 'ஜிடிஐ' ஆனது காரின் செயல்திறனை குறிக்கிறது. வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் காரின் பவர்ஃபுல் வெர்சன் தான், கோல்ஃப் ஜிடிஐ ஆகும்.

உலக நாடுகளில் பல வருடங்களாக விற்பனையில் இருக்கும் கோல்ஃப் காரை 2007ஆம் ஆண்டில் இந்தியாவில் நுழைந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இதுவரையில் நம் நாட்டு சந்தையில் அறிமுகம் செய்தது இல்லை. அதற்கு பதிலாகவே, கோல்ஃப் காரின் செடான் வெர்சனான ஜெட்டா (Jetta)-ஐ சில வருடங்களுக்கு முன் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் களமிறக்கியது.

volkswagen golf gti first review

தற்போது ஜெட்டா காரும் விற்பனையில் இல்லை, அதேபோல் இந்தியர்களும் அளவில் சற்று பெரியதான கோல்ஃப் காரை வாங்கும் அளவிற்கு முன்னேறிவிட்டதால், தைரியமாக கோல்ஃப் ஜிடிஐ காரை ஃபோக்ஸ்வேகன் அறிமுகம் செய்கிறது. இதற்கு முன்னர் 2016ஆம் ஆண்டில் போலோ ஜிடிஐ (Polo GTI) கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பினும், ஃபோக்ஸ்வேகனின் உண்மையான ஜிடிஐ காராக கோல்ஃப் ஜிடிஐ பார்க்கப்படுகிறது.

இதனாலேயே இந்தியாவில் உள்ள கார் ஆர்வலர்கள் கோல்ஃப் ஜிடிஐ காரை ஓட்டி பார்க்க ஆவலாக உள்ளனர். ஆனால், நமது டிரைவ்ஸ்பார்க் (DriveSpark) குழுவுக்கு அறிமுகத்திற்கு முன்னதாகவே இந்த புதிய ஃபோஸ்வேகன் காரை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் கோல்ஃப் ஜிடிஐ காரை மத்திய பிரதேசத்தில் உள்ள பந்தய களம் ஒன்றில் ஓட்டி பார்த்தோம். அப்போது எங்களுக்கு கிடைக்க பெற்ற அனுபவங்களை இங்கு ரிவியூவாக வழங்கியுள்ளோம். அவற்றை பற்றி இனி விரிவாக பார்க்கலாம், வாங்க.

volkswagen golf gti first review

வெளிப்புற & உட்புற தோற்றம்: வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள 8ஆம் தலைமுறை கோல்ஃப் ஜிடிஐ ஃபேஸ்லிஃப்ட் காரை கோ-ஃபாஸ்டர் (Go-Faster) பாடி கிட் உடன் இந்தியாவில் அறிமுகம் செய்ய ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. இந்த காருக்கு முன்பக்கத்தில், மெல்லியதான வடிவம் கொண்ட எலஇடி ஹெட்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஹெட்லைட்கள் இரண்டையும் லைட் பார் ஒன்று ஒளிரக்கூடிய ஃபோக்ஸ்வேகன் லோகோ உடன் இணைக்கிறது.

முன்பக்க கிரில் பகுதிக்கு இரு பக்கங்களிலும் எல்இடி டிஆர்எல்-கள் வழங்கப்பட்டுள்ளன. கிரில் பகுதியில் 'GTI' பேட்ஜ் பொருத்தப்பட்டுள்ளது. கோல்ஃப் ஜிடிஐ காருக்கு கீழே பெரிய அளவிலான ஏர் டேம் வழங்கப்பட்டிருக்க, அதற்கு இரு பக்கங்களிலும் X-வடிவிலான எல்இடி ஃபாக் விளக்குகள் உள்ளன. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, காரின் முன்பக்கத்தில் L-வடிவில் விங்லெட்கள் (Winglets) இடம்பெற்றுள்ளன.

volkswagen golf gti first review

இவை மொத்தமும் சேர்ந்து, கோல்ஃப் ஜிடிஐ காரின் முன்பக்கத்திற்கு ரக்டு தோற்றத்தை தருகின்றன. அப்படியே காருக்கு பக்கவாட்டிற்கு சென்றால், 'GTI' பேட்ஜ் ஆனது சைடு மிரர்களுக்கு கீழே முன்பக்க கதவுகளில் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ள கோல்ஃப் ஜிடிஐ காரில் 18-இன்ச்சில் அலாய் சக்கரங்களும், அவற்றில் சிவப்பு நிறத்தில் பிரேக் காலிபர்களும் வழங்கப்பட்டுள்ளன.

புதிய கோல்ஃப் ஜிடிஐ காரின் பின்பக்கத்தில் சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா, ரூஃப்-இல் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர், ஸ்மோக்டு எஃபெக்ட் உடன் எல்இடி டெயில்லைட்கள் மற்றும் முன்பக்கத்தை போலவே ஃபோக்ஸ்வேகன் லோகோவுக்கு அருகில் ஜிடிஐ பேட்ஜ் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன. பின்பக்க பம்பருக்கு கீழே டிஃப்யூஸர் (Diffuser) மற்றும் இரு எக்ஸாஸ்ட் குழாய்கள் இடம்பெற்றுள்ளன.

volkswagen golf gti first review

புதிய கோல்ஃப் ஜிடிஐ காருக்கு உள்ளே, வெளிநாட்டு சந்தைகளில் இந்த கார் எப்படி உள்ளதோ அதேபோன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது. காருக்குள் கேபினில் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் இருக்கைகளில் சிவப்பு நிறத்தில் தையல்கள் இடம்பெற்றுள்ளன. முற்றிலும் கருப்பு நிறத்திலான காரின் உட்பக்க கேபினில் இந்த சிவப்பு நிற ஹைலைட்கள் மட்டும் தனியாக தெரிகின்றன.

இதற்கேற்ப ஸ்டேரிங் சக்கரத்தில் சிவப்பு நிறத்தில் 'GTI' முத்திரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரின் டேஸ்போர்டில் டிரைவருக்கான விபரங்களை வழங்க 10.25 இன்ச்சில் திரை மற்றும் பொழுதுப்போக்கிற்கான 12.9-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரை வழங்கப்பட்டுள்ளன. இதில் இன்ஃபோடெயின்மெண்ட் திரை ஆனது ஃபோக்ஸ்வேகனின் லேட்டஸ்ட் MIB4 மென்பொருள் உடன் கனெக்ட்டிவிட்டி வசதிகளை கொண்டதாக உள்ளது.

volkswagen golf gti first review

இந்த திரைகளை தொடுதல் மூலமாக கண்ட்ரோல் செய்வதுடன், ஸ்டேரிங் சக்கரத்தில் வழங்கப்பட்டு இருக்கும் பொத்தான்கள் மூலமாகவும் கண்ட்ரோல் செய்யலாம். கோல்ஃப் ஜிடிஐ காரினுள் நிறைய இடங்களில் அழுத்தக்கூடிய பொத்தான்களை பார்க்க முடிகிறது. இன்றைய கால கார்களில் எல்லாவற்றையும் தொடுதல் மூலமாக கண்ட்ரோல் செய்யக்கூடியதாக வழங்குவதால், காரின் நிறைய வசதிகளை பலர் அறியாமலேயே போய் விடுகின்றனர்.

அதனால்தான், முன்னெச்சரிக்கையாக கோல்ஃப் ஜிடிஐ காரில் நிறைய வசதிகளை தொடுதல் மூலமாக கண்ட்ரோல் செய்வதுடன், பொத்தான்களும் வழங்கப்பட்டுள்ளன. முக்கியமாக, ஏசி கண்ட்ரோல் செட்-அப் ஆனது இரு விதமாகவும் கண்ட்ரோல் செய்யக்கூடியதாக உள்ளது. வயர்லெஸ் போன் சார்ஜிங் வசதி, கேபினை சுற்றிலும் விளக்குகள், பனோராமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை கோல்ஃப் ஜிடிஐ காரின் மற்ற சிறப்பம்சங்கள் ஆகும்.

volkswagen golf gti first review

இதில் குறிப்பாக, மொபைல் போனை சார்ஜ் செய்வதற்கு நான்கு யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. காரினுள் வழங்கப்பட்டுள்ள முன்பக்க பக்கெட் இருக்கைகள் பயணத்தின்போது நல்ல சவுகரியத்தை வழங்குகின்றன. பின்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள மேசை இருக்கைகளில் கால்களை நன்கு நீட்டி அமர்ந்துக் கொள்ள இடவசதி கிடைக்கிறது.

அதேபோல், ஹேட்ச்பேக் கார் என்றாலே பின் வரிசை இருக்கைகளில் அமர்பவர்களுக்கு போதுமான சவுகரியம் கிடைக்காது என்கிற நிலையை மாற்றி, கோல்ஃப் ஜிடிஐ காரின் 2வது வரிசை இருக்கைகளிலும் அதிக ஹெட் ரூம் இடவசதியை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதனால், நன்கு உயரமானவர்களால் கூட இந்த காரின் பின் வரிசை இருக்கைகளில் அமர்ந்து சவுகரியமாக பயணம் செய்ய முடியும்.

volkswagen golf gti first review

இந்த காருக்கு பின்பக்கத்தில் பொருட்களை வைப்பதற்கு 374 லிட்டர்கள் கொள்ளளவில் பெரிய லக்கேஜ் பகுதி வழங்கப்பட்டுள்ளது. ஹேட்ச்பேக் ரக கார்களில் 374 லிட்டர்களில் பூட்ஸ்பேஸ் என்பது போதுமானது என்றே நினைக்கிறோம். பாதுகாப்பு வசதிகளாக இந்த காரில், ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் ஹில் ஸ்டார்ட் உதவி மற்றும் இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக பல அடாஸ் (ADAS) வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில், இன்றைய கால மாடர்ன் கார்களில் அதிகமாக வழங்கப்பட்டு வரும் அடாஸ் மூலமாக சாலையில் ஒரே பாதையில் தொடர்வதற்கான உதவி, போக்குவரத்து நெரிசலின் போது தேவைப்படும் உதவி, அவசர காலத்தில் தேவைப்படும் உதவி, அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், எமர்ஜென்சி முன்பக்க பிரேக் உதவி உள்ளிட்ட அதிநவீன வசதிகளை பெறலாம்.

volkswagen golf gti first review

என்ஜின் & மெக்கானிக்கல் பாகங்கள்: புதிய ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ காரில் 2 லிட்டர், 4-சிலிண்டர், டைரக்ட்-இன்ஜெக்‌ஷன் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 261 பிஎச்பி மற்றும் 370 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆனது என்ஜினின் இயக்க ஆற்றலை காரின் முன் சக்கரங்களுக்கு வழங்குகிறது.

0-இல் இருந்து 100km/h வேகத்தை வெறும் 5.9 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய கோல்ஃப் ஜிடிஐ காரை அதிகப்பட்சமாக மணிக்கு சுமார் 250கிமீ வேகத்தில் ஓட்டி செல்ல முடியும். என்ஜினின் அதிகப்படியான இயக்க ஆற்றலை சமாளிக்கும் விதமாக, காரின் முன்பக்க சஸ்பென்ஷனுக்கு மத்தியில் லிமிடெட் ஸ்லிப் டிஃப்ரென்ஷியல் வழங்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, வழக்கமான கோல்ஃப் காரை காட்டிலும் கோல்ஃப் ஜிடிஐ காரில் சஸ்பென்ஷன் செட்-அப் விரைப்பானதாக உள்ளது.

volkswagen golf gti first review

இந்த காரின் 18-இன்ச் அலாய் சக்கரங்களில் லோ-புரோஃபைல் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. 4,289மிமீ-இல் நீளம், 1,789மிமீ அகலம் மற்றும் 1,456மிமீ-இல் உயரத்தை கொண்டுள்ள கோல்ஃப் ஜிடிஐ காரின் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 2,627மிமீ ஆகும். 12 மீட்டர் அகலம் கொண்ட இடத்திற்குள் முழுவதும் யு-டர்ன் செய்யக்கூடிய கோல்ஃப் ஜிடிஐ காரின் அடிப்பகுதி ஆனது தரையில் இருந்து 134மிமீ உயரத்தில் உள்ளது.

பயண அனுபவம்: புதிய ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ காரை ஓட்டி பார்க்கும்போதுதான், ஏன் இது உலகளவில் பல கார் ஆர்வலர்களுக்கு பிடித்தமான காராக உள்ளது என்பதை எங்களால் உணர முடிந்தது. ரேஸ் டிராக்கில் இந்த காரை ஓட்டும்போது மிகவும் மகிழ்ச்சியான பயண அனுபவம் எங்களுக்கு கிடைத்தது. காரின் டர்போசார்ஜ்டு என்ஜின் அனைத்து விதமான கியர்களிலும் போதுமான இயக்க ஆற்றலை வழங்கி மகிழ்ச்சியான பயணத்திற்கு வழிவகுக்கிறது.

volkswagen golf gti first review

இதற்கேற்ப காரின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸான டிஎஸ்ஜி (DSG) கியர்பாக்ஸ் கியர்களை விரைவாக மாற்றுவதற்கு ஏதுவானதாக உள்ளது. இருப்பினும், கோல்ஃப் ஜிடிஐ ஆனது பவர்ஃபுல்லான ஹேட்ச்பேக் கார் என்பதை மறந்துவிட வேண்டாம். வாகனங்கள் எதுவும் இல்லாத காலியான ரேஸ் டிராக்கில் வேகமாக செல்லும்போது ஜாலியான பயணத்தை வழங்கிய இந்த காரை பொது சாலையில் ஓட்டும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில், இந்த கார் எளிதாக 100km/h வேகத்தை எட்டுகிறது. மேடு, பள்ளமான நம்ம ஊர் சாலைகளில் இந்த காரை அதிவேகமாக ஓட்டும்போது விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதுவே, அதிவேகமாக செல்ல அனுமதிக்கப்பட்ட நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் ஓட்டும்போது மிகவும் ரிலாக்ஸான பயணத்தை வழங்குவதோடு, முன்னால் செல்லும் வாகனங்களை ஓவர்டேக் செய்ய ஆர்வத்தை தூண்டுகிறது.

volkswagen golf gti first review

ஸ்டேரிங் சக்கரம் உடனடியாக ரெஸ்பான்ஸிவ் கொடுக்கக் கூடியதாகவும், சஸ்பென்ஷன் செட்-அப் விரைப்பானதாகவும் உள்ளதால், வளைவுகளில் திரும்பும்போது சிறப்பான கண்ட்ரோல் கிடைக்கிறது. ஏற்கனவே கூறியதுபோல், முன் சக்கரங்களுக்கு மத்தியில் லிமிடெட்-ஸ்லிப் டிஃப்ரென்ஷியல் இணைக்கப்பட்டுள்ளதால், என்ஜினின் பவர் காரின் முன் சக்கரங்களுக்கு செல்வதால் டிரைவருக்கு கார் எல்லா நேரங்களிலும் முழு கண்ட்ரோலில் இருக்கிறது.

பொதுவாகவே, விரைப்பான சஸ்பென்ஷன் செட்-அப்பினால் காருக்குள் குலுக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் அது கோல்ஃப் ஜிடிஐ காரில் முற்றிலுமாக இல்லை. இன்னும் சொல்லப்போனால், மென்மையான சஸ்பென்ஷன் செட்-அப்பை கொண்ட கார்களை காட்டிலும் இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் காரில் சவுகரியமான பயண அனுபவம் கிடைக்கிறது.

volkswagen golf gti first review

காரின் அனைத்து நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளதால், வேகமாக செல்லும்போதும் உடனடியாக காரை நிறுத்த முடிகிறது. இதற்கேற்ப, பிரேக்குகள் வழக்கத்தை காட்டிலும் ஷார்ப்பானதாக உள்ளன. மேலும், டிரைவர் சீட்டில் இருந்து பிரேக் பெடல் எளிதாக அணுகக்கூடிய பொசிஷனில் உள்ளது. இதனால், காரை ஓட்டும்போது நமக்கே தெரியாமல் ஓர் தைரிய உணர்வு கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ காரை பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், இது பவர்ஃபுல்லான மெஷின் ஆகும். தினந்தோறும் பயன்படுத்துவதற்கு ஏற்ற மற்றும் அதேநேரம் சில நேரங்களில் அதிவேகமாக பயணிப்பதற்கு ஏற்ற காரை விரும்புபவர்களுக்கு கோல்ஃப் ஜிடிஐ மிகவும் ஏற்றதாக இருக்கும்.

volkswagen golf gti first review

ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் கார்களில் கோல்ஃப் ஜிடிஐ ஆனது உலகளவில் செயல்திறன்மிக்க காராக பெயர் பெற்றுள்ளது. இந்தியாவில் இந்த 2025ஆம் ஆண்டில் வெறும் 150 கோல்ஃப் ஜிடிஐ கார்களை மட்டுமே விற்பனை செய்ய ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆதலால், இந்த காரை வாங்க விருப்பப்படுபவர்கள் முடிந்தவரையில் கோல்ஃப் ஜிடிஐ காரை விரைவாக முன்பதிவு செய்ய முயற்சியுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, May 26, 2025, 11:00 [IST]
English summary
Volkswagen golf gti first test drive review design features engine all details here
மேலும்... #volkswagen #car review #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X