ரூ. 5 கோடி மெர்சிடிஸ் மேபாக் ஆடம்பர கார் மீண்டும் அறிமுகம்

கடந்த 2004ம் ஆண்டு மேபாக் ஆடம்பர காரை இந்தியாவி்ல் அறிமுகம் செய்தது ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் நிறுவனம். மணிக்கு அதிகப்பட்சம் 275 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் படைத்த மேபாக்கின் விலைதான் இந்தியர்களை ஒரு கணம் தலை சுற்ற வைத்தது. அதிக விலையின் காரணமாக மேபாக் மாடல் இந்தியாவில் போனியாகவில்லை.
ஆனால்,தற்போது இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடி வருவதாலும், ஆடம்பர கார்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதாலும், மேபாக் காரை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது மெர்சிடிஸ் பென்ஸ்.
இதுகுறித்து மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியதாவது:
"இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தை நிலவரத்தை கருத்தில்கொள்ளாமல் மேபாக் மாடலை சற்று முன்னதாக அறிமுகம் செய்துவிட்டதாக கருதுகிறோம். ஆனால்,இந்தியாவின் கார் விற்பனை சந்தை தற்போது அடியோடு மாறிவிட்டது.
இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதால், பில்லியனர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டெ செல்கிறது. எனவே,கார் விற்பனை சந்தையின் டிரென்ட்டும் மாறியுள்ளது. ஆடம்பர கார்களுக்கு இந்தியாவி்ல் வரவேற்பு அதிகரித்துள்ளது. எனவே,மேபாக் மாடலை மீண்டும் அறிமுகம் செய்துள்ளோம்.
டைம்லர் ஏ.ஜி., நிறுவனத்துடன் இணைந்து, இதுவரை 200 மேபாக் கார்களை விற்பனை செய்துள்ளோம்.சீனாவி்ல் மட்டும் 20 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேபாக் கார் 57எஸ் மற்றும் 62 ஆகிய இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. ஆனால்,இந்தியாவி்ல் மேபாக் காரை விற்பனை செய்வதற்கு இலக்கு எதுவும் நிர்ணயிக்கவில்லை" என்று கூறினார்.
ஆடம்பர அம்சங்கள் நிறைந்த மேபாக் காரின் விலை ரூ.5.1கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








