காம்பெக்ட் அம்பாசடர், ஹூண்டாய் புதிய எலன்ட்ரா- தகவல்கள்
பட்டி தொட்டியெங்கும் நீக்கமற நிறைந்திருந்த கார் ஒன்றை கூறுங்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு அம்பாசடரை கூறிவிடலாம். ஆண்டி முதல் அமைச்சர் வரை ஏறிய காராக அம்பாசடர் மட்டுமே இருக்க முடியும். விற்பனையில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்த அம்பாசடர் புதிய தலைமுறைக்கேற்ப மாற்றம் செய்யப்படாததால் மார்க்கெட் ரேஸில் பின்தங்கியது.
இந்த நிலையில், அம்பாசடரை பழைய அளவுக்கு மார்க்கெட்டில் தூக்கி நிறுத்த ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக, அம்பாசடரில் சில மாற்றங்களை செய்து மீண்டும் விற்பனைக்கு கொண்டு வருகிறது ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ். இன்றைய சிறப்பு தொகுப்பில் குட்டி அம்பாசடர், ஹூண்டாயின் ப்ளூயிடிக் டிசைன் தத்துவத்தில் வரும் எலன்ட்ரா செடான் கார் மற்றும் ஹோண்டா சிஆர்வி கிராஸ்ஓவர் எஸ்யூவியின் தகவல்களை காணலாம்.
காம்பெக்ட் அம்பாசடர்:
மாருதியின் புதிய டிசையர் போன்று அம்பாசடர் அளவை 4 மீட்டருக்கும் குறைவாக வடிவமைத்துள்ளது ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ். இதனால், போக்குவரத்து நெரிசலிலும் எளிதாக செல்லும் காராக இருக்கும். வடிவமைப்பில் பின்புறம் மட்டுமே குறிப்பிட்ட அளவு மாற்றம் கண்டிருக்கும். மேற்படி வடிவமைப்பில் பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
அதேவேளை, மைலேஜ், திறன் ஆகியவற்றில் பெயர் வாங்கிய தற்போதைய அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது. எடையும் குறைகிறது என்பதால் இந்த எஞ்சின் கூடுதல் மைலேஜையும், அதிக பிக்கப்பை தரும் என்பது எதிர்பார்ப்பு. சிஎன்ஜியில் இயங்கும் மாடலும் வரும் என்று தெரிகிறது. தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் அம்பாசடரை விட ரூ.30,000 வரை குறைவான விலையில் வரும் புதிய அம்பாசடர் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்பார்க்கும் விலை: ரூ.4.5 லட்சம்
ஹூண்டாய் ப்ளூயிடிக் எலன்ட்ரா:
அனைத்து கார்களையும் ப்ளூயிடிக் வடிவமைப்பு தத்துவத்தில் ஹூண்டாய் மாற்றி வருகிறது. அந்த வகையில், ஹூண்டாயின் அடுத்த ப்ளூயிடிக் டிசைன் தத்துவத்தில் உருவாகியுள்ள கார்தான் எலன்ட்ரா. மிட்சைஸ் பிரிமியம் செடான் கார் வகையில் வரும் ப்ளூயிடிக் எலன்ட்ரா வடிவமைப்பில் மாத்திரமல்ல. வசதிகளிலும் தரத்திலும் ஹூண்டாயின் பெயரை முணுமுணுக்க செய்யும் அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விற்பனைக்கு வருகிறது எலன்ட்ரா.
இதில், 147 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.8 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது. பழைய மாடலின் முன்பக்க கிரில் பகுதியில் இருக்கும் ஹூண்டாய் பேட்ஜ் புதிய மாடலில் இருக்காது என்பதால் புதிய தோற்றத்துடன் இருக்கிறது. கொரியாவின் சிறந்த காருக்கான விருதை இந்த எலன்ட்ரா பெற்றுள்ளது. சரியான விலையில் அதிக பிரிமியம் அம்சங்களுடன் வரும் எலன்ட்ரா நிச்சயம் விற்பனையிலும் ஹூண்டாய்க்கு நம்பிக்கை தரும் என்று நம்பலாம்.
எதிர்பார்க்கும் விலை: ரூ. 12 லட்சம்
ஃபோர்டு புதிய எண்டெவர்:
பிரிமியம் எஸ்யூவி கார்களுக்கு நம் நாட்டில் வரவேற்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதை மனதில் கொண்டு தனது குளோபல் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட புதிய எண்டெவர் எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வருகிறது ஃபோர்டு. அடுத்த தலைமுறை அம்சங்களுடன் வரும் எண்டெவர் புதுப்பொலிவுடன் வருவதால் வாடிக்கையாளர்களை நிச்சயம் வெகுவாக கவரும்.
அனைத்து சாலை நிலைகளுக்கும் ஏற்ற வகையில் இருக்கும் புதிய எண்டெவரில் தற்போது இருக்கும் 2.5 லிட்டர் எஞ்சினுக்கு பதிலாக 148 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது. இதனால், அதிக எரிபொருள் சிக்கனத்தையும், குறைந்த கார்பன் புகையையும் வெளியிடும் வகையில் இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல்களில் கிடைக்கும்.
எதிர்பார்க்கும் விலை: ரூ.18 லட்சம்


Click it and Unblock the Notifications








