போர்டு ஈக்கோஸ்போர்ட், மஹிந்திரா மினி ஸைலோ-விபரங்கள்
இந்த ஆண்டு மொத்தம் 50 புதிய கார்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட புதிய பைக்குகள் விற்பனைக்கு வர இருக்கின்றன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அந்த புதிய மாடல்களை பற்றி எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் சிறப்பு தொகுப்பை தொடராக வழங்க உள்ளோம். கார் மற்றும் பைக் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இந்த தகவல்கள் உதவும் என நம்புகிறோம்.
இந்த ஆண்டு எஸ்யூவி மற்றும் எம்பிவி ரகத்தில் ஏராளமான புதிய மாடல்கள் விற்பனைக்கு வர இருப்பதால் அந்த செக்மென்ட் சூடு பறக்கும் என்று தெரிகிறது. இன்று போர்டு ஈக்கோ ஸ்போர்ட் மினி எஸ்யூவி, மாருதி எர்டிகா, மஹிந்திராவின் மினி ஸைலோ ஆகிய கார்களின் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
போர்டு ஈக்கோ ஸ்போர்ட்:
உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யும் அளவுக்கு தரம் மற்றும் வடிவமைப்பு கொண்ட கார்கள்தான் குளோபல் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட கார்கள் என்று அழைக்கப்படுகின்றன. அந்த வகையில், அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் வடிவமைத்துள்ள மினி எஸ்யூவிதான் ஈக்கோ ஸ்போர்ட். இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த மினி எஸ்யூவியில் 5 பேர் பயணம் செய்யலாம்.
பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வர இருக்கும் இந்த மினி எஸ்யூவி ஸ்டைல் மற்றும் சொகுசு விரும்புவர்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். போர்டு புதிதாக உருவாக்கியுள்ள 1.0 லிட்டர் ஈக்கோ பூஸ்ட் பெட்ரோல் எஞ்சினுடன் வர இருக்கிறது ஈக்கோ ஸ்போர்ட்.
பொதுவாக, எஸ்யூவி கார்களில் அதிக திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்படுவது வழக்கம். ஆனால், இந்த 1.0 லிட்டர் ஈக்கோ பூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் ஈக்கோ ஸ்போர்ட்டின் எடையை வெகு எளிதாக சமாளித்து சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் கொடுக்கும். தவிர, அதிக எரிபொருள் சிக்கனத்தையும் வழங்கும் என்று ஃபோர்டு தெரிவிக்கிறது.
எதிர்பார்க்கும் விலை: ரூ.9 லட்சம் முதல் ரூ.10 லட்சம்
மாருதி எர்டிகா:
மாருதி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் எம்பிவி கார்தான் எர்டிகா. 7 பேர் செல்லும் வசதி கொண்டதால் முழுக்க முழுக்க குடும்ப காராக வருகிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகிய மாடல்களில் வரும் என்று தெரிகிறது. மஹிந்திரா ஸைலோ, டொயோட்டோ இன்னோவா ஆகிய கார்களைவிட குறைந்த சிசி எஞ்சினுடன் வருவதால் அதிக மைலேஜுக்கு கியாரண்டி.
பட்ஜெட்டில் டீசல் கார்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படலாம் என்பதால் எர்டிகா காரின் விற்பனைக்கு கொண்டு வருவதை மாருதி தள்ளிப்போட்டது. இந்த நிலையில், வரும் 12ந் தேதி புதிய எர்டிகாவை மார்க்கெட்டுக்கு கொண்டு வருகிறது மாருதி. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த புதிய மாருதி கார் வருகிறது.
எதிர்பார்க்கும் விலை: ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம்
மஹிந்திரா மினி ஸைலோ:
எஸ்யூவி தயாரிப்பில் கோலோய்ச்சி வரும் மஹிந்திராவுக்கு சிறிய கார் மார்க்கெட்டிலும் கால் பதித்து விட ஆசை. அதற்காகவே, தனது ஸைலோ எம்பிவியின் மினியேச்சர் மாடலை விற்பனைக்கு கொண்டு வருகிறது. வரும் தீபாவளி பண்டிகை காலத்தில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த மினி ஸைலோ தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற காராக இருக்கும் என்கிறது மஹிந்திரா. 5 பேர் பயணம் செய்யும் வசதி கொண்ட இந்த மினி ஸைலோ ஹேட்ச்பேக் கார்களுக்கு பெரும் போட்டியை கொடுக்கும்.
தமிழகத்தில் பல பகுதிகளில் தற்போது மினி ஸைலோவை மஹிந்திரா தீவிரமாக சாலை சோதனை ஓட்டங்களை நடத்தி வருகிறது. பெட்ரோல் விலை உயர்வால் டீசல் கார்களின் விற்பனை அதிக மவுசு ஏற்பட்டுள்ள நிலையில், மினி ஸைலோ 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் விற்பனைக்கு வர உள்ளது.
எதிர்பார்க்கும் விலை: ரூ.5 லட்சம்
தொடரும்...


Click it and Unblock the Notifications








