செவர்லே க்ரூஸ், ஹோண்டா சிஆர்வி எஸ்யூவி- தகவல்கள்
ஒரு காரை வெற்றிகரமான மாடலாக நிலைநிறுத்துவதில் விலை நிர்ணயம் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. எத்துனை வசதிகள், தரம் இருந்தாலும் விலையை சரியாக நிர்ணயிக்க தவறினால், அந்த மாடல் ப்ளாப் ஆவதற்கு வேறு காரணமே தேவையில்லை.
எனவே, பிற மாடல்களோடு ஒப்பிட்டு கார் விலையை நிர்ணயிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன கார் நிறுவனங்கள். இதற்கு தற்போது ஒரு நூதன வழியை கார் நிறுவனங்கள் கையாளத் துவங்கியுள்ளன. 4 மீட்டருக்கும் குறைவாக இருக்கும் கார்களுக்கு அரசின் வரிச் சலுகை கிடைப்பதால், தங்களது என்ட்ரி லெவல் செடான் கார்களின் நீளத்தை கத்தரித்து வருகின்றன கார் நிறுவனங்கள்.
வரிச்சலுகையால் விலையை கணிசமாக குறைத்து வாடிக்கையாளர்களை கவர்வது எண்ணம்.அந்த வகையில், நீளம் குறைக்கப்பட்ட மாருதி டிசையர் விற்பனைக்கு வந்துவிட்டது. குட்டி மான்ஸாவை களமிறக்க டாடாவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த வரிசையில், மஹிந்திராவும் தனது வெரிட்டோ காரை 4 மீட்டருக்கும் குறைவான நீளத்துடன் தற்போது வடிவமைத்து வருகிறது. இன்றைய சிறப்பு தொகுப்பில் மஹிந்திராவின் குட்டி வெரிட்டோ,செவர்லே குரூஸ் பிரிமியம் கார் மற்றும் ஹோண்டாவின் புதிய சிஆர்வி கார்களின் தகவல்களை காணலாம்.
மஹிந்திரா காம்பெக்ட் வெரிட்டோ:
ரினால்ட்டிடமிருநது பெறப்பட்ட லோஹன் செடான் காரை வெரிட்டோ என்று பெயர் மாற்றம் செய்து மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது. மஹிந்திரா கைவசம் வந்ததிலிருந்து வெரிட்டோ டாக்சி அந்தஸ்திலிருந்து மாறி ஒரு குடும்ப கார் என்ற அந்தஸ்தை நோக்கி செல்கிறது.
மார்க்கெட் போட்டியை சமாளிக்கும் வகையில், வெரிட்டோவை 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் வடிவமைத்து குறைந்த விலையில் விற்பனை செய்ய உள்ளது மஹிந்திரா. இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த குட்டி வெரிட்டோ 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது. குட்டி வெரிட்டோ நிச்சயம் குடும்ப கார் என்ற அந்தஸ்தை முழுமையாக பெற்றுவிடும் என்று கூறலாம்.
எதிர்பார்க்கும் விலை: ரூ.4.5 லட்சம்
செவர்லே குரூஸ்:
கடந்த 2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட செவர்லே குரூஸ் வடிவமைப்பில் ஒரு ஸ்டைலிஷான கார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. தற்போது டி செக்மென்ட்டில் செவர்லே குரூஸ் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது.
விற்பனை வளர்ச்சியை தக்கவைக்கும் விதத்தில், மேம்படுத்தப்பட்ட குரூஸ் மாடலை செவர்லே அறிமுகப்படுத்துகிறது. காருக்குள் ஹெட்ரூம் மேம்பட்டிருக்கிறது.குரூஸ் காரில் பொருத்தப்பட்டிருக்கும் 2.0 லிட்டர் காமன் ரயில் டீசல் எஞ்சின் தற்போது ட்யூனிங் செய்யப்பட்டுள்ளதால் முன்பைவிட 13 பிஎச்பி ஆற்றலை கூடுதலாக வெளிப்படுத்தும்.
எதிர்பார்க்கும் விலை: ரூ.13 லட்சம்
ஹோண்டா சிஆர்வி:
ஹோண்டாவின் பிராண்டு பெயரை பரைசாற்றி வரும் மாடல்களில் ஒன்று சிஆர்வி பிரிமியம் எஸ்யூவி. அதை மேலும் தக்கவைக்கும் விதமாக மிகவும் கவனத்துடன் சிஆர்வியின் வடிவமைப்பில் புதுமைகளை புகுத்தியுள்ளது ஹோண்டா.
தற்போதைய மாடலைவிட அதிக கவர்ச்சி கொண்டதாக வடிவமைக்கப்பட்டு வருகிறது சிஆர்வி பிரிமியம் எஸ்யூவி. பாதுகாப்பு, கையாளுமை, வடிவமைப்பு என எல்லாவிதத்திலும் புதிய சிஆர்வி நிச்சயம் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்துவிடும். 2.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் புதிய சிஆர்வி வருகிறது.
எதிர்பார்க்கும் விலை: ரூ.20 லட்சம்
முற்றும்


Click it and Unblock the Notifications








