டாடாவின் புதிய மான்ஸா, ஆடி க்யூ-3, புதிய பீட்டில்-விபரங்கள்
செடான் கார் மார்க்கெட்டில் புது ட்ரென்ட் உருவாகியுள்ளது. காம்பெக்ட் செடான் கார்கள்(சிஎஸ்) என்றழைக்கப்படும் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட செடான் கார்கள் களமிறங்கி மார்க்கெட்டில் புதிய செக்மென்ட்டை உருவாக்கியுள்ளன.
4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட கார்களுக்கு மத்திய அரசு வழங்கும் வரிச் சலுகையை பயன்படு்த்தி குறைந்த விலையில் கார்களை அறிமுகம் செய்வதில் பல முன்னணி நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.
நீளமான செடான் கார்களில் கத்தரி போட்டு 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக மாற்றி விற்பனைக்கு கொண்டு வரும் முயற்சிகளை பல முன்னணி கார் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. இதில், மாருதி நிறுவனம் முந்திக்கொண்டு தனது டிசையர் செடான் காரை 4 மீட்டருக்கும் குறைவானதாக மாற்றி விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டது.
இதைத்தொடர்ந்து, மான்ஸா காரை டாடா மோட்டார்சும், வெரிட்டோ காரை மஹிந்திராவும் 4 மீட்டருக்குள் வடிவமைத்து விரைவில் விற்பனைக்கு கொணடு வர இருக்கின்றன. விலை குறையும் என்பதோடு, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் வெகு எளிதாக ஓட்டுவதற்கு இந்த கார்கள் ஏதுவாக இருக்கும்.
இன்று டாடா மான்சான்வின் காம்பெக்ட் செடான்(சிஎஸ்)கார் பற்றிய விபரங்களையும், வோக்ஸ்வேகனின் அடுத்த தலைமுறை பீட்டில் கார் மற்றும் ஆடி க்யூ-3 காம்பெக்ட் எஸ்யூவி பற்றிய விபரங்களை காணலாம்.
டாடா மான்ஸா சிஎஸ்:
இன்டிகோ சிஎஸ் காரை போன்றே மான்ஸா காரையும் காம்பெக்ட் செடானாக மாற்றி விற்பனைக்கு கொண்டு வருகிறது டாடா மோட்டார்ஸ். மைலேஜுக்கு புகழ்பெற்ற விஸ்டா ஹேட்ச்பேக் காரில் பொருத்தப்பட்டிருக்கும 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் விற்பனைக்கு வருகிறது.
பிற நிறுவனங்களின் காம்பெக்ட் செடான் கார்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் விதத்தில் இந்த காரின் விலையை நிர்ணயிக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்த காரை விற்பனைக்கு கொண்டு வர டாடாட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்பார்க்கும் விலை: ரூ.5 லட்சம்
வோக்ஸ்வேகன் புதிய பீட்டில்:
பல தலைமுறைகளை கடந்து வெற்றிகரமான மாடலாக வலம் வரும் பீட்டில் காரின் புதிய தலைமுறை பீட்டிலை வோக்ஸ்வேகன் பார்வைக்கு அறிமுகம் செய்துவிட்டது. முன்பை விட அதிக கவர்ச்சியாகியிருக்கும் பீட்டில் உருவத்திலும் பெரிய காராக தெரிகிறது.
158 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 138 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் புதிய பீட்டில் விற்பனைக்கு வர இருக்கிறது. தவிர, உட்புறம் அதிக பிரிமியம் அம்சங்களுடன் வடிவமைத்து அசத்தியுள்ளது வோக்ஸ்வேகன். சினிமா நடிகைகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்.
எதிர்பார்க்கும் விலை: ரூ.25 லட்சம்
ஆடி க்யூ-3 எஸ்யூவி:
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஆடி நிறுவனத்தின் பிரிமியம் காம்பெக்ட் எஸ்யூவி. ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் க்யூ-5 எஸ்யூவியை விட அளவில் மட்டுமல்ல விலையில் குறைவாக இருக்கும் என்பதால்தான் ஆடி ரசிகர்களுக்கு அதீத ஆவலுக்கு காரணம்.
இன்னும் ஓரிரு மாதங்களில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த பிரிமியம் மினி எஸ்யூவியில் 176 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் இந்த எஸ்யூவி 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலிலும் விற்பனைக்கு வருகிறது.
எதிர்பார்க்கும் விலை: ரூ.25 லட்சம்


Click it and Unblock the Notifications








