ரினால்ட் ஸ்கேலா செடான் கார், வோக்ஸ்வேகன் டூரக்- விபரங்கள்
இந்த ஆண்டு ஏராளமான கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருந்தாலும், அதில் சில கார்கள் வாடிக்கையாளரை கவரும் அம்சங்களுடன் அல்லது கூடுதல் சிறப்புகளுடன் வருகிறது.
அந்த வகையில்,ஸ்கோடா ஆட்டோ வடிவமைத்திருக்கும் புதிய ஹேட்ச்பேக் கார்தான் ஸ்கவுட். தற்போது சாலை சோதனைகள் செய்யப்பட்டு வரும் ஸ்கவுட் கார் விரைவில் விற்பனைக்கு கொண்டு வ ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. இன்றைய சிறப்பு தொகுப்பில் ஸ்கோடா ஸ்கவுட், நிசான் சன்னியின் நகலாக ரினால்ட் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் ஸ்கேலா மற்றும் வோக்ஸ்வேகனின் டூரக் பிரிமியம் எஸ்யூவி பற்றிய சிறப்பு தகவல்களை காணலாம்.
ஸ்கோடா ஃபேபியா ஸ்கவுட்:
சீரான சாலைகள் இல்லாத நம் நாட்டில் அதிக கிரவுன்ட் கிளியரன்ஸ் கொண்டதாக கார்களை திருத்தி வடிவமைத்து அனைத்து நிறுவனங்களும் அறிமுகம் செய்வது வாடிக்கைதான். ஆனால், ஒரு எஸ்யூவி காருக்கு இணையான ஹேட்ச்பேக் காரை உருவாக்கி தந்தால் என்ன என்ற எண்ணத்துடன் ஸ்கோடா வடிவமைத்திருக்கும் கார் ஸ்கவுட்.
சஸ்பென்ஷனில் கூடுதல் ஸ்பிரிங்குகளை கொடுத்து கிரவுண்ட் கிளியரன்ஸ் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் பாடியும் கூடுதல் உறுதித்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. காரின் வெளிப்புற பாடியை சுற்றிலும் கீறல்கள் விழாத வகையில் தடுக்கும் கிளாடிங் எனப்படும் பிளாஸ்டிக் கவரிங் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், 4 வீல் டிரைவ் சிஸ்டம் இருக்காது.
1.2 லிட்டர் பெட்ரோல், 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் என 3 எஞ்சின் மாடல்களில் விற்பனைக்கு வர உள்ளது. இதில், 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்105 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறனை கொண்டது.
எதிர்பார்க்கும் விலை: ரூ.6 லட்சம்
ரெனோ ஸ்கேலா:
நிசான் விற்பனை செய்து வரும் சன்னி காரின் நகல்தான் இந்த ஸ்கேலா. சன்னியின் வடிவமைப்பில் ஒரு சில மாற்றங்களை செய்து தனது பிராண்டு முத்திரையை பதித்து ஸ்கேலாவை விற்பனைக்கு கொண்டு வருகிறது.
எல்-58 என்ற குறியீட்டு பெயரில் தற்போது வடிவமைக்கப்பட்டு வரும் ஸ்கேலா 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் விற்பனைக்கு வர இருக்கிறது. வரும் செப்டம்பரில் இந்த காரை விற்பனைக்கு கொண்டு வர ரினால்ட் திட்டமிட்டுள்ளது.
எதிர்பார்க்கும் விலை: ரூ.7 லட்சம்
வோக்ஸ்வேகன் டூரக்:
மேல்தட்டு வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் ஒரு நேர்த்தியான வடிவமைப்பு கொண்ட எஸ்யூவியாக டூரக்கை கூறலாம். டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இந்த பிரிமியம் ரக எஸ்யூவி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
தரம், தாராள இடவசதி, பாதுகாப்பு வசதிகள் என அனைத்திலும் மற்ற பிரிமியம் எஸ்யூவி மாடல்களை விஞ்சி நிற்கிறது டூரக். 380 பிஎச்பி ஆற்றலை வாரி இறைக்கும் 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த எஸ்யூவி பேட்டரியிலும் இயங்கும் ஹைபிரிட் ரகத்தை சேர்ந்ததாக விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று வோக்ஸ்வேகன் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்பார்க்கும் விலை: ரூ.55 லட்சம்


Click it and Unblock the Notifications








