செவர்லே செயில், ஃபோர்ஸ் எம்பிவி, சாங்யாங் கொரண்டூ- தகவல்கள்
நடுத்தர வர்க்கத்தினரின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளதால், சிறிய கார்களிலிருந்து பிரிமியம் ரக ஹேட்ச்பேக் கார்களுக்கு மாறத் துவங்கியுள்ளனர். ஏபிஎஸ், மியூசிக் சிஸ்டம் என எண்ணிலடங்கா வசதிகளை பிரிமியம் ஹேட்ச்பேக் கார்கள் வழங்குவதும் வாடிக்கையாளரின் கவனம் இந்த மாடல்களின் மீது விழுகிறது.
மாருதி ஸ்விப்ட், ஹூண்டாய் ஐ20, ஹோண்டா ஜாஸ் ஆகிய கார்கள் வசதிகள், தொழில்நுட்பம் என எல்லாவகையிலும் சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் இந்த கார்களின் மீது அதிக விருப்பம் கொண்டுள்ளனர். மேலும், மிட்சைஸ் கார்களைவிட விலை குறைவு.எனவே, பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட் விற்பனை சூடுபிடித்துள்ளது.
இதனால், பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட் மீது அனைத்து கார் நிறுவனங்களும் கண்ணும் கருத்துமாக செயல்படுகின்றன. மேலும், இந்த மார்க்கெட்டில் மாருதி ஸ்விப்ட் விற்பனையில் சக்கைபோடு போடுவதால், அந்த காரின் விற்பனையை கொஞ்சமாவது தன் பக்கம் இழுத்துவிட வேண்டும் என்று அனைத்து நிறுவனங்களுமே முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் களமிறக்க உள்ள செவர்லே செயில் பிரிமியம் ஹேட்ச்பேக், ஃபோர்ஸ் மோட்டார்ஸ் எம்பிவி மற்றும் மஹிந்திராவின் சாங்யாங் மோட்டார்ஸ் தயாரிப்பான கொரண்டோ எஸ்யூவி ஆகியவற்றின் தகவல்களை இன்றைய சிறப்பு தொகுப்பில் காணலாம்.
செவர்லே செயில்:
தனது சீன கூட்டணி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யும் ஹேட்ச்பேக் காரை செயில் என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது ஜெனரல் மோட்டார்ஸ். மாருதி ஸ்விப்ட் மார்க்கெட்டை குறிவைத்து பிரிமியம் ரகத்தில் இந்த காரை விற்பனைக்கு விட திட்டம் தீட்டியுள்ளது ஜிஎம்.
1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் ஃபியட்டின் மல்டிஜெட் டீசல் எஞ்சினுடன் இந்த கார் வரும் என்று தெரிகிறது. மேலும், சலூன் வடிவமைப்பில் வரும் இந்த கார் வாடிக்கையாளர்களை கிறங்கடிக்கும் வசதிகளுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கும் விலை: ரூ.4.5 லட்சம்
ஃபோர்ஸ் எம்பிவி:
டெம்போ டிராவலர் மூலம் புகழ்பெற்ற ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கடந்த ஆண்டு ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வந்தது. இதற்கடுத்து, மெர்சிடிஸ் பென்ஸ் கூட்டணியில் புதிய எம்பிவி காரை வடிவமைத்து வருகிறது. பென்ஸ் நிறுவனத்தின் வயானோ எம்பிவி பிளாட்பார்மில்தான் இந்த புதிய எம்பிவி வடிவமைக்கப்பட்டு வருகிறது.
139 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் காமன் ரயில் டீசல் எஞ்சினுடன் இந்த புதிய எம்பிவி விற்பனைக்கு வருகிறது. இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். இது ரியர் வீல் டிரைவ் கொண்ட எம்பிவியாக இருக்கும்.
எதிர்பார்க்கும் விலை: ரூ.11 லட்சம்
சாங்யாங் கொரண்டோ எஸ்யூவி:
தனது கீழ் இயங்கும் தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் மோட்டார்சின் கொரண்டோ எஸ்யூவியை விரைவில் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வருகிறது மஹிந்திரா. பிரிமியம் அம்சங்களுடன் காம்பெக்ட் எஸ்யூவியான கொரண்டோ சாங்யாங் மோட்டார்சின் வெற்றிகரமான மாடல்களில் ஒன்று.
மிகுந்த எதிர்பார்ப்புடன் மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வரவுள்ள இந்த காம்பெக்ட் எஸ்யூவியில் 173 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 5 பேர் பயணம் செய்யும் வசதி கொண்ட இந்த எஸ்யூவி பிரிமியம்+காம்பெக்ட் காரை வாங்க ஆவலாக உள்ளவர்களை தன்வசப்படுத்தும்.
எதிர்பார்க்கும் விலை: ரூ.15 லட்சம்


Click it and Unblock the Notifications








