பிஎம்டபிள்யூ காருக்கு டூ வீலர் நம்பரை பயன்படுத்திய தொழிலதிபருக்கு அபராதம்

விலையுயர்ந்த கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் அந்த கார்களுக்கு விதிக்கப்படும் வரியை தவிர்ப்பதற்காக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது.
இந்த நிலையில், பெங்களூர், எலக்ட்ரானிக் சிட்டி போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் இதுபோன்று வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டறிவதற்காக அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளனர். இதில், கோரமங்களா பகுதியை சேர்ந்த மஞ்சுளா என்ற ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர் வரியை தவிர்ப்பதற்காக தனது பிஎம்டபிள்யூ சொகுசு காரை பதிவு செய்யாமல் இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை போலியாக பயன்படுத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து, வட்டார போக்குவரத்து அலுவலர் ஷோபா, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கிருஷ்ணானந்தா மற்றும் சிவக்குமார் ஆகியோர் அந்த காரை அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, மஞ்சுளா மீது ஆனேக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக அந்த காரை பதிவு செய்யாமல் அந்த தொழிலதிபர் ஓட்டி வந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மஞ்சுளாவுக்கு ரூ.6.2 லட்சம் அபாரதம் விதித்தது. இதுதொடர்பாக, எலக்ட்ரானிக் சிட்டி வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் கூறுகையில்," கர்நாடகத்தில் விலையுயர்ந்த கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் சிலர் புதுச்சேரியில் வரி குறைவு என்பதால் அங்கு போய் பதிவு செய்கின்றனர்.
ஆனால், கர்நாடகத்தில் வாகனத்தின் விலையில் 20 சதவீதம் அளவுக்கு வரி செலுத்த வேண்டும். ஒரு கோடி ரூபாய் காருக்கு பதிவு கட்டணமாக ரூ.20 லட்சம் வரை வரி செலுத்த வேண்டும். எனவே, வரி கட்டுவதை தவிர்க்க மோசடிகளில் ஈடுபடுகின்றனர். ஆனால், மஞ்சுளா நூதன முறையில் இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை போலியாக பயன்படுத்தி பிஎம்டபிள்யூ காரை ஓட்டி வந்துள்ளார்.
மேலும், எளிதாக கண்டுபிடிக்க முடியாத வகையில், பதிவு எண்ணை சிறியதாக காரில் எழுதியுள்ளார். இதுபோன்ற, கார்களை கண்டறிவதில் சிரமம் இருக்கிறது," என்றனர்.


Click it and Unblock the Notifications








