எர்டிகா சூறாவளியில் வீழ்ந்து விடுமோ இன்னோவா?
தாராள இடவசதி, அதிர்வு இல்லாத பயணம், பெர்ஃபார்மென்ஸ் கொண்ட எஞ்சின் என எந்தவிதத்திலும் குறைவில்லாத கார் என்பதால், எம்பிவி செக்மென்ட்டில் வெற்றி வீரனாக வலம் வந்து கொண்டிருந்தது டொயோட்டா இன்னோவா.
செவர்லே தவேரா, டாடா ஆரியா, மஹிந்திரா ஸைலோ போன்ற போட்டியாளர்கள் எந்தவிதத்திலும் நெருக்கடி கொடுக்க முடியாததால் இன்னோவாவின் ஆதிக்கம் எம்பிவி செக்மென்ட்டில் நீக்கமற நிறைந்திருந்தது. இவையெல்லாம், எர்டிகா வருவதற்கு முன்பு வரைதான்.

ஆம், அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை 40,000 புக்கிங்குகளை வாரி சுருட்டியுள்ளது எர்டிகா. இது நிச்சயம் இன்னோவா சாம்ராஜ்யத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருப்பது உண்மை.
இதற்கு முக்கிய காரணம் விலை. விலை நிர்ணயம் என்பது புதிய மாடல்களின் வெற்றிக்கு முக்கிய காரணம். அந்த வகையில், விலை நிர்ணயம் செய்வதில் கைதேர்ந்த மாருதி எர்டிகாவை யாரும் எதிர்பாராத வகையில், பெட்ரோல் மாடலை ரூ.5.89 லட்சத்திலும், டீசல் மாடலை ரூ.7.30 லட்சத்திலும் விற்பனைக்கு இறக்கி விட்டது.
தனது விலை நிர்ணய பார்முலாவை எர்டிகாவிலும் கையாண்டதற்கு மாருதிக்கு தற்போது கைமேல் பலன் கிடைத்துள்ளது. இன்னோவாவைவிட எர்டிகாவின் விலை ரூ.6 லட்சம் குறைவு. இதுவே, எர்டிகாவின் புக்கிங் வெற்றிக்கு காரணமாகியுள்ளது.
தவிர, பெட்ரோல் தவிர டீசல் எஞ்சின் மாடலிலும் எர்டிகா கிடைப்பதும், மாருதியின் நம்பகத்தன்மையும், பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க்கும் எர்டிகாவை எளிதாக வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்கிறது. தினசரி அலுவலக பயன்பாடு, வார இறுதி சுற்றுலா மற்றும் நெடுந்தூர பயணங்கள் என அனைத்துக்கு ஏற்ற காராக எர்டிகாவை வடிவமைத்துள்ளது மாருதி.
இது ஒருபுறம் இருந்தாலும் இன்னோவா விற்பனையில் பெரிய பாதிப்பு ஏற்படாது என டொயோட்டோ கருதுகிறது. வர்த்தக ரீதியிலான விற்பனையில் இன்னோவா தனது இடத்தை அவ்வளவு சீக்கிரமாக விட்டுத் தராது என்றும் கருதப்படுகிறது.
மேலும், இன்னோவா விற்பனையை தற்காத்து கொள்ள இந்தோனேஷியா மார்க்கெட்டில் அவெஞ்ஜா என்ற பெயரில் டொயோட்டோ விற்பனை செய்து வரும் சிறிய எம்பிவி காரை(மினி இன்னோவோ) இந்தியாவில் அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








