ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரை முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்துகிறார்
புதிய ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்துவார் என்று ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி பிரேசிலில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு அங்கு பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், ரெனோ டஸ்ட்டருக்கும், ஈக்கோஸ்போர்ட்டுக்கும் அங்கு போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், வரும் ஜனவரியில் இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவியை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய இருக்கிறது ஃபோர்டு. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த புதிய எஸ்யூவி புதிய 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் மற்றும் டீசல் எஞ்சின் மாடல்களில் வர இருக்கிறது.
தவிர, கெத்தான வடிவமைப்ப கொண்ட ஈக்கோஸ்போர்ட் வரவை எதிர்பார்த்து வாடிக்கையாளர்கள் வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில், இந்த புதிய எஸ்யூவியை அறிமுகம் செய்வதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஃபோர்டு நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அழைப்பு ஏற்றுக்கொண்ட அவர் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை அறிமுகப்படுத்த இசைந்துள்ளதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது. முதல்வரிடம் தேதி பெற்றுக்கொண்ட பின்னர் அறிமுக தேதி முடிவு செய்யப்பட இருப்பதாக ஃபோர்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2010ம் ஆண்டில் ஃபிகோ ஹேட்ச்பேக் காரை அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிமுகம் செய்து வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








