டீசல் விலையை லிட்டருக்கு ரூ.10 வரை உயர்த்த மத்திய அரசு திட்டம்!

பெட்ரோல் விலை உயர்வால் டீசல் கார் விற்பனை சூடு பறக்கிறது. இதனால், டீசல் நுகர்வு பல மடங்கு உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக, டீசலுக்கு வழங்கி வரும் மானியத் தொகையை கணிசமாக உயர்த்த வேண்டிய நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
தவிர, ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ9.28 வரை இழப்பு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இழப்பை தவிர்க்க உடனடியாக டீசல் விலையை உயர்த்த அனுமதிக்குமாறு மத்திய அரசை எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இதையடுத்து, மாற்று வழிகள் குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. மேலும், அடுத்த ஆண்டு டீசல் விலையை ரூ.10 வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. ஒரே தடவையில் ரூ.10 வரை உயர்த்தினால் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டி வரும்.
மேலும், பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் வேளையில் அது நிச்சயம் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, டீசல் விலையை தவணை முறையில் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மாதத்திற்கு ஒரு ரூபாய் வீதம் தவணை முறையில் 10 மாதங்களுக்கு டீசல் விலையை உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டீசல் விலை உயர்வால் ஏற்கனவே அத்தியாவசிப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், புத்தாண்டு பரிசாக மத்திய அரசு டீசல் விலை உயர்வை அறிவித்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தவிர, இது கார் மார்க்கெட்டிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். டீசல் விலை தவிர மண்ணெண்ணெய் விற்பனையிலும் கடும் இழப்பு ஏற்பட்டு வருவதால் லிட்டருக்கு ரூ.10 வரை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications








