புதிய ஹூண்டாய் எலன்ட்ரா: படங்களுடன் சிறப்பம்சங்கள் பார்வை
ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய எலன்ட்ரா பல்வேறு சிறப்பு வசதிகளுடன் வந்திருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைப்பதோடு, புதிய எலன்ட்ரா மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல்களிலும் கிடைக்கும். சென்னையில் ரூ.15.24 லட்சம் முதல் ரூ. 19.25 லட்சம் வரையிலான ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு வந்திருக்கும் எலன்ட்ராவின் முக்கிய சிறப்பம்சங்களை கீழே காணலாம்

டூவல் ஸோன் ஏசி: டூவல் ஸோன் ஆட்டோமேட்டிக் ஏசி வெளியில் எத்தகைய தட்பவெப்பம் நிலவினாலும் காருக்குள் சீரான குளிர்ச்சியை வழங்கும். ஏசியை கூட்டவோ, குறைக்கவோ தேவையில்லை. இதனால், பயணத்தின்போது சிறந்த அனுபவத்தை பெற முடியும்.
கிளவ் பாக்ஸ் கூலர்: எலன்ட்ரா கிளவ் பாக்ஸ் கூலர் வசதியை கொண்டிருக்கிறது. குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை கிளவ் பாக்சில் வைத்துக்கொண்டால் ஃபிரிட்ஜில் வைத்தது போன்று சில்லென்று இருக்கும். சென்னை போன்ற நகரங்களுக்கு அவசியமான வசதி.
ஸ்டீயரிங்கில் கன்ட்ரோல் ஸ்விட்சுகள்: டிரைவிங்கின்போது கன்ட்ரோல் ஸ்விட்சுகளை தேடாமலும், தாவி பிடிக்காத வகையிலும் ஸ்டீயரிங் வீலில் பல கன்ட்ரோல் ஸ்விட்சுகள் பொருத்தப்பட்டுள்ளன. குரூஸ் கன்ட்ரோல், ஆடியோ கன்ட்ரோல் உள்ளிட்ட ஸ்விட்சுகள் ஸ்டீயரிங் வீலில் பொருத்தப்பட்டுள்ளதால் டிரைவிங்கின்போது கூடுதல் வசதியை தரும்.
ஸ்மார்ட் கீ மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட்: வெர்னாவை தொடர்ந்து எலன்ட்ராவிலும் இந்த வசதி வந்திருக்கிறது. பாக்கெட்டில் சாவி இருந்தால் போதும் காரை ஒரு பட்டனை அழுத்தி ஸ்டார்ட் செய்யலாம். இதேபோன்று, கதவை மூடுவது, திறப்பதற்கும் இந்த ஸ்மார்ட் கீ சிஸ்டம் உதவும்.
பவர் அட்ஜெஸ்டபிள் டிரைவர் இருக்கை: எந்த உயரம் கொண்டவராயினும் சிறப்பாக அமர்ந்து டிரைவிங் செய்யும் வகையில் 10 வே அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் இருக்கையை கொண்டிருக்கிறது எலன்ட்ரா.
இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் மற்றும் விஎஸ்எம்: அவசரத்திலும், பதட்டத்திலும் அளவுக்கு மீறி பிரேக்கை அழுத்திவிட்டாலும் இந்த தொழில்நுட்பம் காரின் வீல்களுக்கு சரிசமமான பவரை செலுத்தி காரை அழகாக நிறுத்திவிடும். மேலும், கார் கவிழாமலும் பார்த்துக் கொள்ளும். மேலும், இந்த தொழில்நுட்பத்துடன் தற்போது விஎஸ்எம் எனப்படும் தொழில்நுட்பமும் ஒருங்கிணைந்து செயல்படும். பதட்டத்தில் பவர் ஸ்டீயரிங்கை ஒரே பக்கத்தில் அதிக அளவு திருப்பினாலும், சரியான பவரை செலுத்தும்.
ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்: இருளான பகுதிகளில் செல்லும்போதோ அல்லது போதிய வெளிச்சம் இல்லாதபோது தானியங்கி முறையில் ஹெட்லைட்டுகள் ஒளிரும். சில சமயம் பார்க்கிங் பகுதிகளுக்குள் செல்லும் போது வெளிச்சம் குறைவாக இருந்தால் ஹெட்லைட்டை நாம் ஆன் செய்ய வேண்டியதில்லை. தானாக எரியும் என்பதால் காரை கவனமாக பார்த்து ஓட்ட முடியும்.


Click it and Unblock the Notifications








