ரோல்ஸ்ராய்ஸ் குடும்பத்தில் இருக்கும் இந்திய பிரபலங்கள்!
உலகின் ஒவ்வொரு கோடீஸ்வரர்களும் ரோல்ஸ்ராய்ஸ் கார் உரிமையாளராகி விடுவதை கனவாக கொண்டிருக்கின்றனர். ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்குவதை கனவு என்று குறிப்பிடுவதற்கு காரணம் கையில் கோடியாக கோடியாக பணமிருந்தாலும் ரோல்ஸ்ராய்ஸ் காரை நினைத்தவுடன் வாங்கிவிடமுடியாது. காரணம். கோடிகளை கொடுத்துதான் விற்பனை செய்தாலும், வாடிக்கையாளர்களின் பின்புலத்தை அடிப்படையாக வைத்துதான் கார்களை விற்பனை செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறது ரோல்ஸ்ராய்ஸ்.
இதில், ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்துக்கு பலன் கிடைக்கிறதா இல்லையா என்பது ஒருபுறம் இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு 'ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்' விஷயமும் இருக்கிறது. அதாவது, ரோல்ஸ்ராய்ஸ் காரில் செல்ல வேண்டும் என்ற நீண்ட நாளைய கனவும் நனவாகும். அதேநேரத்தில், ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் பின்புலத்தை ஆராய்ந்து வாடிக்கையாளராக்கிக் கொள்வதால், அநத் குடும்பத்தில் இணைவதன் மூலம் கூடுதல் அந்தஸ்தையும் பெற்றுவிட முடியும். அந்த வகையில், ரோல்ஸ்ராய்ஸ் குடும்பத்தில் அங்கத்தினர் ஆகியுள்ள இந்தியாவின் முக்கிய பிரபலங்களை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

நடிகர் அமிதாப்பச்சன்
அமிதாப்பச்சனிடம் இருக்கும் கார்களை ஒரே செய்தியில் வழங்க முடியாது என்பதால் ஏற்கனவே அமிதாப் கார்கள் பற்றிய செய்தித்தொகுப்பை வழங்கினோம். அவரிடம் மொத்தம் 11 கார்கள் இருக்கின்றன. அதில், ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் ஃபாண்டம் காரும் ஒன்று. அவர் வைத்திருக்கும் கார் வரி, பதிவு கட்டணம் உட்பட ரூ.4.5 கோடி விலை கொண்டது. இந்த காரை பாலிவுட்டின் பிரபல இயக்குனர் விது வினோத் சோப்ரா அமிதாப்புக்கு பரிசாக வழங்கினார் என்பது நினைவிருக்கலாம். பிக் பி.,க்கு இது ஜூஜு.,பிதான்..!!

நடிகர் ஆமிர்கான்
பாலிவுட்டின் முன்னணி ஹீரோவாக வலம் வரும் ஆமிர்கான் கடந்த ஆண்டுதான் கோஸ்ட் காரை வாங்கி ரோல்ஸ்ராய்ஸ் குடும்பத்தில் இணைந்தார். ரூ.2.5 கோடி விலை கொண்ட இந்த காருக்கு ரூ.47 லட்சம் கட்டணம் செலுத்தி பதிவு செய்துள்ளார். மேலும், ரூ.3 லட்சம் கொடுத்து எம்எச் 11 ஏஎச் 1 (MH 11 AH 1 )என்ற பேன்ஸி நம்பரையும் வாங்கினார். மெட்டாலிக் சில்வர் நிற கோஸ்ட்தான் தற்போது ஆமிர் கேரேஜின் காஸ்ட்லி உறுப்பினர். மொத்த அடக்கம் ரூ.3.11 கோடியாம். கணக்கு இடிக்குதே..!!

மான்யாட்டா தத்
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் தனது மனைவி மான்யாட்டாவுக்கு ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரை வாங்கி பரிசளித்தார். கடந்த 2010ம் ஆண்டு மான்யாட்டாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. அன்றைய தினத்திலேயே தனது குழந்தைகள் மற்றும் மனைவிக்கும் பரிசாக இந்த காரை சிறப்பு ஏற்பாடுகள் மூலம் அவர் டெலிவிரி பெற்று பரிசாக வழங்கினார். மும்பையில் எம்எச் 02 சிபி 4545 (MH 02 CB 4545) என்ற கார் கண்ணில் பட்டால் அது சாட்சாத் மான்யான்ட்டா தத் கார்தான்.

நடிகர் சிரஞ்சீவி
மெகாஸ்டார் என்று தெலுங்கு ரசிகர்களால் அழைக்கப்படும் சிரஞ்சீவியின் 53-வது பிறந்தநாளின்போது அவரது மகனும், நடிகருமான ராம்சரண் தேஜா ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் காரை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கினார். இந்த கருப்பு நிற ஃபான்டம் கார் ரூ.4 கோடி விலையில் வாங்கப்பட்டது. உண்மையிலேயே 'மெகா' கிப்ட்தான்..!!

தொழிலதிபர் விஜய் மல்லையா
ஆடம்பரத்தின் அடையாளமாக திகழ்ந்த விஜய் மல்லையா ஓர் சுகவாசி. அதிலும், வாகனங்கள் மீது தீராத காதல் கொண்டவர். அந்த வகையில், கோஸ்ட் காரை வைத்திருக்கிறார். பல கோடி மதிப்புடைய ரோல்ஸ்ராய்ஸ் தவிர இவரிடம் மேபேக் ஆடம்பர காரும் இருக்கிறது. கோஸ்ட் 'ஸ்டெடி'யா போகுதுல்ல..!!

நடிகர் விஜய்
நடிகர் விஜய் சமீபத்தில்தான் ரோல்ஸ்ராய்ஸ் குடும்பத்தில் இணைந்துள்ளார். இளயை தலைமுறை நட்சத்திரங்களில் ரோல்ஸ்ராய்ஸ் குடும்பத்தில் முதலாவதாக சேர்ந்த பெருமையை விஜய் பெற்றுள்ளார். ரூ.3.5 கோடி விலையில் கோஸ்ட் காரை இவர் வாங்கியது பற்றி சமீபத்தில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இயக்குனர் ஷங்கர்
இந்திய திரை உலகின் மாபெரும் சக்தியாக திகழ்ந்து வரும் இயக்குனர் ஷங்கர் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் கோஸ்ட் காரை வாங்கி ரோல்ஸ்ராய்ஸ் குடும்பத்தில் இணைந்தார். வரி, பதிவுக்கட்டணம், பேன்ஸி நம்பர் உட்பட ரூ.3.5 கோடி கொடுத்து இந்த காரை சொந்தமாக்கியுள்ளார்.

ரோல்ஸ்ராய்ஸ் பிராண்ட்
பிரிட்டிஷ் பிராண்டான ரோல்ஸ்ராய்ஸ் பாரம்பரியம் மிக்க ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனம். அனைத்து கார் நிறுவனங்களும் கார்களை எப்படியாவது விற்று தீர்த்துவிட எத்தனித்து வரும் நிலையில், வெறும் வர்த்தக நோக்கில் இல்லாமல் நிறுவனத்துக்கென சில கொள்கைகளை வகுத்துக்கொண்டு அதனை பின்பற்றி கார் விற்பனையை செய்து வருகிறது. அதனால், அரச பரம்பரையினர், தொழிலதிபர்கள், நட்சத்திரங்கள் என பெரும் பணக்காரர்களின் கனவு பிராண்டாக இன்றளவும் இருந்து வருகிறது.


Click it and Unblock the Notifications








