குவான்ட்டோவுக்கு 10,000 பேர் முன்பதிவு: உற்பத்தியை கூட்டும் மஹிந்திரா

கடந்த செப்டம்பரில் விற்பனைக்கு வந்த குவான்ட்டோ காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அனைத்து சாலைநிலைகளுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் வாடிக்கையாளர் தேர்வில் குவான்ட்டோ காருக்கு முக்கிய இடம் கிடைத்திருக்கிறது.
மேலும், ஹேட்ச்பேக் கார்களுக்கு இணையான விலையில் குவான்ட்டோ கிடைப்பதும் வாடிக்கையாளர்கள் பார்வை திரும்பியதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வந்திருக்கும் குவான்ட்டோ மைலேஜிலும் திருப்திப்படுத்துகிறது.
இந்த நிலையில், குவான்ட்டோ கார் அறிமுகம் செய்யப்பட்டு 2 மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில், இதுவரை 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக மஹிந்திரா வெளியிட்டிருக்கும் தகவலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், முன்பதிவு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் குவான்ட்டோ உற்பத்தியை கூட்டுவதற்கும் மஹிந்திரா முடிவு செய்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் உள்ள ஆலையில் தற்போது மாதத்திற்கு 2,500 குவான்ட்டோ கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. காத்திருப்பு காலம் அதிகரித்து வருவதால் மாதத்திற்கு 3,500 குவான்ட்டோ கார்களை உற்பத்தி செய்வதற்கு மஹிந்திரா முடிவு செய்திருக்கிறது. வரும் ஜனவரி மாதம் முதல் உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட இருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








