ரூ.5.31 லட்சத்தில் புதிய மாருதி ரிட்ஸ் அறிமுகம்: டீசலில் மட்டும் கிடைக்கும்
ரூ.5.31 லட்சத்தில் புதிய ரிட்ஸ் ஹேட்ச்பேக் காரை மாருதி அறிமுகம் செய்துள்ளது. புதிய ரிட்ஸ் கார் டீசல் மாடலில் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு ரிட்ஸ் காரை மாருதி விற்பனைக்கு கொண்டு வந்தது. இதுவரை அந்த காரில் எந்த மாற்றங்களும் செய்யப்படாமல் விற்பனையாகி கொண்டு வருகிறது. இந்த நிலையில், மார்க்கெட்டில் புதிய கார்களின் வரவால் போட்டி அதிகமாகி இருப்பதால் ரிட்ஸ் காரை புதுப்பொலிவுடன் மாற்றி இருக்கிறது மாருதி.
மொத்தம் 52 புதிய மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக மாருதி தெரிவித்துள்ளது. புதிய கிரில், ஹெட்லைட் வடிவமைப்பு, பானட்டில் சிறிய மாற்றம் என ஆங்காங்கே கை வைத்துள்ளது மாருதி. பனி விளக்குகள் அமைவிடமும் மாற்றத்தை சந்தித்துள்ளது. இது முற்றிலும் வித்தியாசமான கெட்டப்பை ரிட்ஸ் ஹேட்ச்பேக்குக்கு கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. உட்புறத்திலும் பொலிவை கூட்டியுள்ளது மாருதி.
புதிய ரிட்ஸ் கார் டீசல் மாடலில் மட்டுமே வந்திருக்கிறது. 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வந்திருக்கும் ரிட்ஸ் கார் இதுவரை எல்டிஐ பேஸ் வேரியண்ட் மற்றும் விடிஐ மிட் வேரியண்ட்டில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த விலையில், புதிய ரிட்ஸ் காரில் கூடுதலாக இசட்டிஐ டாப் வேரியண்ட் சேர்க்கப்பட்டுள்ளது.
பழைய ரிட்ஸ் டீசல் கார் லிட்டருக்கு 21 கிமீ மைலேஜ் தரும் என சான்றளிக்கப்பட்ட நிலையில், புதிய ரிட்ஸ் லிட்டருக்கு 23.2 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் மாருதி ஆலைகளில் நடந்த தொழிலாளர் வன்முறை பிரச்னையால் ஸ்விப்ட் உற்பத்தி பாதித்தது. இந்த நிலையில், பண்டிகை காலம் துவங்கியிருக்கும் நிலையில் புதிய ரிட்ஸ் மூலம் விற்பனையை ஓரளவு கூட்ட முடியும் என்ற முடிவோடு முன்கூட்டியே அறிமுகம் செய்துள்ளது. தவிர, புதிய ரிட்ஸை வைத்து ஸ்விப்ட் சுமையை குறைத்துக்கொள்ள முடியும் என மாருதி நம்புகிறது.
புதிய ரிட்ஸ் பேஸ் வேரியண்ட் ரூ.5.31 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், புதிய டாப் வேரியண்ட் கார் ரூ.6.23 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








