புதுசா கார் வாங்கப் போறீங்களா, உங்களுக்கு 2 மாதத் தவணைகள் அதிகம்?!

புத்தாண்டு பிறப்பதற்கு முன்பே வாடிக்கையாளர்களுக்கு இது கசப்பான செய்தியாகத்தான் இருக்கும். இந்த ஆண்டு மட்டும் 4 முறை கார்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. வருவாயில் கணிசமாக பாதிப்பு ஏற்படுவதாக கூறி அடிக்கடி கார் நிறுவனங்கள் விலையை உயர்த்தி வருகின்றன. உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு, ரூபாய் மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் போன்றவற்றை தங்களால் ஈடுசெய்ய முடியாது என்று அதை அப்படியே வாடிக்கையாளர்கள் தலையில் கட்டி விடுகின்றன.
நாட்டில் அதிக கார்களை விற்பனை செய்யும் மாருதி நிறுவனம் தனது அனைத்து மாடல்களின் விலையையும் ரூ.20,000 வரை உயர்த்தப் போவதாக நேற்று அறிவித்தது. இதற்காகவே காத்திருந்தது போல பிற நிறுவனங்களும் கார் விலையை உயர்த்தப் போவதாக அடுத்தடுத்து அறிவித்து வருகின்றன.
டொயோட்டா நிறுவனம் 2 விழுக்காடு வரையிலும், ஜெனரல் மோட்டார்ஸ் 3 விழுக்காடு வரையிலும் கார் விலையை உயர்த்தப் போவதாக உடனடியாக அறிவித்துவிட்டன. ஏனைய நிறுவனங்களும் இன்று விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டுவிடும். ஜனவரி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வர இருக்கிறது.
இந்த கூடுதல் சுமை கார் வாங்க திட்டமிட்டுள்ள மற்றும் முன்பதிவு செய்து காத்திருப்பவர்களின் தலையில் விழுகிறது. ரொக்கத்துக்கு வாங்குபவர்களைவிட நம் நாட்டில் 80 விழுக்காடு வாடிக்கையாளர்கள் கடன் திட்டம் மூலமே வாங்குகின்றனர். இதுபோன்று, ஒவ்வொரு முறை கார் விலை உயர்வின்போதும் மாதா மாதம் ரூ.200 முதல் ரூ.500 வரை கூடுதலாக கட்ட வேண்டி வரும்.
மாதம் ரூ.200 ரூபாய்தானே கூடுதல் என்று நினைத்தாலும், மொத்தமாக கணக்கிடும்போது மாதச் சம்பளத்தில் ஒன்றிரண்டு மாதத் தவணைகளை கூடுதலாக செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இது ஒரு தடவை உயர்த்தப்படும் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்பு. அதேவேளை, ஆண்டுக்கு 3 முதல் 4 தடவை கார் விலை உயர்த்தப்படும்போது அவர்களின் சம்பளத்திலிருந்து மாதா மாதம் ரூ.1,000 முதல் ரூ.2,500 வரை மாதத் தவணையில் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.
எனவே, கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் டீலரிடம் சென்று 'தெளிவாக' ஒரு விசாரணையை போட்டு முன்பதிவு செய்துவிடுங்கள். இல்லாவிட்டால் முன்பதிவு செய்துள்ளவர்கள் இந்த மாதத்திலேயே காரை டெலிவிரி பெற முயற்சியுங்கள்.


Click it and Unblock the Notifications








