முதலில் 301 மிட்சைஸ் செடான் காரை களமிறக்கும் பீஜோ

ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்காவை சேர்ந்த கார் நிறுவனங்கள் இந்திய மார்க்கெட்டில் சீரான வளர்ச்சியை பெற்று வருகின்றன. இதை பார்த்து பிரான்ஸ் கார் நிறுவனங்களும் இந்திய மார்க்கெட்டை குறிவைத்து களமிறங்கி வருகின்றன.
கடந்த ஆண்டு பிரான்சை சேர்ந்த ரினால்ட் நிறுவனம் மஹிந்திராவை உதறிவிட்டு மார்க்கெட்டில் தனித்து களமிறங்கிவிட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது மற்றொரு நிறுவனமான பீஜோ இந்திய மார்க்கெட்டில் களமிறங்க உள்ளது.
இதற்காக, குளோபல் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ள தனது புத்தம் புதிய 301 மிட்சைஸ் செடான் காரை இந்திய மார்க்கெட்டில் முதலில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு பீஜோ திட்டமிட்டுள்ளது. இந்த புதிய செடான் காரின் புகைப்படங்கள் மற்றும் விபரங்களை முதன்முறையாக பீஜோ வெளியிட்டிருக்கிறது.
வரும் செப்டம்பர் மாதம் பாரீஸ் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட இருக்கும் இந்த புதிய செடான் காரை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்கும் திட்டமும் பீஜோவிடம் உள்ளது. ஏற்கனவே தனது 508 பிரிமியம் காரை பீஜோ முதலில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது 301 செடான் காரை விற்பனைக்கு கொண்டு வருகிறது.
ஹூண்டாய் வெர்னா, ஃபோர்டு குளோபல் ஃபியஸ்ட்டா கார்களும் இது போட்டிபோடும். நாட்டின் பழம் பெரும் கார் நிறுவனமான பிரிமியருடன் இணைந்து ஏற்கனவே பீஜோ கார் விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








