ரத்தன் டாடா தலைமையில் டாடா மோட்டார்சில் நடந்த முக்கிய நிகழ்வுகள்!
நாட்டின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யமாக திகழும் டாடா குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து ரத்தன் டாடா இன்று ஓய்வு பெறுகிறார். இங்கிலாந்திலுள்ள கார்னெல் பல்கலைகழகத்தில் கட்டமைப்பு பொறியியல் பட்டப்படிப்பை முடித்த ரத்தன் டாடா ஹார்வர்டு பல்கலைகழகத்தில் முதுநிலை மேலாண்மை பட்டம் பெற்றவர்.
சால்ட் முதல் சாப்ட்வேர் வரை 100 நிறுவனங்களை உள்ளடக்கிய டாடா குழுமத்தின் பல்வேறு பொறுப்புகளை திறம்பட நிர்வகித்த ரத்தன் டாடா கடந்த 1991ம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். பத்மபூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்றுள்ளார். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு குறிப்பிடத்தக்க திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். அவரது தலைமையின் கீழ் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை காணலாம்.

1991: தலைவர் பொறுப்பு
1938ம் ஆண்டு முதல் டாடா குழுமத்தின் தலைவராக இருந்து வந்த ஜேஆர்டி டாடாவுக்கு பதிலாக 1991ல் ரத்தன் டாடா புதிய தலைவராக பொறுப்பேற்றார்.

1998: டாடாவின் முதல் கார்
ரத்தன் டாடா பதவிக்கு வந்தபின்தான் தனி நபர் கார் மார்க்கெட்டில் டாடா இறங்கியது. ரத்தன் டாடாவின் நேரடி மேற்பார்வை மற்றும் ஆலோசனை அடிப்படையில் டாடா இண்டிகா உருவாக்கப்பட்டது. முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் உருவான முதல் கார் இண்டிகா என்பதும் குறிப்பிடத்தக்கது. பில்லியனராக இருந்தாலும் ரத்தன் டாடா இண்டிகா காரில்தான் வீட்டிலிருந்து அலுவலகம் செல்வதை முன்பு வழக்காக கொண்டிருந்தார்.

2004: தேவூ டிரக் நிறுவனத்தை கையகப்படுத்திய டாடா
கொரியாவை சேர்ந்த தேவூ வர்த்தக வாகனங்கள் தயாரிப்பு நிறுவனத்தை டாடா கையகப்படுத்தியது. தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ளுதல் உள்ளிட்டவற்றில் தற்போது தேவூ நிறுவனமும் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இணைந்து செயல்படுகின்றன.

2004: சர்வதேச அங்கீகாரம்
டாடா மோட்டார்சை சர்வதேச பிராண்டாக மாற்றுவதில் ரத்தன் டாடா பெரும் முயற்சிகளை எடுத்தவர். இதனால், 2004ம் ஆண்டு நியூயார்க் பங்கு சந்தையில் டாடா மோட்டார்ஸ் பட்டியலிடப்பட்டது.

2008: நானோவின் தரிசனம்
இருசக்கர வாகனங்களில் குழந்தைகளுடன் போக்குவரத்து நெரிசலில் தட்டு தடுமாறி செல்லும் நடுத்தர குடும்பத்தினர் பாதுகாப்பாக செல்ல குறைந்த விலை காரை அறிமுகப்படுத்த ரத்தன் டாடா எண்ணினார். அவரது கனவு திட்டத்தில் உருவானதுதான் நானோ. 2008ம் ஆண்டு இந்த காரை உலகின் பார்வைக்கு அறிமுகப்படுத்தினார் ரத்தன் டாடா.

2008: காட்சிகள் மாறிய தருணம்.
உலக பொருளாதார சரிவின் எதிரொலியால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த இங்கிலாந்தை சேர்ந்த பிரபலமான ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனங்களை அமெரிக்காவின் ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து டாடா மோட்டார்ஸ் கையகப்படுத்தியது. இதனால், ஆட்டோமொபைல் உலகில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அந்தஸ்து நினைத்து பார்த்திராத வகையில் உயர்ந்தது.

அடுத்த வாரிசு
நாட்டின் மாபெரும் வர்த்தக சாம்ராஜ்யமான டாடா குழுமத்திற்கு புதிய தலைவரை தேர்வு செய்யும் பணிகள் 2010ம் ஆண்டு முதல் நடந்து வந்தது. இறுதியில் ரத்தன் டாடாவுக்கு அடுத்து சைரஸ் மிஸ்திரி டாடா குழுமத்தின் புதிய தலைவராக தேர்வு செய்து அறிவிக்கப்பட்டார். 144 ஆண்டு கால டாடா குழுமத்தின் பாரம்பரியத்தில் டாடா குடும்பத்தை சாராத ஒருவர் தலைவராவது இதுவே முதல் முறை.

2012: ஓய்வுக்கு ஓய்வு கொடுக்கப் போகும் ரத்தன்..!!
ரத்தன் டாடாவுக்கு நாளை 75வது பிறந்தநாள். தனது பிறந்தநாளிலேயே அவர் ஓய்வு பெற உள்ளார். இந்தியாவின் பொருளாதாரத்தில் மாபெரும் சக்தியாக மாறுவதற்கு முக்கிய காரணகர்த்தாவான ரத்தன் டாடாவின் திட்டங்கள் பெரும்பாலானவை ஜெயமே. ஆனால், நானோ கார் திட்டம் மட்டும் வெற்றி பெறவில்லை. இது ரத்தன் டாடா மனதை உறுத்தி வருகிறது. எனவே, ஓய்வுக்குப் பின் நானோ காரை வெற்றி பெறச் செய்வதற்கான முயற்சிகளில் அவர் முழு மூச்சாக இறங்குகிறார்.


Click it and Unblock the Notifications








