டீசல் நானோ: முதன்முறையாக வாய் திறந்து ஒப்புக் கொண்ட டாடா

டீசல் நானோ காரை டாடா மோட்டார்ஸ் வடிவமைத்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பில் புகழ்பெற்ற பாஷ் நிறுவனம் டீசல் நானோவுக்கான எஞ்சினை வடிவமைத்து வருவதாக ஏற்கனவே நாம் தெரிவித்திருந்தோம்.
டீசல் நானோ லிட்டருக்கு 35 கிமீ வரை மைலேஜ் தரும் வகையில் எஞ்சின் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால், வாடிக்கையாளர் மத்தியிலும் ஆட்டோமொபைல் துறையிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. பெட்ரோல் நானோ விற்பனையில் ஓரளவு சமாளித்து வந்தாலும் எதிர்பார்த்த அளவு இல்லை என டாடா மோட்டார்ஸ் கருதுகிறது.
டீசல் நானோ வந்தால் விற்பனையில் நிச்சயம் முக்கிய இடத்தை பெற முடியும். ஆனால், இதுவரை டாடா மோட்டார்ஸ் டீசல் நானோ வடிவமைப்பு குறித்து எந்த தகவலையும் வெளியிடாமல் மவுனம் சாதித்து வந்தது. இந்த நிலையில், மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய டாடா மோட்டார்ஸின் புதிய நிர்வாக இயக்குனராக சமீபத்தில் பொறுப்பேற்ற கார்ல் ஸ்லிம், டீசல் நானோவை வடிவமைக்கும் முயற்சிகள் நடந்து வருவதை ஒத்துக் கொண்டிருக்கிறார்.
மேலும், அடுத்த ஆண்டு முற்பாதியில் சிஎன்ஜியில் இயங்கும் நானோவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர் டீசல் நானோவை களமிறக்குவதற்கான காலக்கெடு குறித்து எதையும் கூற மறுத்துவிட்டார்.
ஆனால், அடுத்த ஆண்டு பிற்பாதியில் டீசல் நானோ விற்பனைக்கு வந்துவிடும் என்று டாடா மோட்டார்ஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. அதிக மைலேஜ் தரும் டீசல் கார் என்பதால் டீசல் நானோ வந்தால் நிச்சயம் மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிக்கும்.. குறிப்பாக, நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








