டாடா நானோ கடந்து வந்த பாதை: நினைவலைகள்

ரத்தன் டாடாவின் கனவு திட்டத்தில் உருவான நானோ விற்பனைக்கு வந்து மூன்றரை ஆண்டுகளை நெருங்குகிறது. ஆனாலும், இன்று வரை உலகின் குறைந்த விலை கார் என்ற பெருமையை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு ஆட்டோமொபைல் உலகில் நானோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆயிரம் நிபந்தனைகளுடன் முன்பதிவு, நமக்கு கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற ஏக்கத்தில் வாடிக்கையாளர் என ஏக அமர்க்களமாக வந்த நானோ அறிமுகம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளில் ஏகப்பட்ட ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து இன்று மார்க்கெட்டில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முயன்று வருகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் நானோ வாழ்க்கையில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

டாடா நானோ

உலகின் குறைந்த விலை கார்:

ஸ்கூட்டரில் செல்லும் நடுத்தர வர்க்கத்தினர் மழையில், வெயிலில் நனையாமல் பாதுகாப்பாக செல்ல ஓர் குறைந்த விலை காரை உருவாக்கி தருவதாக ரத்தன் டாடா உறுதியளித்து நானோ காரை உருவாக்கினார். சொன்னபடியே உலகின் குறைந்த விலை காராக நானோ வணிக ரீதியில் விற்பனைக்கு வந்தது.

இந்த விலையில் ஓர் காரை உருவாக்கி, தொழில்நுட்பத்தை சாத்தியப்படு்த்தி, அதை வணிக ரீதியில் அறிமுகப்படுத்தியதை கண்டு ஆட்டோமொபைல் துறையே டாடா மோட்டார்சை திரும்பி பார்த்தது. மேலும், நானோ காரின் தொழில்நுட்பத்தை அறிந்துகொள்வதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஆட்டோமொபைல் துறையினர் இந்தியா வந்தனர்.

நானோவால் அச்சத்தில் ஆழ்ந்த டாடா:

அறிமுகம் செய்யப்பட்டு சில மாதங்களிலேயே குஜராத் மாநிலம், அனந்த் பகுதியை சேர்ந்த இன்ஸ்யூரன்ஸ் நிறுவன ஊழியரின் நானோ கார் தீப்பிடித்தது. இதுதவிர, தொடர்ந்து நானோ கார் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் தொடர்ந்ததால் டாடா மோட்டார்ஸ் மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்தது. நானோ விற்பனையும் அதள பாதாளத்திற்கு சென்றது.

பெண்களுக்கு பிடித்த கார் நானோ:

"தூற்றுவார் தூற்றட்டும், போற்றுவார் போற்றட்டும்" என்பது போல ஒருபக்கம் பல நெருக்கடிகளை சந்தித்த வேளையில், நானோ காருக்கு ஒரு நற்செய்தி வந்தது. ஆம், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், பெண்களுக்கு பிடித்த காராக நானோ திகழ்வதாக தெரிவிக்கப்பட்டது. இது நானோ காருக்கு சற்று ஆறுதல் ஏற்படுத்தியது.

சர்வதேச பயணம்:

உள்நாட்டில் விற்பனையில் எதிர்பார்த்த அளவு இல்லாததால் அண்டை நாடுகளுக்கு நானோ காரை ஏற்றுமதி செய்ய துவங்கியது டாடா மோட்டார்ஸ். இலங்கைக்கு முதன்முதலில் தனது சர்வதேச பயணத்தை துவங்கியது. இதைத்தொடர்ந்து, நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளிலும் நானோ காரை ஏற்றுமதி செய்ய துவங்கியது டாடா.

நேபாளில் சூப்பர் டூப்பர் ஹிட்:

நேபாளத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நானோ கார் அங்கு பெரும் வரவேற்பை பெற்றது. அறிமுகம் செய்யப்பட்டு 3 நாட்களில் 200 நானோ கார்கள் புக்கிங் செய்யப்பட்டன.

பரிசு பொருளான நானோ:

பல்வேறு போட்டிகளில் நானோ கார் முக்கிய பரிசு பொருளாக அறிவிக்கும் கலாச்சாரம் துவங்கியது. இதில், ஒரு சுவாரஸ்யமான சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. பெங்களூரில், குடும்ப கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் ஆண்களுக்கு குலுக்கல் மூலம் முதல் பரிசாக நானோ கார் வழங்க எம்எல்ஏ ஒருவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ராஜஸ்தானில் இதேபோன்று குடும்ப கட்டுப்பாடு செய்தவர்களுக்கு குலுக்கல் முறையில் நானோ பரிசாக அறிவிக்கப்பட்டதும் நினைவிருக்கலாம்.

இலங்கையிலும் வேலையை காட்டியது:

இலங்கையில் விற்பனைக்கு சென்ற நானோ கார் அங்கு நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், டாக்சி மார்க்கெட்டில் நானோ காரின் கை ஓங்கியது. இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 4ந் தேதி டாக்சி நிறுவனத்துக்கு சொந்தமான நானோ கார் கொழும்பு நகரில் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவமும் நானோ கார் மீது வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.

காவல் காக்க தயார்:

மும்பையில், ரோந்து பணயில் நானோ கார்களை பயன்படுத்துவது குறித்து அம்மாநகர போலீசார் பரிசீலித்து வருகின்றனர். ஏனெனில், சந்து பொந்துகளிலும் நானோ காரில் எளிதாக சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடலாம் என்பது அவர்களது எண்ணம். கோவா போலீசாரும் சோதனை முறையில் நானோ காரை ரோந்து வாகனமாக பயன்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

கூடுதல் வசதிகளுடன் நானோ 2012:

நானோ காரில் இருந்த தொழில்நுட்ப பிரச்னைகளை சரிசெய்து கூடுதல் வசதிகளுடன் புதிய நானோ காரை கடந்த ஆண்டு நவம்பரில் விற்பனைக்கு கொண்டு வந்தது டாடா. 2012 நானோ என்ற பெயரில் புதிய நானோ கார் வந்த பிறகு விற்பனையும் சூடுபிடித்தது. தீப்பிடிக்கும் சம்பவம் குறித்த செய்தி இதுவரை இல்லை.

சிஎன்ஜி மாடல்:

நானோ விற்பனையை அதிகரிக்க மாற்று எரிபொருளில் இயங்கும் நானோ கார்களை அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. கடந்த ஜனவரியில் நடந்த டெல்லி ஆட்டோ கண்காட்சியில் சிஎன்ஜி நானோ கார் மாடலை டாடா பார்வைக்கு வைத்திருந்தது.

நானோவை புகழ்ந்து தள்ளிய அமெரிக்க அதிகாரி:

அமெரிக்க அரசின் சுற்றுச் சூழல் மற்றும் ஆற்றல் துறை செயலாளர் ராபர்ட் டி ஹார்மட்ஸ் நானோ காரை சமீபத்தில் புகழ்ந்து தள்ளினார். இந்த விலையில் ஒரு காரை உருவாக்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கருத்து தெரிவித்திருந்தார். இவர் தவிர அமெரிக்காவின் பிரபல டாக் ஷோ தொகுப்பாளர் ஜெ லெனோ என்பவரும் நானோ காரை விரும்பி வாங்கி தனது ஷெட்டில் வைத்து அழகு பார்த்து வருகிறார்.

நானோ டீசல்:

நம் நாட்டு ஆட்டோமொபைல் துறை மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் டீசல் நானோ குறித்து இதுவரை டாடா மோட்டார்ஸ் வாய் திறக்கவில்லை. ஆனால், டீசல் நானோவை தற்போது டாடா மோட்டார்ஸ் சோதனைகள் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லிட்டருக்கு 35 கிமீ வரை மைலேஜ் தரும் என தகவல்கள் தெரிவிப்பதால் டீசல் மாடல் வந்தால் நானோ காரின் விற்பனை நிச்சயம் நல்ல முன்னேற்றம் காணும் என்று எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 18, 2012, 12:32 [IST]
English summary
The Tata Nano, the world's cheapest car, Its been three years of celebrations, surprises, controversies, disappointments and achievements for Ratan Tata's dream project. Here are given some highlights of Tata Nano 3 years journey.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+