ரூ.1.5 லட்சத்தில் கிடைக்கும் முத்தான 3 யூஸ்டு செடான் கார்கள்
முதல் கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கும், காரை வாங்கி மாற்றங்கள் செய்ய விரும்புபவர்களுக்கும் மிகக் குறைந்த விலையில் சிறந்த பயன்படுத்தப்பட்ட செடான் கார்கள் யூஸ்டு மார்க்கெட்டில் கிடைக்கின்றன. அதில், மாருதி எஸ்டீம், பலேனோ மற்றும் ஓல்டு ஹோண்டா சிட்டி கார்கள் கைக்கு எட்டும் விலையில் கிடைக்கின்றன.
இந்த கார்களை வாங்கியவுடன் சர்வீஸ் செய்வதற்கு பெரும் தொகையை செலவழிக்க வேண்டியதில்லை. சாதாரண பராமரிப்புகளை செய்தாலே போதும், இந்த கார்கள் சிறப்பாக இயங்கும். ரூ.1.5 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும் மாருதி எஸ்டீம், மாருதி பலேனோ மற்றும் ஹோண்டா சிட்டி கார்களின் விபரங்களை காணலாம்.

மாருதி எஸ்டீம்(1993-2006)
2006ம் ஆண்டு இந்த காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனலாயே இந்த காரின் விலையும் கணிசமாக குறைந்தது. 85 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 2002-2006ம் ஆண்டு வரை விற்பனை செய்யப்பட்ட எஸ்டீம் கார்களில் மல்டி-பாயின்ட் ப்யூல் சிஸ்டம் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட ஆண்டில் தயாரிக்கப்பட்ட எஸ்டீம் மாடலை வாங்குவது உத்தமம். மேலும், இந்த எஞ்சின்கள் 2 லட்சம் கிலோமீட்டர்கள் வரை பெரிய அளவிலான பிரச்னைகளை தராமல் சிறப்பாக இயங்கும்.
இந்த காரில் 4 பேர் தாராளமாக அமர்ந்து செல்லலாம். கிரவுன்ட் கிளியரன்ஸ் குறைவான என்ற பிரச்னை தவிர பெரிய பிரச்னைகள் இல்லாத கார். பராமரிப்பு செலவும் குறைவான கார் என்பதுடன் 2016ம் ஆண்டு வரை இந்த காருக்கான ஸ்பேர் பார்ட்ஸ்களை விற்பனை செய்யப் போவதாக மாருதி உறுதி அளித்துள்ளது. மேலும், டீலர் அல்லாத ஸ்பேர் பார்ட்ஸ் கடைகளிலும் இதற்கான பாகங்கள் எளிதாக கிடைக்கின்றன. ஸ்பேர் பார்ட்ஸ் விலையும் மிகக் குறைவு. எனவே, பயன்படு்ததப்பட்ட கார் வாங்க விரும்புபவர்களுக்கு மாருதி எஸ்டீம் சிறந்த தேர்வாக கூறலாம்.

மாருதி பலேனோ(2000-2006)
சிறந்த ஓட்டுதல் தரம் கொண்ட கார் என்பதால் இன்றுவரை ஆட்டோமொபைல் விரும்பிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. 2006ம் ஆண்டு இந்த காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டாலும் காரை வாங்கி மாற்றங்கள் செய்ய விரும்புபவர்களின் முதல் தேர்வாக இருக்கிறது பலேனோ. சிறந்த ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை கொண்ட செடான். 91 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் எஞ்சின் பலேனோவில் பொருத்தப்பட்டிருக்கிறது. தவிர, இதன் உட்புறம் தாராள இடவசதியை கொண்டிருக்கிறது. எஸ்டீம் போன்றே 2016ம் ஆண்டு வரை இந்த காருக்கும் ஸபேர் பார்ட்ஸ் விற்பனை செய்யப்படும் என்று மாருதி தெரிவித்துள்ளது.
2004-2006க்கும் இடையில் தயாரிக்கப்பட்ட பலேனோ கார்களில் மேம்படுத்தப்பட்ட இன்டிரியர் மற்றும் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி உள்ளிட்ட வசதிகள் கொண்டது. எனவே, மேற்கண்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட மாடல் சிறந்தது. பலேனோவுக்கு மாற்றாகத்தான் எஸ்எக்ஸ்-4 அறிமுகம் செய்யப்பட்டது.

ஹோண்டா சிட்டி(1997-2003)
2004ம் ஆண்டுக்கு முன்பு வரை தயாரிக்கப்பட்ட டைப்-1 மற்றும் டைப்-2 ஹோண்டா சிட்டி கார்கள் இன்றுவரை கார்கள் மீது காதல் வைத்துள்ள அனைவரிடமும் நன்மதிப்பை பெற்றுள்ளது. இந்த மாடல்கள் 90 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 100 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் எஞ்சின் ஆகிய இரண்டு மாடல்களில் விற்பனை செய்யப்பட்டன.
தாராள இடவசதி, சிறந்த ஓட்டுதல் தரம் கொண்ட மாடல் இவை. இந்த காரின் எஞ்சின் 2.50 லட்சம் கிலோமீட்டர்கள் வரை எந்தவொரு பெரிய பிரச்னையும் தராமல் செல்லும் சிறப்பு வாய்ந்தது. மாருதி அளவுக்கு இல்லாவிட்டாலும் ஸ்பேர் பார்ட்ஸ் விலையும் குறைவுதான். ஹோண்டாவின் 10 ஆண்டு ஸ்பேர் பார்ட்ஸ் கொள்கையின்படி, அடுத்த ஆண்டு வரை இந்த காருக்கான ஸ்பேர் பார்ட்ஸ் அனைத்தையும் ஹோண்டா டீலர்களிலிருந்து பெறலாம். அதேவேளை, ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








