புதிய பெட்ரோல் மாடல் ஜெட்டாவை அறிமுகப்படுத்திய வோக்ஸ்வேகன்
ரூ.13.6 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய பெட்ரோல் மாடல் ஜெட்டாவை வோக்ஸ்வேகன் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
புதிய ஜெட்டாவில் 1.4 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 122 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க்கையும் இந்த எஞ்சின் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டுள்ளது.

ட்ரென்ட்லைன் மற்றும் கம்ஃபோர்ட்லைன் ஆகிய இரண்டு வேரியன்ட்களில் புதிய ஜெட்டா விற்பனைக்கு வந்துள்ளது. அலாய் வீல், பின் பக்கம் பனி விளக்குகள், பார்க்கிங் சென்சார், இரட்டை குழல் புகைபோக்கி, ரியர் வியூ மிரரில் இன்டிகேட்டர் விளக்குகள் உள்ளிட்ட பிரிமியம் அம்சங்கள் இருக்கிறது.
ஸ்டீயரிங் வீல், கியர் லிவர், ஹேன்ட் பிரேக் ஹேண்டில் மற்றும் முன்பக்க ஏசி வென்ட்டுகளும் தோல் வேலைப்பாடுகளால் அசத்துகிறது. கம்ஃபோர்ட்லைன் வேரியன்ட்டில் கிளைமேட் கன்ட்ரோல் வசதிகொண்ட ஏசி, முன்பக்க இருக்கைகளை எலக்ட்ரிக்கல் முறையில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதி மற்றும் 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம் ஆகியவை இருக்கிறது.
6 உயிர் காக்கும் காற்றுப் பைகள், இஎஸ்பி தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் அசிஸ்ட், எலக்ட்ரானிக் எஞ்சின் இம்மொபைலைஸர் ஆகிய பாதுகாப்பு வசதிகளும் உள்ளன.
பெட்ரோல் கார் விற்பனை படுத்து விட்ட நிலையில், டி செக்மென்ட்டில் களமிறக்கப்பட்டுள்ள ஜெட்டா விற்பனையில் ஜெட் வேகமெடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஜெட்டா டிஎஸ்ஐ ட்ரென்ட்லைன் ரூ.13.60 லட்சத்திலும், கம்ஃபோர்ட்லைன் ரூ.15.07 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








