இந்த மாதம் மேம்படுத்தப்பட்ட நானோ காரை அறிமுகப்படுத்தும் டாடா?
இந்த மாதம் மேம்படுத்தப்பட்ட புதிய நானோ காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
டாடா மோட்டார்ஸ் விற்பனை தொடர்ந்து அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சரிவை தடுத்தி நிறுத்த புதிய திட்டங்களுடன் டாடா களமிறங்குகிறது. இந்த நிலையில், 3 மேம்படுத்தப்பட்ட கார் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக டாடா மோட்டார்ஸ் தலைவர் கார்ல் ஸ்லிம் கூறியிருக்கிறார்.

அந்த 3 மேம்படுத்தப்பட்ட கார் மாடல்களில் ஒன்று புதிய நானோ என்று தகவல்கள் கூறுகின்றன. வடிவமைப்பில் சில மாறுதல்களுடன் புதிய நானோ காரை இந்த மாதம் விற்பனைக்கு விடுவதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, சிஎன்ஜியில் இயங்கும் நானோவையும், டீசல் நானோவையும் அடுத்தடுத்து களமிறக்கவும் டாடா திட்டம் போட்டு வைத்துள்ளது.
இந்த மாதம் விற்பனைக்கு வருவதாக கூறப்படும் புதுப்பொலிவுடன் கூடிய நானோ காரில், மறுவடிவமைப்பு பெற்ற பின்பக்க பம்பர் மற்றும் குரோம் பூச்சுகள், புதிய வீல் கவர் ஆகியவற்றுடன் புதிய நீல நிறத்திலும் நானோ வருகிறதாம். எஞ்சினில் மாற்றம் இருக்காது.
இதுதவிர, மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட இன்டிகோ இசிஎஸ் செடான் காரையும் விரைவில் டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்த இருப்பதும் தெரியவந்துள்ளது. ஸ்மோக்டு ஹெட்லைட், புதிய அலாய் வீல், மேட்டியர் டயர், புதிய முகப்பு கிரில் ஆகியவற்றுடன் இசிஎஸ் செடான் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய கார்கள் டாடா மோட்டார்ஸ் விற்பனை சரிவுக்கு அணை போடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








