உலகின் சிறந்த கார் விருதை பெற்ற ஃபோக்ஸ்வேகன் கோல்ப்!
இந்த ஆண்டின் உலகின் சிறந்த காருக்கான விருதை ஃபோக்ஸ்வேகன் கோல்ப் ஹேட்ச்பேக் கார் பெற்றுள்ளது. 7ம் தலைமுறையை இந்த கார் இடவசதி, டிசைன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறந்த காராக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் சிறந்த காருக்கான விருதை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஃபோக்ஸ்வேகன் தயாரிப்பு பெறுகிறது. கடந்த ஆண்டு ஃபோக்ஸ்வேகன் அப் கார் உலகின் சிறந்த காராக தேர்வு செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

விருது தேர்வுக் குழு
நியூயார்க் ஆட்டோ அமைப்பாளர்களும், பிரிட்ஜஸ்டோன் நிறுவனமும் இணைந்து வழங்கிய இந்த விருதை 23 நாடுகளை சேர்ந்த 66 ஆட்டொமொபைல் பத்திரிக்கையாளர்கள் நடுவர்களாக இருந்து தேர்வு செய்துள்ளனர்.

கடும் போட்டி
இந்த விருதை பெறுவதற்கு இறுதி பட்டியலில் பென்ஸ் ஏ-கிளாஸ், போர்ஷே பாக்ஸ்டர்/கேமேன், சியோன் எஃப்ஆர்-எஸ்/சுபரு பிஆர்இசட் மற்றும் டொயோட்டா ஜிடி-86 ஆகிய கார்கள் இருந்தன. இதில், அனைத்து விதங்களிலும் நடுவர்களை கவர்ந்து பட்டத்தை சூட்டிக் கொண்டுள்ளது கோல்ப் எம்கே-7.

விருதால் கவுரவம்
இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த காருக்கான விருதை ஃபோக்ஸ்வேகன் டிசைன் பிரிவு தலைவர் வால்ட்டர் டி சில்வா பெற்றுக்கொண்டார்.

ஃபோக்ஸ்வேகனுக்கு மச்சம்
கடந்த 2009ம் ஆண்டு முதல் இதுவரை 4 முறை உலகின் சிறந்த காருக்கான விருதை ஃபோக்ஸ்வேகன் தயாரிப்புகள் பெற்றுள்ளன. 2009ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த காருக்கான விருதை கோல்ப்-VI கார் வென்றது. 2010ம் ஆண்டு போலோவும், 2012ல் அப் காரும், இந்த ஆண்டு கோல்ப் எம்கே-7 காரும் பெற்றுள்ளன.

இந்தியா வர வாய்ப்பு
ஃபோக்ஸ்வேகன் கோல்ப் எம்கே-7 கார் இந்தியாவில் சமீபத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது.

சிறந்த பெர்பார்மென்ஸ் கார்
இந்த ஆண்டின் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் காருக்கான விருதை போர்ஷே பாக்ஸ்டர் வென்றுள்ளது. வட அமெரிக்கப் பிரிவு போர்ஷே சிஇஓ டெட்லெவ் வான் பிரேடென் இந்த விருதை பெற்றுக் கொண்டார்.

2013 போர்ஷே பாக்ஸடர்/ கேமேன்
ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா, டொயோட்டா ஜிடி 86 கார்களை பின்னுக்குத் தள்ளி இந்த விருதை போர்ஷே பாக்ஸ்டர் வென்றுள்ளது.

போர்ஷேவுக்கு முக்கிய இடம்
சிறந்த பெர்ஃபார்மென்ஸ் காருக்கான விருதை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக போர்ஷே பெறுகிறது. கடந்த ஆண்டு போர்ஷே 911 காருக்கு சிறந்த பெர்ஃபார்மென்ஸ் காருக்கான விருது கிடைத்தது.

ஜாகுவார் எஃப் டைப்
ஜாகுவார் எஃப் டைப் ஸ்போர்ட்ஸ் கார் சிறந்த வடிவமைப்புக்கான விருதை பெற்றது. ஜாகுவார் சர்வதேச பிராண்டு இயக்குனர் அட்ரியன் ஹால்மார்க் இந்த விருதை பெற்றுக்கொண்டார்.

போட்டி
சிறந்த வடிவமைப்பு பிரிவில் மஸ்தா-6, அஸ்டன் மார்ட்டின் வாங்குஷ் கார்களை பின்னுக்குத் தள்ளி இந்த விருதை ஜாகுவார் எஃப் டைப் வென்றது.

ஜாகுவார் எஃப் டைப்
கூடுதல் வீல் பேஸ், சிறந்த வடிவமைப்பு மற்றும் இன்டிரியர்களால் நடுவர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது எஃப் டைப்.

சுற்றுச் சூழலுக்கு உகந்த கார்
இந்த ஆண்டின் சுற்றுச்சூழலுக்கு உகந்த கிரீன் கார் விருதை தெஸ்லா மாடல் எஸ் வென்றுள்ளது. தெஸ்லாவின் தொடர்பு துறை அதிகாரி கேத்ரீனா சச்சிரா(இடது) விருதை பெற்றுக்கொள்கிறார்.

இங்கேயும் போட்டிதான்
சுற்றுச்சூழலுக்கான கார் பிரிவில் ரினால்ட் ஸோ, வால்வோ வி60 பிளக் இன் ஹைபிரிட் உள்ளிட்ட கார்களை பின்னுக்குத் தள்ளி தெஸ்லா மாடல் எஸ் விருதை வென்றது.

தெஸ்லா மாடல் எஸ்
ஸ்டைல், அதிக பயண தூரம் வழங்கும் பேட்டரி (289கி.மீ.,), வசதிகள் என அனைத்து விதத்திலும் தெஸ்லா மாடல் எஸ் முன்னிலை பெற்றதாக நடுவர்கள் கருத்து தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications








