100 பிஎஸ் பவர், லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ் தருமாம் புதிய ஜாஸ்!
அமேஸ் காரைத் தொடர்ந்து ஹோண்டாவிடமிருந்து மிகவும் எதிர்பார்ப்பை கிளறியிருக்கும் மாடல் புதிய ஜாஸ். டிசைன், டீசல் மாடல் என ஏகப்பட்ட மாற்றங்களுடன் வர இருக்கும் புதிய ஜாஸ் வரும் செப்டம்பர் முதல் ஹோண்டாவின் தாயகமான ஜப்பானில் விற்பனைக்கு வருகிறது.
மேலும், இந்த காரில்1.3 லி பெட்ரோல் எஞ்சின் மற்றும் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரின் அதிக சக்திகொண்ட மாடலையும் விற்பனைக்கு விட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல் எஞ்சின்
புதிய ஜாஸ் காரில் 100 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

மைலேஜ்
புதிய ஜாஸ் காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ் தரும் என தகவல்கள் கூறுகின்றன. இது ஹோண்டா பிரியோ மற்றும் தற்போதைய ஜாஸ் காரில் பயன்படுத்தப்பட்டு வரும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை விட அதிக மைலேஜ் தரும் எஞ்சினாக இருக்கும்.

ஜாஸ் ஆர்எஸ்
புதிய ஜாஸ் காரின் ஆர்எஸ் என்ற ஸ்போர்ட்ஸ் ரக காரையும் ஹோண்டா விற்பனைக்கு விட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாடலில் 130 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்குமாம். ஹோண்டா சிட்டியைவிட இந்த கார் கூடுதல் பவர் கொண்டதாக இருக்கும் என தெரிகிறது.

டீசல் எஞ்சின்
அமேஸ் காரில் பொருத்தப்பட்டு இருக்கும் அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

ஹைபிரிட் மாடல்
புதிய ஜாஸ் கார் ஹைபிரிட் மாடலிலும் வருகிறது. ஹைபிரிட், ஹைபிரிட் எஸ் மற்றும் ஹைபிரிட் எஸ் ஆகிய மூன்று வேரியண்ட்களில் புதிய ஜாஸ் விற்பனைக்கு வருகிறது. அனைத்து மாடல்களிலும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால், எலக்ட்ரிக் மோட்டாரின் திறன் வேறுபடலாம். இந்தியாவில் இந்த கார் விற்பனைக்கு வருவது குறித்து தகவல் இல்லை.

வரவேற்பு
புதிய டிசைன் கொண்ட இன்டிரியர், சிறப்பான இடவசதி மற்றும் 10 விதமான வண்ணங்களில் புதிய ஜாஸ் விற்பனைக்கு வர இருக்கிறது. மேலும், நவீன பாதுகாப்பு தொழில்நுட்ப அம்சங்களையும் கொண்டிருக்கும் என்பதால் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு கிடைக்கும் என ஹோண்டா நம்புகிறது.

புதிய சிட்டி கார்
புதிய ஜாஸ் டிசைன் தாத்பரியங்களின் அடிப்படையில் புதிய ஹோண்டா சிட்டி வடிவமைக்கப்படுகிறது. எனவே, புதிய ஹோண்டா சிட்டியிலும் ஜாஸ் காரில் பொருத்தப்பட இருக்கும் 130 பிஎஸ் பவர் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்படலாம்.


Click it and Unblock the Notifications








