ஸ்டைலுக்கு நல்ல வரவேற்பு... புதிய ஆலை கனவில் அசோக் லேலண்ட்!
சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட அசோக் லேலண்ட் ஸ்டைல் எம்பிவி காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நிசான் எவாலியாவின் ரீபேட்ஜ் மாடலாக ஸ்டைல் எம்பிவி வர்த்தக மார்க்கெட்டை குறிவைத்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. எவாலியா படுத்துக் கொண்ட நிலையில், ஸ்டைலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.

விற்பனை இலக்கு
மாதத்திற்கு 500 முதல் 1000 கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் அசோக் லேலண்ட் முதல் கட்டமாக நடப்பு நிதி ஆண்டு முடிவிற்குள் 1,000 ஸ்டைல் எம்பிவி கார்களை விற்பனை செய்வதற்கு இலக்கு வைத்துள்ளது.

அதிக மைலேஜ்
ஸ்டைலுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளதற்கு மைலேஜ் மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட ஸ்லைடல் எம்பிவி லிட்டருக்கு 19.5 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவேற்பு
வர்த்தக மார்க்கெட்டில் அதிக மைலேஜ் தரும் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பது வழக்கமானதுதான். அந்த வகையில், அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட எம்பிவி காரான ஸ்டைலுக்கு முன்பதிவும், விசாரணைகளும் மெச்சத்தக்க வகையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய ஆலை கனவு
சென்னை, ஒரகடத்திலுள்ள நிசான் - ரெனோ ஆலையில்தான் ஸ்டைல் எம்பிவி உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு 20,000 முதல் 30,000 எம்பிவி கார்களை உற்பத்தி செய்ய முடியும். ஆனால், மார்க்கெட்டில் தேவை அதிகரித்து உற்பத்தி நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் புதிய ஆலை குறித்து பரிசீலிக்கப்படும் என்று அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








