ஆர்இ60 மலிவு விலை கார் இல்லை: பஜாஜ் பதிலடி
ஆர்இ60 குறைந்த விலை கொண்ட கார் இல்லை என்று பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது. குவாட்ரிசைக்கிள் என்ற புதிய ரகத்தில் கார் போன்ற சிறிய ரக நான்கு சக்கர வாகனத்தை பஜாஜ் ஆட்டோ தயாரித்துள்ளது. குவாட்ரிசைக்கிள் ரகத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் இந்த புதிய வாகனம் விற்பனைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில், குவாட்ரிசைக்கிள் ரக வாகனங்களை அனுமதிப்பது ஒரு அடி பின்னோக்கி செல்வதற்கு சமம் என டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கார்ல் ஸ்லிம் தெரிவித்துள்ளார். குவாட்ரிசைக்கிள் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

நானோவுக்கு போட்டியாக ஆர்இ60 இருக்கும் என்று கருதி கார்ல் ஸ்லிம் இந்த கருத்தை தெரிவித்ததாக தெரிகிறது. இந்த நிலையில், கார்ல் ஸ்லிம் கூற்றுக்கு பதிலளித்துள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியிருப்பதாவது," ஆர்இ60 வாகனத்தை காராக விற்பனை செய்யப்போவதில்லை. அதனை மேம்படுத்தப்பட்ட ஆட்டோரிக்ஷாவாகவே விற்பனைக்கு கொண்டு வர உள்ளோம்.
ஐரோப்பிய கிராஷ் டெஸ்ட் விதிகளுக்கு ஒத்துப் போகும் வகையில் இந்த வாகனத்தை வடிவமைத்துள்ளோம். நானோவுக்கு டாடா கடைபிடித்த விற்பனைக் கொள்கைகள் எடுபடவில்லை என்பதை அதன் விற்பனையை வைத்தே தெரிந்து கொள்ளலாம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் குவாட்ரிசைக்கிள் திட்டத்தை முன்வைத்தது. அந்த நோக்கம் முற்றிலும் வேறுபட்டது.
குவாட்ரிசைக்கிளை குறைந்த விலை காராக கருதி டிவிஎஸ் திட்டத்தை அரசுக்கு தெரிவித்தது. ஆனால், ஆர்இ60 வாகனத்தை ஒரு சிறந்த, பாதுகாப்பான நான்கு சக்கர ஆட்டோரிக்ஷாவாகவே விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். எனவே, குறைந்த விலை காராக கருதி பேசுவது சரியாக இருக்காது," என்று கூறினார்.
குவாட்ரிசைக்கிள் ரக வாகனங்களை அனுமதிப்பதற்கான சாத்தியக்கூறுகளை மத்திய அரசு அமைத்த குழு தற்போது ஆராய்ந்து வருகிறது. மேலும், குவாட்ரிசைக்கிள் பிரிவுக்கான விதிமுறைகள், பாதுகாப்பு அம்சங்களும் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட உள்ளன. குவாட்ரிசைக்கிள் வாகனங்களை அறிமுகப்படுத்துவதற்கு பியாஜியோ, மஹிந்திரா மற்றும் ஐஷர் ஆகிய நிறுவனங்களும் விருப்பம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








