புதிய பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் காரை அறிமுகப்படுத்திய சச்சின்
சமூக வலைதளங்கள் மூலம் பிரபலப்படுத்தப்பட்ட பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் 20.9 லட்சம் என்ற மிக சவாலான ஆரம்ப விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மும்பையில் நடந்த விழாவில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்த காரை அறிமுகம் செய்தார்.
பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் வந்திருக்கும் புதிய பிஎம்டபிள்யூ 1 சீரீஸ் பென்ஸ் ஏ கிளாஸ் மற்றும் பி கிளாஸ் கார்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஏ கிளாஸ் டீசல் மாடலின் பேஸ் வேரியண்ட் விலையிலேயே இந்த காரின் டீசல் பேஸ் வேரியண்ட்டும் விற்பனைக்கு வந்திருக்கிறது.

எஞ்சின்
136 எச்பி ஆற்றலையும், 220 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 143 எச்பி ஆற்றலையும் 320 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வந்திருக்கிறது. இரண்டிலும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டு இருக்கிறது.

மைலேஜ்
பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 16.28 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 20.58 கிமீ மைலேஜையும் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேரியண்ட்டுகள்
பெட்ரோல் மாடல் 116ஐ என்ற ஒரு வேரியண்ட்டிலும், டீசல் மாடல் 118டி, 118டி ஸ்போர்ட்லைன் மற்றும் 118டி ஸ்போர்ட் பிளஸ் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும். அடுத்தடுத்த ஸ்லைடரில் வேரியண்ட் வாரியான அம்சங்களை காணலாம்.

116ஐ பெட்ரோல்
பனி விளக்குகள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ரியர் பார்க்கிங் சென்சார், 16 இஞ்ச் அலாய் வீல்கள், ஏபிஎஸ், 6 காற்றுப் பைகள், ஸ்டார்ட் ஸ்டாப், ரீஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம், ரன் பிளாட் டயர்கள் ஆகியவை நிரந்தரமாக இடம்பெற்றிருக்கும்.

118டி- டீசல்
டீசல் மாடலின் பேஸ் வேரியண்ட்டாக விற்பனை செய்யப்படும். முந்தைய ஸ்லைடில் கொடுக்கப்பட்ட அனைத்து அம்சங்களும் இதிலும் ஒரே மாதிரியாக இடம்பெற்றிருக்கும்.

118டி ஸ்போர்ட்லைன்
டியூவல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, மெமர ஃபங்ஷனுடன் கூடிய எலக்ட்ரிக் சீட் அட்ஜெஸ்ட், பிஎம்டபிள்யூ ஐடிரைவ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹேண்ட்ஸ் ஃப்ரீ கன்ட்ரோல் வசதி, ஸ்லைடிங் வசதியுடன் முன்பக்க ஆர்ம் ரெஸ்ட் ஆகியவை கூடுதலாக இடம் பெற்றிருக்கும். மேலும், பெர்ஃபார்மென்ஸ் வேரியண்ட்டாக இருக்கும்.

118டி ஸ்போர்ட் ப்ளஸ்
இது டாப் வேரியண்ட்டாக இருக்கும். கீ லெஸ் இக்னிஷன், ரியர் ஏசி வென்ட், 17 இஞ்ச் அலாய் வீல்கள், சன்ரூஃப் ஆகியவை கூடுதலாக இடம் பெற்றிருக்கும்.

டிரைவிங் மோடுகள்
கம்ஃபர்ட் மோடில் தினசரி டிரைவிங் நிலைகளுக்கு ஏற்றதாகவும், ஈக்கோ புரோ மோடில் வைத்து ஓட்டினால் அதிக எரிபொருள் சிக்கனம் தரும் வகையிலும், ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் ப்ளஸ் மோடுகளில் அதிக பெர்ஃபார்மென்ஸ், சஸ்பென்ஷன் அமைப்பில் மாற்றங்களை செய்து கொள்ளும் வகையிலும் இருக்கும்.

வண்ணங்கள்
அனைத்து வேரியண்ட்டுகளும் வெள்ளை, கருப்பு, சிவப்பு உள்ளிட்ட 8 விதமான வண்ணங்களில் கிடைக்கும்.

விலை விபரம்
116ஐ பெட்ரோல்: ரூ. 20.9 லட்சம்
118டி டீசல்: ரூ. 22.9 லட்சம்
118டி ஸ்போர்ட்லைன் டீசல் : ரூ. 25.9 லட்சம்
118டி ஸ்போர்ட் ப்ளஸ்: ரூ.29.9 லட்சம் ஆகிய எக்ஸ்ஷோரூம் விலைகளில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








