பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கார் படங்கள், தகவல்கள் வெளியீடு!
பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் காரின் படங்கள் மற்றும் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் காரின் மாற்று மாடலாக இந்த புதிய 2 சீரிஸ் கூபே கார் வந்துள்ளது.
வரும் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் முறைப்படி அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய கார் உடனடியாக அங்கு விற்பனைக்கும் செல்ல இருக்கிறது. அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த புத்தம் புதிய கார் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ரியர் வீல் டிரைவ்
இந்த புதிய கார் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதால், சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் கொண்டதாக இருக்கும் என பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.

டிசைன்
பிஎம்டபிள்யூவின் டிசைன் பிரிவின் தலைவர் கரீம் ஹபீப் தலைமையிலான பொறியாளர்கள் இந்த புதிய காரை வடிவமைத்துள்ளனர். 1 சீரிஸ் காரைவிட டிசைனில் பல மாற்றங்களுடன் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹெட்லைட்
குறிப்பாக, ஹெட்லைட் டிசைன் முற்றிலும் புதிய அமைப்பை பெற்றுல்ளது. கிரில், பம்பர், பனி விளக்கு அறை ஆகிய அனைத்தின் டிசைன்களிலும் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், முன்புறத்தில் தெரியும் மாற்றங்கள் பின்புறத்தில் தெரியவில்லை.

இன்டிரியர்
இன்டிரியரை பார்க்கும்போது 1 சீரிஸ் காரை போலவே தோற்றமளிக்கிறது. ஆனால், சமீபத்திய சாதனங்கள் மற்றும் வசதிகளுடன் வருகிறது. புதிய 2 சீரிஸ் கூபே கார்.

பரிமானம்
புதிய 2 சீரிஸ் கூபே கார் 4432 மிமீ நீளமும், 1774 மிமீ அகலமும், 1418 மிமீ உயரமும், 2690 மிமீ வீல் பேஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 1 சீரிஸ் கூபே காரை விட நீளத்தில் 72 மிமீ, அகலத்தில் 24 மிமீ கூடியிருக்கிறது. ஆனால், உயரத்தில் 7 மிமீ குறைந்துள்ளது. வீல் பேஸ் 30 மிமீ கூடியிருப்பதால் இடவசதி மேம்பட்டுள்ளது.

இடவசதி
1 சீரிஸ் காரைவிட 20 லிட்டர் கூடுதலாக 390 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம் கொண்டதாக 2 சீரிஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், முன் இருக்கையின் ஹெட்ரூம் 19 மிமீ, பின் இருக்கை லெக்ரூம் 21 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது.

வேரியண்ட்டுகள்
பிற புதிய மாடல்கள் போன்றே இந்த காரும் எஸ்இ, ஸ்போர்ட், மாடர்ன் மற்றும் எம் ஸ்போர்ட் ஆகிய வேரியண்ட்டுகளில் வருகிறது. இதுதவிர, மூன்று எஞ்சின் மாடல்களிலும், இரு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களிலும் விற்பனைக்கு வர உள்ளது.

பிஎம்டபிள்யூ 220ஐ
இந்த மாடலில் 181 எச்பி ஆற்றலையும், 270 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த மாடல் 0-100 கிமீ வேகத்தை 7.0 வினாடிகளில் எட்டிவிடும்.

பிஎம்டபிள்யூ 220டி
இந்த டீசல் மாடலில் 181எச்பி ஆற்றலையும், 380 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 0-100 கிமீ வேகத்தை 7.2 வினாடிகளில் எட்டிவிடும்.

எம்235ஐ
இந்த மாடலில் 322 எச்பி ஆற்றலையும், 450 என்எம் டார்க்கையும் அளிக்கும் 6 சிலிண்டர் கொண்ட 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 0- 100 கிமீ வேகத்தை 5 வினாடிகளில் எட்டிவிடும்.

டிரான்ஸ்மிஷன்
இந்த மூன்று எஞ்சின் மாடல்களும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.

கன்வெர்ட்டிபிள்
அடுத்த ஆண்டு இறுதியில் இந்த காரின் கன்வெர்ட்டிபிள் மாடலையும் பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட எம்235ஐ மாடலையும் அந்த நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








