9 மாதங்களுக்கு பின்னர் கார் விற்பனையில் வளர்ச்சி
கடந்த 9 மாதங்களுக்கு பின்னர் கடந்த மாதம் கார் விற்பனையில் 15.37 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கார் கடன் வட்டி உயர்வு, பொருளாதார சுணக்க நிலை உள்ளிட்ட காரணங்களால் கார் விற்பனையில் தொடர் சரிவு காணப்பட்டு வந்தது.

கார் விற்பனையை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன கார் நிறுவனங்கள். இருப்பினும், கார் விற்பனையில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. இந்த நிலையில், ஆகஸ்ட்டில் கார் விற்பனையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் 1,33,486 கார்கள் விற்பனையாகி 15.37 சதவீத வளர்ச்சியை பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1,15,705 கார்கள் விற்பனையாகியிருந்தது.
கார் விற்பனை உயர்வு கண்டிருப்பதற்கு மாருதி நிறுவனத்தின் பங்கு மிக முக்கியமானதாகியுள்ளது. கடந்த ஆண்டு மானேசர் ஆலை தொழிலாளர் பிரச்னை காரணமாக உற்பத்தி முடங்கி பெரும் பாதிப்பை சந்தித்தது மாருதி.
இதன் காரணமாக கடந்த மாதம் மாருதியின் விற்பனை 52 சதவீத வளர்ச்சி கண்டிருக்கிறது. இருப்பினும், ஒட்டுமொத்த மார்க்கெட்டின் வளர்ச்சியை பிரதிலிப்பதாக இல்லை என சியாம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








