கொட்டிக் கொடுத்தும் புண்ணியமில்லை... மார்ச்சில் கார், பைக் விற்பனை கடும் சரிவு!

பொருளாதாரத்தில் நிலையற்றத்தன்மை, கார் கடன் வட்டி உயர்வு, அடிக்கடி உயர்த்தப்படும் எரிபொருள் விலை என பல்வேறு விஷயங்களால் கார் விற்பனையில் பலத்த சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவு ஏற்பட்டுள்ளதால், கார் விற்பனையை அதிகரிக்க இதுவரை இல்லாத அளவு 10 முதல் 15 சதவீதம் வரை சலுகைகளை அறிவித்தன கார் நிறுவனங்கள்.
ஆனால், இதற்கும் பிரயோஜனமில்லாத நிலை உருவாகியுள்ளது. மாருதி சுஸுகி, ஹூண்டாய் மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் கார் விற்பனையும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த மாதம் மொத்த கார் விற்பனை 20 சதவீதம் சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2,33,151 கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு 1,80,675 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.
இதேபோன்று, கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவு இருசக்கர வாகன விற்பனையும் 6.96 சதவீதம் குறைந்துள்ளது. ஹீரோ மோட்டோ கார்ப், டிவிஎஸ் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் விற்பனை கடும் சரிவை சந்திதுள்ளது. கடந்த ஆண்டு மார்ச்சில் 11,83,483 இருசக்கர வாகனங்கள் விற்பனையானது. ஆனால், கடந்த மாதம் 11,01,058 இருசக்கர வாகனங்கள் மட்டும் விற்பனையானதாக சியாம் தெரிவித்துள்ளது.
இதேநிலை நீடித்தால் ஆட்டோமொபைல் துறையின் எதிர்பார்க்கும் விற்பனை வளர்ச்சியை எட்ட இயலாது என்றும், முதலீடுகளையும், வேலைவாய்ப்புகளையும் அது பாதிக்கும் என்று ஆட்டோமொபைல் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications








