செவர்லே செயில் செடான் VS மாருதி ஸ்விப்ட் டிசையர்: ஒப்பீடு
செவர்லேயின் கார் பட்டியலில் சமீபத்தில் இணைந்திருக்கும் செவர்லே செயில் செடான் நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலான ஸ்விப்ட் டிசையரின் மார்க்கெட்டை குறிவைத்து போட்டியை கொடுக்கும் அம்சங்கள் மற்றும் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், டிசையரை ஒப்பிடும்போது செயில் செடான் சற்று பெரிய காராக இருக்கிறது. இருப்பினும், இரண்டிலும் எந்த கார் கொடுக்கும் மதிப்புக்கு மிகச்சிறந்ததாக இருக்கும் என்பதில் குழப்பம் ஏற்படுவது இயல்பு.
மேலும், செயில் செடான் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால் வாடிக்கையாளர்களின் கவனம் கொஞ்சம் இந்த காரின் பக்கமும் திரும்பியிருக்கிறது. எனவே, செடான் காரை தேர்வு செய்யும்போது இரண்டிலும் இருக்கும் சாதக, பாதக அம்சங்களை தெரிந்து கொண்டால் கொஞ்சம் உதவிகரமாக இருக்கும் என்ற நோக்கில் இரண்டு கார்களையும் இங்கே ஒப்பிட்டு சாதக, பாதக அம்சங்களை வழங்குகிறோம்.

பாதுகாப்பு அம்சங்கள் - செயில் செடான்
டிசையரை விட கூடுதல் பாதுகாப்பு வசதிகளை செயில் செடான் கொண்டிருக்கிறது. செயில் செடானின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களின் 4 வேரியண்ட்களில் டாப்-3 வேரியண்ட்களில் டிரைவர் பக்கத்தில் காற்றுப் பை ஸ்டான்டர்டு ஆக்சஸெரீயாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று, டாப் 2 வேரியண்ட்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஸ்டான்டர்டு அம்சம். மேலும், டாப் எல்டி வேரியண்ட்டில் பயணிகள் பக்கத்திற்கும் காற்றுப் பை கொடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள் - ஸ்விப்ட் டிசையர்
டிசையரின் இசட்எக்ஸ்ஐ மற்றும் இசட்டிஐ ஆகிய இரண்டு டாப் வேரியண்ட்களில் மட்டுமே காற்றுப் பைகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஸ்டான்டர்டு அம்சங்களாக இருக்கிறது.

மியூசிக் சிஸ்டம் வசதிகள்
செயில் செடானில் புளூடூத் இணைப்பு வசதி கொண்ட இன்டக்ரேட்டட் மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால், டிசையரில் இந்த வசதி இல்லை.

டிசையரின் வசதிகள்
டிசையரின் டாப் வேரியண்ட்டில் ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், ஆட்டோகிளைமேட் கன்ட்ரோல் வசதிகள் இருக்கின்றன. ஆனால், செயில் செடானில் மேனுவல் கன்ட்ரோல் ஏசிதான் அனைத்து வேரியண்ட்களிலும் பொதுவாக இருக்கிறது.

பவர் விண்டோஸ்
செயில் செடானின் அனைத்து வேரியண்ட்களிலும் பவர் அட்ஜெஸ்ட்டபிள் மிரர்கள் மற்றும் விண்டோஸ் பொதுவானதாக கொடுக்கப்பட்டுள்ளது. டிசையரின் டாப் 2 வேரியண்ட்களில் மட்டுமே இந்த வசதிகள் இருக்கின்றன.

இடவசதி
இடவசதியில் டிசையரை எளிதில் வீழ்த்தி சபாஷ் சொல்ல வைக்கிறது செயில் செடான். 4 பேர் தாராளமாக அமர்ந்து செல்வதற்கு சிறந்ததாக இருக்கும். 5வது நபர் அமர்ந்தால் சிறிது அசகவுரியமாக இருக்கும் என்பதை சுட்டிக் காட்ட வேண்டும். அதேவேளை, பின் இருக்கை பயணிகளுக்கு சிறந்த லெக்ரூம் கொண்டதாக இருக்கிறது செயில் செடான்.

பூட் ரூம்
பொருட்கள் வைப்பதற்கு கூடுதல் பூட் ரூம் செயில் செடானில் உண்டு. டிசையரில் 316 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூமும், செயில் செடானில் 370 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூமும் இருக்கின்றன.

ஓட்டுதல் தரம்
செயில் செடானை விட ஓட்டுதல் தரத்தில் டிசையர் டிரைவருக்கு சுகத்தை தருகிறது. அடுத்து, சஸ்பென்ஷனில் செயில் செடான் நெடுஞ்சாலையில் சிறந்த சுகத்தை தரும் என கூற இயலாது. அதேவேளை, மேடு பள்ளங்கள் நிறைந்த சாலைகளில் செயில் செடான் சஸ்பென்ஷன் சிறப்பாக இருக்கிறது.

வாரண்டி மற்றும் பராமரிப்பு
கார் விற்பனையின் முக்கிய விஷயமாக வாரண்டி மற்றும் பராமரிப்பு சேவை பார்க்கப்படுகிறது. செயில் செடான் 5 ஆண்டுகள் அல்லது 1.5 லட்சம் கிலோமீட்டருக்கான வாரண்டியை எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷனுக்கு செவர்லே வழங்குகிறது. தவிர, மூன்று ஆண்டுகளுக்கு பம்பர் டூ பம்பர் வாரண்டியை வழங்குகிறது. ரூ.19,000 கூடுதல் தொகை செலுத்தினால் மூன்று ஆண்டுகளுக்கான பராமரிப்பு திட்டத்தையும் பெறலாம்.

செவர்லே பிராமிஸ்
ஆயில் மற்றும் ஃபில்டர் மாற்றுவது உள்ளிட்ட இதர வழக்கமான பராமரிப்புகள் முன் குறிப்பிட்ட திட்டத்தில் அடங்கும். மேற்குறிப்பிட்ட வாரண்டி காலத்தில் வழக்கமான பராமரிப்புகள் ரூ.24,000க்கும் மேல் சென்றால் செவர்லே பிராமிஸ் திட்டத்தின்படி அந்த தொகையை வாடிக்கையாளர்கள் திரும்ப பெற முடியும்.

டிரைவிங் மற்றும் கையாளுமை
டிரைவிங்கில் சிறந்த அனுபவம் வேண்டுமென்பவர்களுக்கு டிசையர்தான் பெஸ்ட். ஆர்பிஎம் மீட்டர் 2,000 தொட்டுவிட்டால் டிசையர் டீசல் மாடல் நல்ல பிக்கப்பை வழங்குகிறது. செயில் செடானில் ஸ்டீயரிங் நன்றாக இருந்தாலும், டிசையரை ஒப்பிடும்போது மனநிறைவு தரவில்லை. கையாளுமையிலும் டிசையர்தான் சிறந்ததாக இருக்கிறது. மேலும், செயில் செடானிலும், மாருதி டிசையரிலும் சிறிது மாறுதல்கள் செய்யப்பட்ட ஒரே டீசல் எஞ்சின்தான் பொருத்தப்பட்டிருக்கின்றன.

சர்வீஸ் நெட்வோர்க்
டிசையருக்கு 80,000 கிலோ மீட்டர் அல்லது 4 ஆண்டுகள் வாரண்டியை மாருதி வழங்குகிறது. செயில் செடானுக்கு செவர்லே சிறந்த வாரண்டி திட்டங்களை வழங்கியபோதிலும், சர்வீஸ் நெட்வொர்க்கை வைத்து பார்க்கும் போது மாருதியின் பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க் மற்றும் எளிதாகவும், குறைந்த விலையிலும் உதிரிபாகங்கள் கிடைப்பது டிசையருக்கு மிக பக்கபலமாக இருக்கிறது.

விலை விபரம் - செவர்லே செயில் செடான்
பெட்ரோல்
பிஎஸ்- ரூ.5,91,116
எல்எஸ்- ரூ.6,49,424
எல்எஸ் (ஓ)- ரூ.6,73,769
எல்டி - ரூ.7,56,008
டீசல்
பிஎஸ்) -ரூ.7,41,814
எல்எஸ்-ரூ.7,76,938
எல்எஸ்(ஓ) - ரூ.8,01,282
எல்டி ரூ.8,83,461

விலை விபரம் - மாருதி ஸ்விஃப்ட் டிசையர்
பெட்ரோல்
எல்எக்ஸ்ஐ- ரூ.5,81,590
விஎக்ஸ்ஐ- ரூ.6,46,758
இசட்எக்ஸ்ஐ- ரூ.7,51,207
டீசல்
எல்டிஐ -ரூ.7,15,052
விடிஐ- ரூ.7,80,418
இசட்டிஐ- ரூ.8,76,319

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு
அதிக இடவசதி மற்றும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை விரும்புபவர்கள் செயில் செடான் சிறந்த காராக இருக்கும். மேலும், செவர்லேயின் நீண்ட கால வாரண்டியும் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பை தரும். சிறந்த எஞ்சின், அதிக மைலேஜ், சிறப்பான விற்பனைக்கு பிந்தைய சேவை, ரீசேல் மதிப்பை விரும்புபவர்கள் கண்ணை மூடிக் கொண்டு மாருதி டிசையரை தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications








