இந்தோனேஷியாவில் டட்சன் கோ ப்ளஸ் எம்பிவி கார் அறிமுகம்
கோ ஹேட்ச்பேக் காரை தொடர்ந்து டட்சன் பிராண்டில் இரண்டாவதாக புதிய எம்பிவி கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் நடந்த நிகழ்ச்சியில் இந்த புத்தம் புதிய எம்பிவி நேற்று முதன்முறையாக தரிசனம் தந்தது.
கோ ப்ளஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த எம்பிவி கார் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக டிசைன் செய்யப்பட்டிருப்பது முக்கிய அம்சம். அதாவது, கோ ஹேட்ச்பேக் காரின் வீல் பேஸ் அளவிலேயே இந்த எம்பிவியையும் வடிவமைத்து அசத்தியிருக்கிறது டட்சன்.

வடிவம்
4 மீட்டருக்குள் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த எம்பிவி கார் 3,995 மிமீ நீளம், 1,635 மிமீ அகலம், 1,485 மிமீ உயரம் கொண்டது. இந்தியாவில் அறிமுகமாகும் போதும் வரிச்சலுகை கிடைக்கும் என்பதால் மிக சவாலான விலையில் வரலாம்.

எஞ்சின்
மைக்ராவிற்கு உயிர் கொடுத்து வரும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட உள்ளது. ஆனால், டீசல் எஞ்சின் பற்றி அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்தியாவில் அறிமுகமாகும்போது 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சினுடன் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டிருக்கும்.

இன்டிரியர்
கோ ஹேட்ச்பேக் காரின் அதே இன்டிரியர்தான் இந்த காரிலும் இருக்கிறது. மாற்றங்கள் எதுவும் இல்லை. மேலும், இந்த காரிலும் டேஷ்போர்டில் மொபைல்போன் டாக்கிங் ஸ்டேஷனை கொண்டிருக்கும்.

இருக்கை வசதி
7 பேர் பயணம் செய்யும் வசதி கொண்டதாக இருக்கும். இரண்டாவது வரிசை இருக்கை போதுமான லெக்ரூம் கொண்டதாக தெரிகிறது. ஆனால், மூன்றாவது வரிசை இருக்கை மிக நெருக்கடியாக இருப்பதால் குழந்தைகள், சிறியவர்கள் அமர்வதற்கு வசதியாக இருக்கும். மேலும், மடக்கும் வசதி கொண்டதாக இருக்கும் என்பதால் பொருட்களை வைக்க கூடுதல் இடவசதியை பெற முடியும்.

பின்புற தோற்றம்
பின்புற கதவும் கோ ஹேட்ச்பேக்கை அப்படியே ஒத்திருக்கிறது. வடிவமைப்பு மற்றும் உற்பத்தி செலவீனத்தை மிச்சப்படுத்தும் வகையில் பல பாகங்கள் அப்படியே கோ ஹேட்ச்பேக்கிலிருந்து எடுக்கப்பட்டு இந்த காரிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்திய பிரவேசம்
அடுத்த ஆண்டு இந்த புதிய எம்பிவி கார் இந்தோனேஷியாவில் விற்பனைக்கு செல்கிறது. அதைத்தொடர்ந்து, இந்தியாவிலும் இந்த புதிய எம்பிவி விற்பனைக்கு வர இருக்கிறது.

போட்டியாளர்கள்
மாருதி எர்டிகா, செவர்லே என்ஜாய் ஆகிய கார்களுக்கு இந்த டட்சன் எம்பிவி கார் நேரடி போட்டியை தரும்.

விலை
இந்தோனேஷியாவில் 100 மில்லியன் ருபியா (இந்திய மதிப்பில் ரூ.5.5 லட்சம்) விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 மீட்டருக்கும் குறைவான எம்பிவி கார் என்பதால் இந்தியாவிலும் போட்டியாளர்களுக்கு கடும் சவாலான விலையில் வரும் என தெரிகிறது.
வீடியோ
டட்சன் எம்பிவி காரை காணொளியில் காணலாம்.


Click it and Unblock the Notifications








