794 கிலோ அதிசயம்... டட்சன் கோ ப்ளஸ் எம்பிவி காரின் விபரங்கள் வெளியானது
இந்தோனேஷிய மார்க்கெட்டில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் டட்சன் கோ ப்ளஸ் எம்பிவி காரின் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அடுத்த சில மாதங்களில் இந்தியாவிலும் விற்பனைக்கு வர இருக்கும் இந்த கார் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்த தகவல்களை வாசகர்களுக்கு வழங்குகிறோம்.

எஞ்சின்
மைக்ராவில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் டட்சன் கோ ப்ளஸ் எம்பிவி காரில் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 68 பிஎஸ் பவரையும், 104 என்எம் டார்க்கையும் தரும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மூலம் எஞ்சின் ஆற்றல் சக்கரங்களுக்கு கடத்தப்படும்.

மைலேஜ்
மைலேஜ் விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், இந்த கார் வெறும் 794 கிலோ மட்டுமே எடை கொண்டது என்பதால் நிச்சயம் அதிக மைலேஜை வழங்கும் என எதிர்பார்க்கலாம். மாருதி எர்டிகாவைவிட இந்த கார் 386 கிலோ எடை குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

பலே டட்சன்
இந்த எம்பிவி காரில் 13 அங்குல ரிம் மற்றும் 155/70 டயர்கள் பொருத்தப்பட்டிருக்கும். சிறிய வடிவிலான இந்த சக்கரங்கள் மூலம் உற்பத்தி செலவீனம் குறைவாக இருக்கும். இதுபோன்ற விஷயங்களால், இந்த காரை மார்க்கெட்டிலேயே மிகக் குறைந்த விலை கொண்ட எம்பிவி காராக நிலைநிறத்தும் வாய்ப்பு டட்சனுக்கு கிடைத்துள்ளது.

4 மீட்டர் எம்பிவி
7 பேர் அமர்ந்து செல்லும் வசதி கொண்ட இந்த எஸ்யூவி வெறும் 4 மீட்டருக்குள் சுருக்கப்பட்டுள்ளது. இந்த எம்பிவி கார் 3,995 மிமீ நீளமும், 1,635 மிமீ அகலமும், 1,485 மிமீ உயரமும் கொண்டது. தவிர, 2,450 மிமீ வீல் பேஸ் கொண்டிருப்பதால் உட்புறத்தில் நல்ல இடவசதியை அளிக்கும்.

வண்ணங்கள்
இந்தோனேஷியாவில் ரெட்டிஷ் கோல்டு, ஒயிட் சாலிட், சில்வர் மெட்டாலிக், கிரே மெட்டாலிக் மற்றும் பிளாக் சாலிட் ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை
இந்திய மதிப்பில் ரூ.5 லட்சம் விலையில் அங்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில் முதலில் டட்சன் கோ ஹேட்ச்பேக் காரும், அதைத் தொடர்ந்து கோ ப்ளஸ் எம்பிவி காரும் விற்பனைக்கு வர இருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும் ரூ.5 லட்சம் விலையில் இந்த புதிய எம்பிவி கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








