அடுத்து ரூ.2 லட்சத்தில் புதிய கார்... தலையில் முண்டாசு கட்டிய டட்சன்!!
அடுத்த ஆண்டு கார் மார்க்கெட்டில் டட்சன் பிராண்டு மிக முக்கிய சக்தியாக உருவெடுக்கும் என தெரிகிறது. டட்சன் கோ ஹேட்ச்பேக் காரை தொடர்ந்து, அடுத்த இரு குறைந்த விலை கார் மாடல்களை அறிமுகம் செய்யப் போவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
டட்சன் பிராண்டில் வரும் கார் மாடல்கள் அதன் ரகத்தில் குறைவான விலை கொண்டதாக இருக்கும் என்பதால் மார்க்கெட்டில் கடும் போட்டியை கொடுக்கும் என்று தெரிகிறது.

புதிய மாடல்கள்
கோ ஹேட்ச்பேக் காரைவிட குறைவான விலை கொண்ட புதிய குட்டிக் காரையும், கோ ப்ளஸ் எம்பிவி காரையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக நிசான் மோட்டார் இந்தியா துணைத் தலைவர் அஜய் ரகுவன்ஷி தெரிவித்துள்ளார்.

விலை
டட்சன் கோ ஹேட்ச்பேக் காரின் டாப் வேரியண்ட் ரூ.4 லட்சத்திற்குள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பேஸ் மாடல் விலை ரூ.3.25 லட்சத்தில் இருக்கலாம். இதைவிட குறைவான விலையில் புதிய கார் வர இருக்கிறது. இது ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சத்திற்குள் விலை கொண்டதாக இருக்கும்.

குட்டி கார்
புதிய குட்டி கார் தற்போது ஐ2 என்ற குறியீட்டு பெயரில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. மாதத்திற்கு சராசரியாக 8,000 முதல் 9,000 கார்களை விற்கும் இலகுக்குடன் இந்த கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அறிமுகம் எப்போது?
கோ காரை தொடர்ந்து, அடுத்த ஆண்டு மத்தியில் கோ ப்ளஸ் எம்பிவி கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, 2015ம் ஆண்டு இறுதியில் அல்லது 2016ம் ஆண்டில் புதிய குட்டி கார் அறிமுகம் செய்யப்படும்.

காம்பெக்ட் செடான்??
கோ ஹேட்ச்பேக் கார் அடிப்படையிலான புதிய காம்பெக்ட் செடானையும் அறிமுகம் செய்ய டட்சன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அப்படியொரு திட்டம் இப்போது இல்லை என டட்சன் தெரிவித்துள்ளது.

டீலர் எண்ணிக்கை
டட்சன் கார்கள் முதலில் நிசான் டீலர்ஷிப்புகளில் விற்பனை செய்யப்பட உள்ளது. பின்னர், டட்சன் கார்களுக்கான பிரத்யேக ஷோரூம்கள் அமைக்கப்பட உள்ளன. நிசான், டட்சன் கார்களின் விற்பனையை ஹோவர் ஆட்டோமோட்டிவ் கையில் வைத்துள்ளது. அடுத்த இரு ஆண்டுகளில் மொத்த டீலர்ஷிப்புகளின் எண்ணிக்கையை 350 ஆக அதிகரிக்க இருப்பதாக ஹோவர் ஆட்டோமோட்டிவ் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








