டீசல் விலை உயர்வு எதிரொலி: சூடுபிடித்த பெட்ரோல் கார் விற்பனை
மாதாமாதம் தவணை முறையில், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதன் எதிரொலியாக, பெட்ரோல் கார் விற்பனை சூடுபிடித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோல் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருவதால், டீசல் கார் விற்பனை ராக்கெட் வேகத்தில் எகிறியது. இதனால், டீசல் கார் உற்பத்திக்கு கார் தயாரிப்பாளர்கள் முன்னுரிமை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மாதாமாதம் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால், பெட்ரோலுக்கும், டீசலுக்கும் இடையிலான விலை உயர்வு வித்தியாசம் வெகுவாக குறைந்து வருகிறது.
இதன் எதிரொலியாக தற்போது பெட்ரோல் கார் விற்பனை சூடுபிடித்துள்ளது. அதிக அளவில் முன்பதிவு செய்யப்படுவதால் பெட்ரோல் கார்களுக்கான காத்திருப்பு காலமும் அதிகரித்து வருகிறது.
பெட்ரோல் கார் உற்பத்தியை முழுவதுமாக குறைத்து வைத்திருந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது பெட்ரோல் கார் உற்பத்தியை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரலில் விற்பனையான மொத்த கார்களில் 57 சதவீதம் பெட்ரோல் மாடல் கார்களே விற்பனையாகியுள்ளதாக கார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரலை ஒப்பிடுகையில், இது 4 சதவீதம் கூடுதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக பெட்ரோல் கார் விற்பனை அதிகரித்து வருவதாக ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு மூத்த துணைத் தலைவர் ராகேஷ் வத்சவா தெரிவித்தார். அதேவேளை, சிறந்த பெர்ஃபார்மென்ஸ், அதிக மைலேஜ் மற்றும் மார்க்கெட்டிங் யுக்தி போன்ற காரணங்களால் டீசல் கார் விற்பனையும் ஸ்திரமாக செல்லும் என்று அவர் கூறினார்.
கடந்த சில மாதங்களாக பிரியோ, சிட்டி கார்களின் உள்ளிட்ட பெட்ரோல் கார்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக ஹோண்டா கார் நிறுவனத்தின்அதிகாரி ஞானேஸ்வர் சென் கூறியிருக்கிறார். கடந்த ஆண்டு 62 சதவீதமாக இருந்த பெட்ரோல் கார் உற்பத்தி இந்த ஆண்டு 65 சதவீதமாக அதிகரிக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








